இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 11
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இறங்கிய மணி மேகலைக்கு, ஏற்கனவே பார்த்திருந்த எல்லாப் பொருள்களும், எல்லா இடங்களும், இப்போது மாறுபட்டவையாகத் தெரிந்தன. அந்த ரயிலையும், அதனைச் சம்பந்தப்படுத்தி ஏற்பட்ட எண்ணமும்அதாவது அவளும், தம்பியும், வெங்கடேசனும் சிறுவர் சிறுமிகளாக இருந்தபோது விளையாடிய ரயில் விளையாட்டும், ரயில் சினேகிதம் போல் தோன்றியது. அந்த ரயிலைப் பார்த்தால், ஏதோ ஒரு அரக்கன்போல தெரிந்தது. பச்சைக்கொடி பாடை போலவும், ஜனநெரிசல், மனநெரிசல் போலவும் தோன்றின. முன்பெல்லாம் லெட்டர் போட்டுவிட்டு ஊருக்கு வரும்போது தம்பி வந்து வரவேற்பதும் புன்னகை தவழ புத்துலகுக்குள் நுழைபவள் போல அவள் ரயிலை விட்டு இறங்காமல் படியில் நின்றுகொண்டே தம்பியிடம் பேசுவதும் பழங்கதையாய் போனவள்போல் ரயில் பெட்டியில் இருந்து இறங்கினாள். ஒரேயடியாய் இறங்கிவிட்டாள். வெளியே வந்ததும் அனிச்சையாக 'டாக்ஸி' என்று வாயில் வந்த வார்த்தையை விட்டுவிட, உடனே அருகிலேயே ஒரு டாக்ஸி வந்து நின்றதும் என்ன செய்வதென்று புரியாமல் கைகளை நெறித்தபோது பார்வை மூலமே பர்ஸை புரிந்துகொள்ளும் டிரைவர் வண்டியை இன்னொரு பக்கமாக நகர்த்தினார். பழைய ஆட்டோ ரிக்க்ஷா டிரைவர்கூட அவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு பிறகு தன்னையே ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டார். 'அந்த அம்மாவா இருக்காது. அவங்க சிரிச்ச சிரிப்பென்ன, மங்கள லட்சுமி.மாதிரி பார்த்த பார்வை என்ன, இது ஏதோ ஏழைப்பொண்ணு! வரவர எனக்கு ஏன் கண் பார்வை குறையுது? புத்தி ஏன் பிசகுது: இந்தப் பொண்ணு அந்த அம்மாவா இருக்காது. இருக்கக்கூடாது!"
தூத்துக்குடி பஸ் நிலையத்தில் ஒரே கூட்டம் கட்ட பொம்மன் உட்பட, தனியார் பஸ்கள் வரை திருச்செந்தூர் டிக்கட்டுகளைத்தான் ஏற்றினார்களே தவிர, இடையேயுள்ள காயலையோ ஆத்தூரையோ கண்டுக்கவில்லை, திருவிழாக் கூட்டத்தில் இடையே உள்ள ஊர்கள் அவர்களைப் பொறுத்த அளவில் அன்றைக்கு இல்லை. இரண்டு மணி நேரம் கழித்து 'எப்படியோ வந்துட்டேன்' என்பதுபோல் வந்த டவுன் பஸ்ஸில் ஏறினாள்.
அவள் ஊருக்குள் வந்தபோது மாலை மயங்கிக் கொண்டிருந்தது. சூரியனை மலையென்னும் மலைப் பாம்பு கெளவிக் கொண்டிருந்தது போல் தோன்றியது. ஊருக்கு அகழிபோல் இருந்த ஒடைநீரைக் கடந்து, வாயில்புடவை பாதித் தலையை மறைக்க, கனமில்லாத சூட்கேஸ் வலதுகையைப் பிடித்திழுக்க, இடதுகை தலையில் குவிந்திருக்க, ஜனவாடை பட்ட முனைக்கு அவள் வந்தாள். தெருவோரத்தில் 'தெல்லாங் குச்சி' விளையாடிய பையன்கள், அவளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, "ஏய் அக்கா வந்துட்டா! மிட்டாய் கிடைக்குண்டா” என்று ஒரு காகம் இரையைக் கண்டதும், இதர காக்கைகளைக் கூப்பிடுவது போல, தொலைவில் 'பலீஞ் சடுகுடு விளையாடிய பயல்களைக் கூப்பிடுவது போல் கத்தினார்கள். "இந்தாங்கடா. இங்கயே வாங்கிக்கங்கடா..” என்று அன்று சொன்னவள், இன்று அவர்களைப் பாராததுபோல் ஒதுங்கிப் போனாள். திமிரைப் பாருன்னு பார்க்கிறவர்கள் சொல்வார்கள். சொன்னால் சொல்லிட்டுப் போகட்டும்!
