இலட்சிய வரலாறு/சூட்சுமம் இதுதான்

சூட்சுமம் இதுதான் !

புதிதாக, நமது இயக்கப் பிரச்சினை களைக் கேள்விப்படும் சில நண்பர்கள், பார்ப்பனர்களை, நாம் அவசியமற்றுக் கண்டிக்கிறோம் என்றும், அவர்கள், சமூகத்திலே மிகமிகச் சிறுபான்மையோராக இருக்கிறார்கள், அப்படியிருக்க அவர்களை ஏன் 'சதா சர்வகாலமும் தூற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கேட்கிறார்கள்.

இது, நமது இயக்கத்துக்குப் பழைய கேள்வி-மிகமிகப் பழைய கேள்வி. ஆனால், கேட்பவர்களிலே பலர், இயக்கத்துக்குப் புதிய 'வரவு' எனவே அவர்களின் கேள்வி, உண்மையிலேயே, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளக் கேட்கப்படுவதேயாகும். அவர்களின் சந்தேகத்தைப் போக்க வேண்டியது நமது கடமையுமாகும். முதலில் அந்த நண்பர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம், நாம் பார்ப்பனர் என்ற ஆட்களை அவர்களின் வகுப்புக் காரணமாக, விஷமத்துக்காகக் கண்டிக்கிறோம் என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். நாம் கண்டிப்பது பார்ப்பனியம் எனும் ஒரு முறையே.

அதன் ஆரம்ப கர்த்தாக்களாகவும், காவலர்களாகவும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்— பார்ப்பனரல்லாதாரிலே பலர் இதற்கு ஆதரவாளர்களாக உள்ளனர்.

ஆகவே, நமது கண்டனம், பார்ப்பனியத்துக்கே யாகும். இனிப், பார்ப்பனர், மிகச் சிறுபான்மை தானே! அவர்களைக் கண்டிக்க வேண்டியதும், அவர்களின் முறையைக் கண்டிக்க வேண்டியதும், அவசியந்தானா என்று கேட்கப்படுவதைக் கூர்ந்து கவனிப்போம். பிரச்னை, மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனித்தால் விளங்காது. அந்தப் பார்ப்பனியம் எனும் முறைக்கு நாட்டிலே உள்ள செல்வாக்கின் அளவே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியதாகும். அப்படி கவனித்தால் ஐயர், ஐயங்கார், சர்மா போன்ற பார்ப்பனர்களோடு இது நின்று விடுவதாக இராமல், பார்ப்பனரல்லாதாரில் பலருக்கும் 'சொந்தமான' பிரச்னையாகிவிடக் காணலாம்.

ஒரு முறையைக் கவனிக்கும் போது, அதனை உற்பத்தி செய்த மக்களின் எண்ணிக்கையை மட்டும் கவனிப்பது போதாது — அந்த முறைக்கு நாட்டிலே ஏற்பட்டுள்ள செல்வாக்கின் அளவே முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டும். அப்போது அந்தப் பிரச்னையின் முழு உருவமும் தெரியும்.

பார்ப்பனரிடம் ஏனய்யா பயம் ? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு ? அவர்கள் 100-க்கு 3 பேர் தானே ! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ! (மைனாரிட்டி) சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும் பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு, பாதுகாப்புக் கோரவேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம், தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக்கொள்வர் அத்தோழர்கள்.

சமூகத்தைக் கவனித்தால், பார்ப்பனர் சிறு தொகையினர்.

பார்ப்பன ரல்லாதாரின் மூச்சு, பார்ப்பனரைத் திணறவைக்கும். அவ்வளவு அதிக எண்ணிக்கை யுள்ளவர்கள் தான் பார்ப்பனால்லாதார். ஆனால், பார்ப்பனியம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல ! இதுவரை அதற்குப் பலவழிகளிலும் தரப்பட்ட படைபலத்தைப் பொறுத்திருக்கிறது

