இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 10

10

‘கம்பவுண்டர்’ மணி, திருவள்ளூர் டாக்டரைப் பற்றிச் சொன்னது, ஒரு குறைந்த மதிப்பீடு என்பதை அவரிடம் போய்விட்டு வந்தவர்கள் நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்கு வரும்போதே அவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். படுக்கையறைக்குள் புரண்டு கொண்டிருந்த மணிமேகலை, தன் குழந்தையைப் பார்ப்பதற்காக வெளியே ஓடி வந்தாள். ராமபத்திரன் அவளைப் பார்த்ததும் பேச்சின் ஒலியைக் கூட்டினார்.

“பாத்தியளா, நான் சொன்னபடியே டாக்டர்கிட்ட காட்டுனது நல்லதாப் போச்சி பாத்தியளா ! நீங்க, இவளுக்கு வந்தத லேசா நினைச்சதுக்கு எப்படி கண்டிச் சாரு பாத்தியளா?”

மாமியார்க்காரி தம்பிக்கு தவிலடித்தாள்.

“இனிமேயாவது ஒன் பேச்ச இவங்க கேட்காங்களான்னு பார்ப்போம். ஒன் பேச்ச மட்டும் முதலுலயே கேட்டிருந்தா இந்த கதிக்கு வந்திருக்காண்டாம்.”

“அதுக்காக பதினைந்து நாளைக்கு ஒரு தடவ, எல்லாரும் போய் உடம்பக் காட்ட முடியுமா? எவ்வளவு கஷ்டம்?”

“என்ன பாமா அப்படிச் சொல்லிப்பிட்டே? பேய்க்கு வாழ்க்கப்பட்டால் புளிய மரத்துல ஏறி ஆகணும். நல்ல வேள இப்போ இல்ல. இருந்தாலும் டாக்டர் வைட்டமின் மாத்திரை சாப்பிடச் சொல்லியிருக்கார் பாரேன். பணத்த பார்த்தால் முடியுமா?”

“நாங்க பணத்த பாக்கல, அலைச்சலத்தான் பாக்கோம்.”

“என்ன செய்யுறது? ஒரு ஆளுக்கு ஒண்ணு வந்துட்டா, ஒன்பது பேருக்கு பார்க்க வேண்டியதிருக்கு காலத்தோட கோளாறு.”

எல்லோரும், அந்த ‘ஒரு ஆளையே’ பார்த்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்கள். வசந்தியும் வந்திருந் தாள். அவளும் தன் பாட்டுக்கு “மாமாவயும் காட்டணும்; அவரு இருக்கிறதைப் பார்த்தால், எனக்குச் சந்தேகமாய் இருக்கு” என்றாள் அந்த சந்தேகத்திற்குரியவள்.

கணவனின் தோளில் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் மணிமேகலை. அவன் ‘அம்மா. அம்மா...’ என்று சொல்லி, அவள் கழுத்தைச் சுற்றி, கைகளைக் கோர்த்துக்கொண்டு, சங்கிலிப் பிடியை இறுக்கினான். நசுக்கப் போகும்போது, கட்டிலோடு கட்டிலாக ஒட்டிக் கொள்ளுமே மூட்டைப் பூச்சி—தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பந்துமாதிரி சுருட்டிக் கொள்ளுமே முள்ளெலி—அந்த மூட்டைப் பூச்சிபோல், முள்ளெலி போல் தன்னைச் சுருட்டி அம்மாவைப் பிடித்துக் கொண்டான். ‘இனிமேல் என்னை விடாதம்மா... நான் ஒனக்குப் பிடிக்கலியா’ என்று சொல்வது போலிருந்தது அந்தப் பிடி. ‘நான் உன்னை மட்டுந்தான் பார்ப்பேன்’ என்று சொல்லியது அப்பார்வை.

மணிமேகலை, ஒட்டிய குழந்தையுடன் ஒட்டிக் கொண்டு படுக்கை அறைக்கு வந்தாள். யாரும் அவளிடம் பேசவில்லை. இந்திரா மட்டும் சங்கரனை ஜாக்கிரதை யாகப் பார்த்துக்கொண்டே, அண்ணியின் கையை ரகசியமாகப் பிடித்தாள்.