பஞ்சாயத்து போட்ட புதிய குழாய்களில், பழைய' தண்ணீரைப் பிடித்துக்கொண்டு நின்ற பெண்களில் ஒருத்தி "என்னக்கா, காரு ஒடத்தண்ணில சிக்கி நின்னுட்டா?" என்று யதார்த்தமாகக் கேட்டபோது, அவள் அன்றைய யதார்த்தம் தாங்க முடியாதவளாய், கார் சிக்கல. நான்தான் சிக்கிட்டேன்' என்று தன்னளவில் சொல்லிக்கொண்டு அந்தப் பெண்களைப் பார்த்து, லேசாக சிரிக்க முடியாதபடி சிரித்து, வேகமாக நடந்தாள். எதிரே வெங்கடேசனின் அப்பா குமரேச மாமா வந்தார்.
அவர் அவளைப் பார்த்து, "எப்பம்மா வந்த ரயிலு லேட்டா வந்துதா? இல்ல, எங்கேயாவது விழுந்துட்டு வந்துதா? இப்பத்தான், நல்லா இருக்கதா நாம நினைக்கிற ரயிலும் தண்டவாளத்த விட்டு, தரையில ஒடுற காலமாச்சே!” என்று எதேச்சையாகக் கேட்டது இவளுக்கு அவர் தன்னை விழுந்துபோன ரயிலுக்கு ஒப்பிடுவதுபோல் பட்டது. அவரைப் பார்த்து விழித்துக் கொண்டே, அவருக்கு தன் நிலைமை புரியக்கூடாது என்பதுபோல், தனக்கே புரியாத ஒரு சில வார்த்தைகளைச் சேர்த்துக் குழப்பிப் பதிலாகச் சொல்லிவிட்டு, கிட்டத்தட்ட ஒடினாள். மீன்களைக் கூறுபோட்டு விற்கும் வீராசாமி, அதன் அருகிலேயே ஊரில் கிடைக்காத உருளைக்கிழங்கு, பீட்ரூட் கிழங்குகளை எடைபோட்டு விற்கும் மங்கம்மா முதலிய எளியவர்களிடங்கூட அவர்கள் பேசியும் பேசாமல் நடந்தாள். பாதையில் நடுவில் நடக்காமல் இருமருங்கும் இருந்த வீடுகளில் ஒரு மருங்கில் சுவரோடு சுவராக, தன்னை மறைத்துக்கொண்டு தணலைக் காலில் வைத்தவள் போல் அவள் நடந்தாள்.
வாழ்வோடு வரும் தான், வாழாவெட்டிபோல் வந்திருப்பது அங்கிருப்பவர்களுக்குத் தெரியவேண்டாம் என்பதற்காக அவள் தெரிந்த தலையை மூடி, நீண்ட கைகளை மடக்கி நிமிர்ந்த தலையை குனிந்து நடந்தாள்.