ஊரே அஞ்சும் படியான வீரர் தான், ஆனால் அவன், மயங்கும் வேளையிலே, மந்திரக்காரன் கையிலுள்ள சிறு வேப்பிலைக் கொத்துக்கு அஞ்சுகிறான். அந்த இலைக்கும், மந்திரக்காரனுக்கும் இருப்பதாகக் கற்பிக்கப்பட்டிருக்கும் மகத்துவந்தான் வீரனும் அஞ்சும்படியான நிலையை உண்டாக்குவதற்குள்ள காரணமாகும். அதைப் போலப் பார்ப்பனர் சிறு தொகையினராக இருப்பினும்,மோட்ச, நரகத் திறவு கோலும், ஆண்டவன் அருளை அளக்கும் அளவு கோலும், அவர்களிடம் இருப்பதாகவும், பிற சமூகத்தினரின் சேவையைப் பெறுவது, அவர்களின் பிறப்புரிமை என்றும், அவர்களின் திருப்தி ஆண்டவனுக்கே திருப்தி அளிக்குமென்றும், எண்ணற்ற ஏடுகள் எழுதப்பட்டுப், பன்னெடு நாட்களாக மக்கள் இரத்தத்திலே அந்த எண்ணம் கலக்கப்பட்டு விட்டதால் அந்தச் சமூகத்திற்கு, எண்ணிக்கைக்குத் துளியும் பொருத்தமில்லாத அளவு, அமோகமான செல்வாக்கு வளர மார்க்கம் ஏற்பட்டிருக்கிறது.

கடிவாளம் சிறியது; ஆனால் குதிரை அதனிடம் படும்பாடு யாவரும் அறிந்தது தான் ! மூக்கணாங்கயிறு தனது வால் பருமன் கூடத்தான் இல்லை. ஆனால், மாடு அதனிடம் அகப்பட்டால் அடங்கித்தான் விடும்! அதைப்போலச், சிறிய

சமூகமாயினும், அதற்கு ஏதேதோ மகத்துவத்தைக் கற்பித்து விட்டால், பிறகு அந்தச் சமூகத்தவரின் செல்வாக்கு நிச்சயம் வளரும். ஊரின் மீது ஒரு ஆகாய விமானம் வட்டமிட்டால், 9000 பேர் இருப்பினும் ஊரார் அஞ்சுகின்றனர். ஏன்? ஆகாய விமானத்திலிருந்து வெடிகுண்டு வீசப்படும் என்று தெரிந்ததால். இதனால் தான், பார்ப்பனியம் எனும் பிரச்னை, கண்டிக்கப்பட வேண்டியதாகிறது.

"பார்ப்பனர்களை ஏனய்யா கண்டிக்க வேண்டும் ?" என்று எத்தனையோ பார்ப்பனரல்லாதாரைக் கேட்கச் செய்யும் அளவு, அந்த பார்ப்பனியத்துக்குச் 'சக்தி' ஏற்பட்டிருக்கிறதல்லவா? பார்ப்பனியத்தைக் கண்டிக்கும் போது, அனந்தாச்சாரிகள் கூடச் சும்மா இருப்பர், அவினாசிகளல்லவா ஆத்திரப்படுகின்றனர்.ஏன்? அதுதான் சூட்சுமம். மிகமிகச் சிறுபான்மையோராக இருப்பினும் அவர்களின் முறை, அவ்வளவு பரவிச் செல்வாக்குப் பெற்றிருக்கிறது, எனவே தான், நமது இயக்கம், அந்தப் பிரச்னையை முக்கியமானதாகக் கருதுகிறது. இதுவரையிலே, பார்ப்பனியத்துக்கு, நாம் உண்டாக்கிய எதிர்ப்புக்கு, மறுப்பும், எதிர்ப்பும், பார்ப்பனரிடமிருந்து கிளம்பியதைவிட, நம்மவர்களிடமிருந்தே அதிகம் கிளம்பிற்று. அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு முறையைக் கண்டிப்பது, வீண் வேலையாகுமா? அந்த அளவு செல்வாக்குடன் உள்ள ஒரு முறையை, எதிர்க்க, நாம் துணிவுடன் பணியாற்றுவது, அவசியமற்றதாகுமா என்பதைக். கேள்வி கேட்கும் நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.