படுக்கை அறைக்கு வந்த ஜெயராஜ், ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு பெட்ஷீட்டை எடுக்கப் போனான். மணிமேகலை புரிந்துகொண்டாள். அவன் கையிலிருந்து அதை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு கட்டிலில் படுக்கப் போட்டிருந்த பையனைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு வெளியே வந்தாள். ஜெயராஜ் உள்ளேயே இருந்தான். இப்போது காற்று அங்கே நல்லா வீசுதாம்.

வராந்தா பக்கம் வந்து சிறிது தயங்கிய மணிமேகலை, வீட்டு காம்பவுண்ட் சுவர் மூலையில் இருந்த அறையை நோக்கிப் போனாள். முன்னாளைய சமையலறை. வீட்டுக்கு ‘கேஸ்’ வந்த பிறகு, தட்டுமுட்டுச் சாமான் களோடு உபயோகமில்லாத பொருட்கள் உள்ள அறை. மணிமேகலை, அந்த உபயோகமில்லாத பொருட்களை ஒரு ஓரத்தில் குவித்துவிட்டு தானும் தன் மகனுமாக இன்னொரு மூலையில் போய் படுத்துக் கொண்டாள். அவளுக்கு அழுகை வரவில்லை. உணர்வு உள்ளோருக்கே அழுகை வருமாம்.

நாட்கள் நகர நகர, மணிமேகலை அவர்களிடம் இருந்து நகர்ந்தாளோ இல்லியோ நகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தாள். டாக்டரிடம் இருந்து வரும்போது, இழவு விழுந்தது போல் வந்தவர்கள், இப்போது அவளையே இழவெடுக்கத் துவங்கினார்கள். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவையும், விதவிதமான கலர் மாத்திரைகளோடு வரும் அவர்கள், அவளையும் விதம் விதமாக அதம் செய்தார்கள்.

ஒருநாள், இந்திரா கிசுகிசுத்தாள்.

“அண்ணி! ஒங்க தட்டைப் பார்த்திங்களா?”

“அதுக்கென்ன ? நானே அத நல்லாக் கழுவி வைக்கனே!”

“அதுக்குச் சொல்லல அண்ணி. சாப்பிடும்போது, தட்டை கவனிச்சிங்கன்னா தெரியும். ஒரே தட்டுதான், உங்களுக்கு எப்பவும் கிடைக்குது. புரியுதா?”

“புரியுதும்மா! நான் தனித்தட்டு. சாப்பிட்ட தட்டையாவது சரி பண்ணிடலாம். ஆனால் என்னைச் சரி பண்ண முடியாதுன்னு நினைக்காங்க.”

மணிமேகலை விம்மியபோது, இந்திரா கண்ணீர் விட்டாள். இன்னொரு நாள்—அவர்கள் திருவள்ளூர் போய்விட்டு வந்த ‘பொல்லாத’ நாள்.

உபயோகமில்லாத அறையில் படுத்துக் கிடந்த மணிமேகலை நள்ளிரவில் கண் விழித்தாள். குழந்தையைக் காணவில்லை. எங்கே போயிருப்பான்? குழம்பி, தாழ்ப்பாள் போட்டிருந்த வீட்டின் கதவைத் தட்டினாள். ஜெயராஜ்தான் கதவைத் திறந்தான்.

“என்ன விஷயம்?”

“குழந்தய காணும்!”

“காலையில பேசிக்கலாம். போய்த் தூங்கு."

“குழந்தய காலையில தேடலாமுன்னு சொல்றிங்களா?”

“அது ஒன் புத்தி. என்கூட படுத்திருக்கான்."

“ஜன்னல் வழியா பார்த்தேன். காணுமே.”

“உம். இங்கதான் இருக்கான்.”

“என் குழந்த எங்க இருக்கான்னு தெரிஞ்சிக்கது என் உரிமையா இல்லாம இருக்கலாம். ஆனால் கடமையா இல்லாம போயிடுமா?”

“குழந்த வசந்தாவோட தூங்குறான்.”

“குழந்த மட்டுந்தானே?”

மணிமேகலை, நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஜெயராஜ் அவளை முறைக்கவில்லை. அமைதியாகப் பார்த்தான், விவகாரத்தை அவளே புரிந்துகொண்டதில் அவனுக்கு சந்தோஷம். மணிமேகலை மீண்டும் பேசினாள்.