அப்படியும் அவளை அடையாளம் கண்டுகொண்ட இரண்டு கிழவர்கள் அவளைப் பார்த்து "லட்டர் வந்துதாமா?” என்றார்கள் 'துஷ்டிக்' குரலில். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது தெரியாமலே, ஆமாம். இல்ல' என்று இரண்டையும் சொல்லிக்கொண்டு அவள் நடந்த போது எதிரே வந்த தங்கம்மாக் கிழவி அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டே "பட்ட காலுலயே படுங்கறது சரியாப் போச்சே என் தங்கம் ! ஒனக்கா குஷ்டம் வரணும்? ஒனக்கா வரணும் ஒனக்கு வந்துதுன்னா யாருக்குத் தாம்மா வராது?" என்று முதுமைக் குரலில் முனங்கிய போது மணிமேகலை சிறுமைப்பட்டவள்போல் துடித்தாள். அவள் தன் நோயைப்பற்றி லட்டரில் எழுத வில்லை. அப்படி இருந்தும் பாட்டிக்கு எப்படித் தெரிந்தது? ஊர் விவகாரங்களின் துவக்கமே அவை முடிந்த பிறகுதான் இந்தப் பாட்டிக்குத் தெரியும். அப்படிப் பட்ட இந்தப் பாட்டிக்கு இது தெரிந்திருந்தால், ஊர் முழுவதும் தெரிந்திருக்கும். அட கடவுளே! குமரேச மாமாவுக்கு இளக்காரமா இருக்குமே! வெங்கடேசத்தான் நல்ல வேள, நாம இவள கட்டல'னு நினைச்சிருப்பாரே.
பாட்டி விடவில்லை. மூக்கைச் சிந்திவிட்டு, முழங்கையை துக்கிவிட்டு பெருவிரலை ஆட்டிக்கொண்டு "என் ராசாத்தி! பட்ட காலுலயே படுங்கறது சரியாய் போச்சே சரியாப் போச்சே! இந்தச் சமயத்துலயா ஒனக்கும் வரணும்?" என்று அவள் சொன்னபோது, நடப்பது தெரியாமல் நடந்து, கேட்பது தெரியாமல் கேட்டு, பேசுவது தெரியாமல் பேசி, எதிரே இருப்பவை கூட என்னவென்று தெரியாத பார்வையுடன் நின்ற மணிமேகலை சிறிது தன்வசமானாள். சிறிது சிந்தித்தாள். "பட்ட காலுலயே. இந்தச் சமயத்துலயா..." பாட்டி என்ன சொல்கிறாள்? மணிமேகலை ஊரில் கால்வைத்த பிறகு முதல் தடவையாக உணர்ந்து பேசினாள்.
"என்ன பாட்டி சொல்ற?" "என்னத்தச் சொல்ல ? சொன்னாலும் தீராது, சொல்லியும் மாளாது!"
"நான் கிடக்கேன் விடு. இங்கு என்ன நடந்தது? சொல்லு பாட்டி!"
"சொல்லித்தான் என்ன செய்ய? சொல்லாம என்ன செய்ய? ஒய்யா.எறும்ப பாத்தாக்கூட, மிதிக்காம விலகிப் போற மனுஷன்."
மணிமேகலை துடித்தாள்.
"ராசய்யா மாமா! நீங்களாவது சொல்லுங்களேன். பாட்டி என்ன சொல்றாள் ?”
"ஒனக்கு விஷயம் தெரியாதாம்மா ?” "எனக்கு எதுவுமே தெரியாது. சீக்கிரமா சொல்லும் மாமா"
"ஓங்க அப்பாவுக்கு வாதமா, ரத்தக் கொதிப்பான்னு தெரியல. போனமாசம் கைகாலு முடங்கிப் போச்சி. வாயும் கோணிப்போச்சி. ஒரு காலும், ஒரு கையும் சுத்தமா செத்துப்போச்சி. உடம்புல உயிரு இருக்கத, வயிறு மேலயும் கீழேயுமாய் போறத வச்சிதான் தெரிஞ்சிக்கிடலாம்." அவ்வளவுதான். ஒதுங்கி ஒதுங்கி நடந்துகொண்டிருந்த மணிமேகலை ஒடினாள். "அப்பா! அப்பா ! என்னப்பா! என்னை பெத்த என் அப்பா.." என்று கத்திக்கொண்டே பெரிய தெருவைக் கடந்து, காளியம்மன் சந்தைத் தாண்டி, தெற்குத் தெருவை விலக்கி, குட்டி எஸ்டேட்டாய் குலை தள்ளிய வாழைகளுடன் சற்று இலையுதிர்ந்து போன மாந்தோப்புக்கே மகுடம்போல் இருந்த வீட்டின் படிக்கட்டை மிதிப்பது வரைக்கும் அவள் ஓயாமல் ஓடினாள். சத்தம் போட்டுப் பேசுவதை அநாகரிகமாகக் கருதும் அவள் "அப்பா அப்பா" என்று ஐந்து வயதுக் குழந்தைபோல் கத்திக் கொண்டும், அறுபது வயது பாட்டி போல் தள்ளாடிக் கொண்டும் ஓடிவந்து, அப்பாவைப் பார்த்து, மூச்சைப் பிடித்தவள்போல், மூச்சு விட முடியாதவள் போல், திறந்த வாய் திறந்தபடி இருக்க, விழித்த விழி விழித்தபடி நிற்க, குவிந்த கை குவிந்தபடி இருக்க, அவள் அப்படியே நின்றாள். அப்பாவை வைத்த கண் வைத்தபடி பார்த்துக்கொண்டே நின்றாள்.