“என் பிள்ளய கொடுங்க.”

“அது எனக்கும் பிள்ளைதான்.”

“பரவாயில்ல. பிள்ளயாவது உங்களுடையதுன்னு நெனப்பிருக்கே”

“இந்தா பாரு மேகலா! எதுக்கு வீண் பேச்சு. எப்போ திருவள்ளுர் டாக்டர்கிட்ட ஒன்னை செக்கப் பண்ண கூப்பிட்டு, நீ வரமாட்டேன்னு சொல்லிட்டியோ அப்பவே ஒனக்கும் எனக்கும் சம்பந்தமில்லாம போயிட்டு.”

“நீங்க எனக்குல்லா நன்றி சொல்லணும். சாக்கு தேடிக் கொண்டிருந்த ஒங்களுக்கு தல்ல சாக்கு கொடுத்திருக்கேனே. திருவள்ளுர் டாக்டர் நல்ல மனுஷனில்லன்னு கேள்விப்பட்டேன். ராமபத்திர பெரியப்பா தூண்டுதலால எதையாவது செக் பண்ணாமலே தீர்மானம் செய்திடுவாரோன்னு பயந்தேன். வேற எந்த டாக்டர்கிட்ட வேணு முன்னாலும் போகலாமுன்னேன். நீங்கதான் கேட்கல.”

“பொறுப்பில்லாம பேசுறது எனக்குப் பிடிக்காது.”

“ஒங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காதுன்னு ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொடுத்தவளே நான். இப்போ நானே பிடிக்காமல் போயிட்டேன். அப்படியும் நான் பொறுப்பில்லாம இல்ல. நேற்று டாக்டர் குமரன் நர்ஸிங் ஹோமிற்குப் போனேன். கம்ப்ளீட்டர் சுகமாயிட்டதா சொன்னார்.”

“கைராசிக்காரர்.”

“ஓஹோ ராமபத்ர பெரியப்பா சொன்னத சொல்லிக் காட்டுறிங்க போலுக்கு. சரி உங்களுக்கு எதுக்கு வருத்தம்? நாளைக்கு மெட்ராஸ்ல ஜி. ஹெச்ல போய் செக்கப் பண்ணுவோமா?”

“பெட்ரோல் விற்கிற விலையில போயிட வேண்டியது தான்.”

“சரி! என் குழந்தய கொடுங்க.”

“வேற பேச்சுப் பேசு!”

“சரி! கொண்டுவந்து கண்ணுலயாவது காட்டுங்க”

“நான் கொலைகாரன்; கொன்னுப்புட்டேன். சரி போ! எனக்குத் துரக்கம் வருது. நீ போடுற சத்தத்துல, மற்றவங்க தூக்கம் கலைஞ்சிடப் போவுது. பிறத்தியாருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது.”

“சரி நான் ஒங்களுக்கு சிரமம் கொடுக்கல. குழந்த நடுராத்திரில அம்மான்னு கூப்பிடுவான். தோளோடு தோள ஒட்டிப் படுப்பான். முன்னங்கையை ஊன்றி மோவாய அதுல வைத்து அம்மா படுத்திருக்காளான்னு பார்த்துட்டு அப்புறமாய் படுப்பான். ஜாக்கிரதயா பார்த்துக்கங்க. அப்புறம் ஒண்ணு, அவன் நம்ம பையன். நமக்கு மத்தில தூங்குனவன். ஒங்ககூட மட்டுமாவது படுக்கட்டும். பிறத்தியார்கிட்ட போடாதிங்க”

“அவள் பிறத்தியார் இல்ல. என் தாய் மாமா மகள்!”

மணிமேகலை தயங்கிக்கொண்டே, படியிறங்கினாள். உள்ளே போன ஜெயராஜ் ‘கொஞ்சம் நில்லு’ என்று அங்கிருந்தே குரல் கொடுத்தான். மணிமேகலைக்கு சந்தோஷம். குழந்தையைக் கொடுக்க வருகிறார். என் மகனை என்னிடம் தர வருகிறார்.

ஜெயராஜ் குழந்தைக்குப் பதிலாக ஒரு பொட்டலத்தை நீட்டினான். அவளுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று நினைத்தவன்போல் பின்னர் அந்தப் பொட்டலத்தைப் பிரித்தான்.

கையுறைகள்!

ஜெயராஜ் விளக்கினான்.

“இனிமேல் இதைப் போட்டுக்க ஒனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது. சாப்பிடும்போது ஸ்பூனை வைத்து சாப்பிடு. குழந்தைக்கு முத்தம் கொடுக்காதே!”

மணிமேகலை போகுமுன்னாலேயே ஜெயராஜ் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு போய்விட்டான். நெற்றியைச் சுருக்கி கண்களை இழுத்துப் பிடித்துக் கொண்டே தன் அறைக்கு வந்த மணிமேகலை, தலையில் கை வைத்துக்கொண்டே தூங்காமலும், சுய உணர்வு இல்லாமலும் மூலையில் தன் மேனியைச் சாத்தினாள்.

நள்ளிரவில் பையன் அழுதான். வீல் வீலென்று கத்தினான். அந்த அழுகையில் சந்தோஷப்பட்டவள் தாய், பிள்ளையைக் கொடுத்திடுவாரு... கொடுத்திடுவாரு...

மணிமேகலை வீட்டின் முன்பக்கம் வந்தாள். வீட்டிற்குள் விளக்கு போடப்பட்டிருந்தது. வசந்தி குழந்தையை எடுத்து உடம்பைக் குலுக்கி, குழந்தையை குலுக்குகிறாள். குழந்தை இப்போது குலுங்கி அழுகிறது.

“அம்மா...ம்மா.அம்மா.கிட்ட அம்மா கிட்ட.”

திடீரென்று விளக்கு அணைகிறது. மணிமேகலை அனைந்த உள்ளத்துடன் தன் வசிப்பிடம் வருகிறாள். வாழ்விடத்தில் வசந்தி இருப்பதை எண்ணி எண்ணி தன் வசிப்பிடத்திலேயே அழுகிறாள். ஊமை அழுகை அது. ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வராமல், ரத்தத்தை சுண்டியிழுக்கும் நொண்டி அழுகை, குழந்தையும், அம்மாவுக்குப் போட்டியாக அழுகிறான்.

“அம்மாங்க... அம்மாங்க?” அம்மா எங்கே என்ற வார்த்தையை, குழந்தை கூட்டிச் சொன்னான் கழிக்கப்பட்ட அன்னையோ ஆவலுடன் குழந்தையுடன் கூட முடியாமல் தவித்தாள். கைகளை வயிற்றில் வைத்து அழுத்திக்கொண்டாள். குவிந்த உதடுகளை உள்நோக்கி விட்டுக்கொண்டாள்.

மறுநாள் காலையில் கணவனுக்குத் தெரியும்படியாக கையுறைகளைப் போட்டுக் கொண்டாள். அவள் கணவன் உட்பட அனைவருமே மானாதிமான மனிதாபிமானிகள். பையனை விட்டார்கள. அவன் பாய்ந்து வந்து, அவள் கால்களைக் கட்டிக்கொண்டான். அவள் அவனை வாரியெடுத்து வாய் முத்தம் கொடுக்கப் போனாள். ‘எதிர்வீட்டு’ ஜெயராஜ் முறைத்துப் பார்த்தான். “முத்தம் கொடுக்கல... நான் கொடுக்கல...” என்றாள் கணவனைப் பார்த்து.

பொழுது போய்க்கொண்டே இருந்தது.

இப்போதெல்லாம் ரமாவுக்கு அவள் பாடஞ் சொல்லிக் கொடுப்பதில்லை. அவளே ‘பாடம்’ படிக்கிறாளே. பிள்ளைகள் அவள் கண்முன்னாலயே “ஏய், இங்க புள்ளியிருக்கு. ஒனக்கும் இருக்கு” என்றார்கள். குழந்தையோ இரவில் அம்மாவைப் பார்க்க முடியாமல் போனதற்காக, அழுகையை நிறுத்தவில்லை. அவள், வீட்டுக்குள் போய் வந்துகொண்டுதான் இருந்தாள். யாரும் அவளைத் திட்டவில்லை. தனித்தட்டைக் கொடுத்து அவளை விசேஷமாகத்தான் கவனிக்கிறார்கள். பாமாவும் பார்த்ததும் புன்னகை செய்யத்தான் செய்கிறாள். லட்சுமி மங்களகரமாகத்தான் இருக்கிறாள். வசந்தியும் வந்து கொண்டுதான் இருக்கிறாள். மணிமேகலைக்கு எந்தக் குறையையும், யாரும் குறைவாக வைக்கவில்லை.