வராந்தாவை அடுத்து இருந்த அறையில் சிம்மாசனம் போலிருந்த கடைந்தெடுத்த தேக்குக் கட்டிலில் அவள் தந்தை மல்லாந்து படுத்துக் கிடந்தார். கண்கள் நிலைகுத்தி நின்றன. தோள் துவண்டிருந்தது. கை கால்கள் மடங்காமல், மடக்க முடியாதபடி மரக்கம்புகள் போல் கிடந்தன. உடம்பில் சூடு இருந்தாலும் உணர்வு இல்லை. மூச்சு மட்டும் கொல்லர் உலைபோல இழுத்து இழுத்து பெரிதாக வந்தது. உச்சந்தலை தலையணையில் பதிய, மோவாய் முன்னால் தூக்கி நின்றது. வேட்டி முழுவதும் நனைந் திருந்தது. வாயில் கொசுக்கள், கண்ணிலும் கொசுக்கள்.
கடந்த ஒரு மாத காலமாக உயிரே இல்லாதது போல் ஆடாமல், அசையாமல் உணர்வற்றுக் கிடந்த அந்த ஜீவன் எதிரில் யார் நின்றாலும் பாராததுபோல் தோன்றிய அந்த முதிய உயிர், இப்போது மகளை அடையாளம் கண்டுகொண்டதுபோல் 'ஆ.ஆ..' என்று எழுத முடியாத ஒரு ஒசையை மாபெரும் இலக்கியம்போல் வெளியிட்டது. மகளை பாதாதிகேசம் பார்ப்பது போல, அந்தக் கண்கள் மேலும் கீழுமாக நகர்ந்தன. பிறகு பக்கவாட்டில் உருண்டன.
ஆங்....ஆங்....ஆங்...
என்ன சொல்கிறார்? எதைச் சொல்ல விரும்புகிறார்?
'வந்துட்டியா மகளே என்கிறாரா? இனிமேல் நிம்மதியாய்ச் சாவேன் என்கிறாரா? என்னை இப்படி விட்டுட்டு எப்படிம்மா போவேன்னு சொல்கிறாரா? 'சுகமாயிட்டுன்னு ஒரு சொல் சொல்லும்மா, நான் மகமாயிகிட்ட போறேன்னு சொல்லப் பார்க்கிறாரா? அவளைத் தோளில எடுத்த கை-தூளியிலே போட்ட கை-'கைகொடுக்காமல்' போய்விட்டதே என்று கலங்குகிறாரா? இப்போது ஏன் வாசல்படியில் நிற்கும் மகன்களைப் பார்த்துட்டு மகளைப் பார்க்கிறார்? அவளை கை விட்டு விடாதீங்கடா என்கிறாரா? வந்ததே வந்துட்ட, என்னை எமன் வந்து கூட்டிக்கொண்டு போவது வரைக்கும் இங்கேயே இரு மகளே என்கிறாரா? கவலப்படாதே கண்மயிலே! நான் செத்து மடிந்தாலும், சிவலோகம் போகாமல் ஒன்னையே சுத்திக்கிட்டு இருப்பேன்னு இதயம் நினைப்பதை எடுத்தியம்பப் பார்க்கிறாரா? என்ன சொல்கிறார்? எதைச் சொல்லப் பார்க்கிறார்!