ஒருநாள் அந்த வீட்டுக் கிழவர் ஒரு புரட்சியை செய்தார். அதில் அதிகமாக ஆடிப் போனவள் மணிமேகலைதான்.

கிழவரை பாமா வந்து சாப்பிடக் கூப்பிட்டாள். ‘உம்’ என்றுதான் சொன்னார். லட்சுமி வந்து கூப்பிட்டாள். “சோறு வேண்டாம்” என்றார். சங்கரன் வந்து “பசிக்கலியா?” என்றார். “பசிக்குது. ஆனால் சாப்பாடு வேண்டாம்” என்றார், இறுதியாக கிழவி வந்தாள்.

“ஒமக்கு வாலிபம் திரும்புதாக்கும். கல்யாணமான புதுசுல எங்கய்யா வீட்டுக்கு தீபாவளிக்கு போயிருந்தப்போ, நல்ல வேட்டியா எடுக்கலன்னு சாப்பிடாமக் கிடந்திரே அந்த புத்தி வந்துட்டாக்கும்.”

“எனக்கு புத்தி வரவுமில்ல. போகவுமுல்ல. ஒங்களுக்குத்தான் ஒரு நாளைக்கி ஒம்பது புத்தி.”

“சரி சாப்பிட வாரும்.”

“சரி! மணிமேகலய சாப்பாடு கொண்டுவரச் சொல்லு.”

“ஒமக்கென்ன பைத்தியமா?”

“எதுக்கு அனாவசியமான பேச்சு. இனிமேல் இந்த கட்ட உயிரோட இருக்கது வரைக்கும், என்னோட இளைய மருமவள் கையாலதான் சாப்புடுவேன்.”

வேடிக்கை பார்ப்பதுபோல் சின்னவர்களும், வெகுண்டவர்கள் போல் பெரியவர்களும் அங்கே கூடினார்கள். கிழவர் வெகுண்டு பேசினார்.

“நானும் பார்த்துக்கிட்டுதான் வாரேன். கொடுமைக்கும் ஒரு அளவு வேண்டாமா ? அவளுக்கு நோய் சுகமாயிட்டு. முன்ன எப்படில்லாம் இருந்தாளோ, அப்படில்லாம் இருக்கலாமுன்னு குமரன் டாக்டர் சொன்ன பிறவும், நீங்க அவள தள்ளி வச்சா பூமி தாங்காது. மணிமேகல! பசிக்குது. சோறு கொண்டாம்மா! ஒன்னத்தான், நீ மட்டும் கொண்டு வரலன்னா இனிமே எப்பவும் சாப்புடமாட்டேன்.”

மணிமேகலை அந்த ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டவள் போல் சமையலறைக்குள் போனாள். பாத்திரங்களைக் கொண்டுவந்து சாப்பாடு போட்டாள். ரசத்திற்கு உப்பு கூடியிருக்க வேண்டும். ஏனெனில் அவள் கண்ணீர் அதில்தான் விழுந்தது.

அனைவரும் திகைத்து நின்றார்கள். கிழவர் சாப்பிட்டு முடித்ததும் மணிமேகலை “ஒங்களத்தான், ஒரு நிமிஷம் இப்படி வாரிங்களா” என்றாள்.

ஜெயராஜ் வந்தான். “இந்த நிலமயில நான் இங்க இருக்கது நல்லது இல்லன்னு நினைக்கேன். எனக்கும், ஒரு சேஞ்ஜ் வேணும். நாளைக்கு ஊருக்குப் போயிட்டு ஒரு மாசம் இருந்துட்டு வரலாமுன்னு நினைக்கேன்.”

ஜெயராஜ் பேசவில்லை. மனைவி போவதை பொறுக்க முடியுமா? ஆகையினால் தலையாட்டினான்.

“நாளைக்கே புறப்பட்டுப் போறேன். ஆனால் என் பையன் என்கிட்ட தந்திடனும். சரிதானே?”

இதுக்கும் தலையாட்டினான் ஜெயராஜ். பிறகு அவளைப் பாராமலே பேசினான்.

“காரு, ஒன்னால அண்ணன் கிட்ட போயிட்டு. மோட்டார் பைக் நாளைக்கு ஸர்வீஸ் போகுது.”

“பரவாயில்ல. நான் பஸ்ல போயிடுவேன். ஒங்களுக்கும் வேலயிருக்கும். ஸ்டேஷனுக்கு வர முடியாது. பிறக்கும் போது தனியாத்தானே பிறந்தேன். போகும்போதும் தனியாவே போறேன். சரி. போய்த் தூங்குங்க”

“நான் ஒண்ணும் உன்னை போகச் சொல்லல.”

“எனக்குத் தெரியாதா? நீங்க என்னைக்குமே என்னை வாயால போன்னு சொல்லமாட்டிங்க. நான் கொடுத்து வைத்தவள்.”

மறுநாள் மத்தியான வேளையில் மணிமேகலை புறப்பட்டாள். கையில் ஒரே ஒரு சூட்கேஸ்தான். எல்லோரும் மெளனத்தால் விக்கித்து நின்றார்கள். இந்திரா அழுது கொண்டிருந்தாள். அந்தக் கணத்தில் மட்டும் மனிதாபிமானம் வந்ததுபோல் அனைவரும் செயலற்று நின்றார்கள். வசந்திகூட கவிழ்ந்து பார்க்கவில்லை.

எல்லோரிடமும் பொதுப்படையாகப் பேசிவிட்டு, தனக்குள்ளேயே கோபப்பட்டவர் போல் வார்த்தைகளை பிறர் கேட்காதபடி குதப்பிக்கொண்டு சுவரில் சாய்ந்தபடி நின்ற மாமனாரின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள். கிழவர் குடும்பத்தினரைப் பார்த்து “பாமாவ அவள் போயிருக்கதால கேட்கிறேன். இவள்கிட்ட என்ன சொல்லி அனுப்பணும்? சொல்லுறியளா?”

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபோது, கிழவி ‘கொட்டினாள்’

“ஜெயராஜ்தான் அவஸ்தப்படுறான். என் மவளும் அவஸ்தப்படனுமா? கைகாலு குறஞ்சி போகனுமா?”

எல்லோரும் எப்படிச் சொல்வது என்று திகைத்ததை, யாராவது சொல்லட்டும் என்று எண்ணியதை கிழவி சொல்லிவிட்டாள். எல்லா விஷயங்களையும் ரத்னச் சுருக்கமாகச் சொல்லிவிட்டாள்.

மணிமேகலை பெட்டியைப் பற்றிக்கொண்டு, பையனைப் பார்த்தாள். அவனைக் காணோம். இப்போது தான் டிரஸ் பண்ணிவிட்டேன். எங்கே? எங்கே?...

ஜெயராஜ் அவள் பரபரப்புக்குப் பதில் கொடுத்தான்.

“வசந்தி எடுத்துட்டுப் போயிட்டாள். என் பிள்ளை அங்கெல்லாம் வரமாட்டான்.”

மணிமேகலை நிதானித்தாள். ‘பிள்ளையை கொடுய்யா...’ என்று ஏகவசனத்தில் கேட்கலாமா? வேண்டாம். அங்கே நிலைமை எப்படியோ? இவனாவது—இந்தத் தொடர்பாவது—இங்கே இருக்கட்டும்.”

மணிமேகலை சூட்கேஸுடன் நிமிர்ந்துகொண்டே, பாமாவைப் பார்த்து “பாமா! அந்த புளியமரம் வரைக்கும் வர்றியா?” என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பாராமல் நடந்தாள். இந்திரா, “அண்ணி! அண்ணி!” என்று கதறுவது கேட்காததுபோல் மனதைக் கல்லாக்கிக் கொண்டு நடந்தாள். திரும்பினால் அழுகை வரும். இவர்கள் முன்னால் அழக்கூடாது. கூடாது!

தன் வழியே நடந்துகொண்டிருந்த அவள் இன்னொரு நிழலும் தன் நிழலோடு இணைவதைப் பார்த்துத் திரும்பினாள். பாமா!