ஆங்...ஆங்...ஆங்...
சுற்றி நின்ற கூட்டம், மணிமேகலையையும் அந்த மாளாத பிணத்தையும் மாறி மாறிப் பார்த்தார்கள். யாருக்கும் பேச நாவில்லை. அவர்களே ஆறுதல் வேண்டுபவர் போல் அனாதரவாய் நின்றார்கள். கடைசியில் காத்தாயிதான் வெடித்த விம்மலைப் பிடித்துக் கொண்டே பேசினாள்.
"ஒங்க வீட்டுக்காரரோட தாய்மாமனா அந்த மனுஷன்? அவன் நாய் மாமன் ! ஒங்களுக்கு குஷ்டம் வந்துட்டதா ஊரு முழுக்கும் தமுக்கு அடிச்சது மாதிரி பேசுனதோட, இந்த மவராசனுகிட்டயும் 'இனுமே நீங்க தேருறது கஷ்டம் கைய அரிச்சிட்டு, காலு விரலு மடங்கிட்டுன்னு, ஒரு நாளைக்கி ஒம்பது தடவ சொல்லிட்டுப் போயிட்டாரு. அவரு கையில கரையான் அரிக்க வாயில குஷ்டம் வர, அந்தப் பாவி எந்த நேரத்துல சொன்னானோ, அந்த நேரத்துல இருந்து ஒரு வாரம் வரைக்கும் இந்த மவராசன் உண்ணாம திங்காம பயித்தியம் பிடிச்சவரு மாதுரி அலஞ்சாரு. கடைசியில, ஒரு நாளு கை காலு இழுத்து இப்படிப் போயிட்டாரு."
காத்தாயியின் தழுதழுத்த குரலில், எல்லோரும் கிறங்கிப்போய், அந்தக் கிழவரையே பார்த்தார்கள். அவரோ, காணாததைக் கண்டுவிட்டவர்போல் மகளையே பார்த்தார். மகளோ.
திடீரென்று, அப்பாவின் கால்களைப் பிடித்துக் கொண்டே கதறினாள். அவர் கன்னத்தில் முத்தமிட்டு கட்டிலோடு கட்டிலாக அவரை அணைத்து அப்பா அப்பா' என்று வானம் விழும்படி பூமி பிளக்கும்படி கத்தினாள். "ஒங்களுக்காப்பா. ஒங்களுக்காப்பா இப்படி வரணும்?" என்று சொல்லிக்கொண்டே, பெற்றவனை தன் மடியில் வைத்துக்கொண்டே மருவினாள்.
இறுதியில் தங்கம்மா பாட்டி "எழுதாக் குறைக்கி அழுதா முடியுமா? எப்படியோ ஒய்யாவ நீயும் பார்த்துட்ட அவரும் ஒன்னப் பாத்துட்டாரு. இனும ஆண்டவன் விட்ட வழி!” என்று சொன்னபோது, கிழவரின் பொட்டல் கண்களில் பாலைவன நீரூற்றுப் போல் ஒரு துளி துளிர்த்தது, மணிமேகலையின் வாயில் விழுந்தது.
மணிமேகலை தன்னை அடக்கிக்கொண்டு அப்பாவை கட்டிலில் உட்கார வைத்துவிட்டு சற்று விலகி நின்று, அவர் முன்பு உட்காரும் நேர்த்தியை இப்போது கற்பனை செய்து, அதுவே சூன்யமாக அந்த சூன்யத்தின் சூடு தாங்காதவள்போல் சிறிது இடம் பெயர்ந்து தன்னை ஈன்றவனை-தானாக விழுந்தவனை பார்த்துக்கொண்டே நின்றாள்.