“பாமா! ஒன்கிட்ட கேட்க வேண்டியது என் கடமை என்கிறதுனால கேட்கிறேன். பழைய காதலை ஞாபகப் படுத்தல. இங்க... ஒனக்கு ஒங்க அம்மா பேசுவது புரிஞ்சிருக்கும். ஒன் மனச தெரிஞ்சிக்கலாமா?”

பாமா முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டே “பெரியவங்களோட இஷ்டம். அவர்களா பார்த்து, என்ன பண்ணுனாலும் எனக்குச் சம்மதம்தான். அப்புறம் எனக்கு ஒரு சின்ன உதவி செய்யணும்.”

"ஊர்ல இருந்து வந்த ஒரு மாதத்துக்குள்ள அவனுக்கு நீ எழுதின லட்டருங்கள வாங்கணும். அவ்வளவுதானே? நானே கொண்டு வரேன். நீயே கிழிச்சுடலாம். சரி, போம்மா !”

"நானும் அரக்கோணம் ஸ்டேஷன் வரைக்கும் வாரேன் !”

"வேண்டாம்மா. ஸ்டேஷனுக்கு வருவே!அப்புறம்

ரயிலுக்குள்ள வருவ! பிறகு ஒடுற ரயிலுல இருந்து குதிக்கப் பார்ப்பே வேண்டாம். போம்மா."

பாமா துணுக்குற்றவள்போல் சிறிது நின்றாள். மணிமேகலை அவளோடு நிற்காமல் தன் பாட்டுக்கு நடந்தாள். திடீரென்று ஒரு கார் தன்னருகே வந்து நின்றது. ஜெயராஜ், "வண்டில ஏறு. அரக்கோணம் ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு வந்து விடுறேன்..” என்றான்.

மணிமேகலை அவனையே பார்த்தாள். எதையோ சொல்லத் துடித்த உதடுகள், பிரியாமல் மடிந்தன. அவனை அனைத்த கைகள் ஆடின. ஒருகணம் ஒரே கணம்தான். பிறகு நிதானமாகச் சொன்னாள்.

"பெண்டாட்டி போகிற கவலையில உங்களால வண்டியை சரியா ஒட்ட முடியாது. நான் வாரேன். பிள்ளய மட்டும் நல்லா கவனிச்சுக்கங்க. அப்போ, நான் வரட்டுமா ?”

ஜெயராஜ், காரை ரிவர்ஸில் கோபமாக ஒட்டிய போது மணிமேகலை தாபமாக நடந்தாள். ஒருவேளை, கணவனிடம் அப்படிப் பேசியிருக்கக்கூடாதோ என்று கூட நினைத்தாள். ஏன் கூடாது? சென்னை வரைக்கும் வரக்கூடாதா? மோட்டார் பைக் சர்வீஸுக்கு போகுதாம். ஒருநாள் தள்ளி விடக்கூடாதா? இதுதான் அவருடைய சர்வீஸ், மொத்தம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறார். முன்ன  ஆயிரம் ரெண்டாயிரமுன்னு கொடுத்தாரே அப்படிக் கூட கொடுக்காண்டாம். செலவுக்கு போதும்படியாய் கொடுக்கப்படாதா? ஐம்பது ரூபாய்ல மெட்ராஸ் வரைக்கும் அஞ்சு ரூபா ஆயிடும். டிக்கட்டு முப்பத்தஞ்சு. மீதி ரூபாய்ல, தூத்துக்குடியில் இருந்து ஊருக்குப் போகணும். இடையில வேற சாப்புடனும். திரும்பி வாரதுக்கு பணம் கொடுக்கல. ஒரு வேள வரக் கூடாதுன்னே நினைக்காரோ? யார் என்ன நினைச்சு என்ன? என் நிலைமை இப்படி ஆயிட்டு.....

கையில் இருந்த சூட்கேஸைவிட, உள்ளம் கனக்க அவள் கனவேகமாக ரயில் நிலையத்திற்குள் போனாள். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. ஒரே கூட்டம். ஏற முடியவில்லை. இன்னொரு பாஸஞ்ஜர் ரயிலில் ஏறினாள். அது மயானப்புகைபோல், கங்குலைக் கக்கிக்கொண்டே புறப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவளுக்கே ஆச்சரியம். "லேடீஸ் கம்பார்ட்மெண்டில் இருந்த அவளை, 'கம்பவுண்டர்' மணி பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு வரவேற்றான். அவள் கீழே இறங்கியதும் "நீங்க எப்படி புறப்படுறிங்க, யாரோட வாரிங்கன்னு கவனிச்சுக்கிட்டே இருந்தேன். சீமாட்டியா வாழ்ந்த உங்கள பிச்சைக்காரியா அனுப்பிட்டாங்க. நீங்க தப்பா நினைக்கமாட்டீங்க என்கிற தைரியத்துல வந்தேன். அதோட மாத்திரை தீர்ந்திருக்கும். வாங்கிக் கொடுத்துவிட்டுப் போகலாமுன்னு வந்தேன்." என்றான்.

இருவரும் மெளனமாக நடந்தார்கள். எழும்பூர் ரயில் நிலையத்திற்கருகே வந்ததும், அவளை காபி சாப்பிடக் கூப்பிட்டான். அவள் மறுத்துவிட்டாள். பிறகு ரயில் நிலையத்தில் வெயிட் மிஷின் அருகே அவளை உட்காரச் சொல்லிவிட்டு மாயமாக மறைந்தான். பிளாட்பாரத்தில் கூட்டம் வழிந்து பொங்கியது. இவ்வளவு பெரிய கூட்டத்தில் எப்படி ஏறுவது என்று அவள் அல்லாடிக் கொண்டிருந்தாள். முன்பெல்லாம், முதல் வகுப்பில் போகும்படி கணவன் வற்புறுத்துவான். அவள்தான், 'ஸ்லீப்பர்' போதும் என்று வாதாடி வெற்றி பெறுவாள். இப்போ ரிசர்வ் கூட செய்யவில்லை.

மணிமேகலை கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, மணி ரிசர்வேஷன் டிக்கட்டோடு வந்தான். நூறு பேர் ‘வெயிட்டிங்' தவம் செய்த அந்த ஸ்டேஷனில் அவனுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது.

மணிமேகலை பர்ஸை திறந்து பணத்தை நீட்டினாள். அவன் வாங்க மறுத்தபோது, இவள் டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்தாள். மணிக்கு பணத்தை வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பெண்கள் கம்பார்ட்மெண்டில், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அவள், அவனையே பார்த்தாள். பாவம்! அரக்கோணத்தில் இருந்து வந்திருக்கார். மனிதர்கள் முழுவதும் சாகவில்லை. முற்றிலும் அழியவில்லை.

திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டவன் போல் 'அய்யய்யோ' என்று சொல்லிக்கொண்டே மணி வெளியே ஓடினான். பத்து நிமிடங் கழித்து திரும்பி வந்தான். ஒரு பாக்கெட்டை நீட்டினான். "இதுல மருந்திருக்கு. வேளா வேளைக்குச் சாப்பிடணும்.”

கன்னி கழிந்த குமரிபோல் சீரழிந்த பெட்டிகளை உள்ளடக்கிய துரத்துக்குடி எக்ஸ்பிரஸ் குரல் கொடுத்துக் கொண்டே நகர்ந்தது. ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு நகர்ந்த மணியின் கைகளைப் பிடித்துக்கொண்டு மணிமேகலை கண்களில் ஒற்றிக்கொண்டாள். பிறகு விம்மினாள். ரயிலும் விம்மிக்கொண்டே ஓடியது. மணி விலகிக் கொண்டான். கம்பார்ட்மெண்டில் இருந்த ஒரு கிழவி, இன்னொரு இளம் பெண்ணிடம் "பார்த்தியாடி புருஷன் பெண்டாட்டின்னா இப்படில்லா இருக்கணும். நீயும் இருக்கியே, ஒன் புருஷனும் இருக்கானே?" என்றாள்.

மணிமேகலை தலை நிமிர்ந்தாள். நிமிர்ந்த வேகத்திலே குனிந்தாள்.

அட கடவுளே! வீட்டுக்காரன் வெளியாளாய் மாறினால் வெளியாள் வீட்டுக்காரன் மாதிரி தெரியமோ?