கட்டிலில் நிமிர்த்தி வைக்கப்பட்ட அந்த உருவம், கொஞ்சங் கொஞ்சமாக அங்குலம் அங்குலமாக பின்நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. மணிமேகலை பதைபதைத்து, அப்பாவைக் கட்டிலில் கிடத்தப் போனாள். அப்போது அண்ணிக்காரி குறுக்கிட்டு, "நீ சும்மா இரு. கீழ விழமாட்டாரு. கொஞ்சம் கொஞ்சமாய் சாஞ்சி விழுறது தெரியாமலே உடம்பு தலையணைக்குப் போயிடும்.” என்றாள். அப்படி அவள் சொன்னது அந்தக் கிழவர், கொஞ்சம் கொஞ்சமாக, கட்டிலில் விழுவது தெரியாமல் விழுவதை ரசிப்பதுபோல் தெரிந்தது. போயிடும் என்று சொல்லி, மாமனாரை இப்போதே பிணமாகக் கருதிவிட்டவள்போல் தோன்றியது.
மணிமேகலை அப்பாவின் முதுகைப் பிடித்து கட்டிலில் கிடத்தினாள். "இப்படித்தான் தெரிஞ்சவங்கள பாத்துட்டா போதும். கொஞ்ச நேரம் போன உயிரு திரும்புனது மாதிரி உடம்புதுடிக்கும். இன்னைக்கி இவளப் பாத்ததும் கண்ண உருட்டுனது மாதிரி எப்பவுமே இப்படி உருட்டல; இன்னிக்கிதான் கண்ணிரே வந்து இருக்கு." என்று அண்ணிக்காரி 'நேர்முக' வர்ணனை கொடுத்த போது, மகள்காரி தலையணையை எடுத்து வீசிவிட்டு தன் மடியில் தந்தையை மகனாகப் போட்டாள். கூட்டத்தினர் ஒவ்வொருவராக கலைந்து கொண்டிருந்தபோது, "அன்னம் தண்ணி இறங்கமாட்டக்கு... அப்படியும்..." என்று அண்ணிக்காரி இழுத்தபோது, அவள் எதைச் சொல்லப் போகிறாள் என்பதைப் புரிந்தவன் போல் "ஒன் தோல் வாய வச்சிக்கிட்டு சும்மாக் கிட" என்றான் புருஷன். அவள் வாய் சும்மா கிடக்கவில்லை. "இன்னா, பழயபடியும் சுரண இல்லாம போயிட்டத பாரு. இனும ஒன்ன மாதுரி வேற நெருக்கமானவங்கள பாத்தாத்தான் பழையபடியும் கண்ணு உருளும். அதுவரைக்கும் இப்படித்தான். போன வாரம் எங்க அய்யா வந்திருந்த சமயத்துலயும் கண்ணுல தண்ணி வந்துது” என்று உண்மையில் பொய்யைக் கலப்படம் செய்தாள்.
மணிமேகலை அப்பாவை உற்றுப் பார்த்தாள்.
அண்ணி சொன்னது போல அந்த உருவம் அசையாமல் இல்லை கண்கள் இன்னும் உருண்டு கொண்டு தான் இருந்தன. உதடுகள் துடித்துக் கொண்டுதான் இருந்தன. அவள் அசையும் இடமெல்லாம் அந்தக் கண்கள் அசைந்தன. நோக்கும் இடத்தையெல்லாம் நோக்கின.
எல்லோரும் போய்விட்டார்கள். சந்திரன் தோப்பருகே போய்விட்டான். அண்ணனை அண்ணி சமையலறைப் பக்கம் சாடுவது, ஒரு ஸ்டுலில் உட்கார்ந்து அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்த மணிமேகலைக்குக் கேட்டது.
"ஒண்னுமில்லாம வந்திருக்கா பார்த்தியரா? வந்தா வரட்டும். அவள் போவையில வாயும் வயிறுமா இருந்தேன். ஒங்க பிள்ள எப்படி இருக்கான் அண்ணின்னு ஒரு வார்த்த சொல்றாளா பாத்தியரா? இந்த கிழவன யாரும். ஒம்மப் பாத்து, இப்ப துடிச்சது மாதுரி எப்பவாவது துடிச்சாரா? தனக்குத் தனக்குன்னா, தாழி குடமும், பதக்கு பிடிக்குமாம்” என்றாள். மணிமேகலைக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. பிள்ளையைப் பற்றிக் கேட்டிருக்க வேண்டும். தப்புத்தான். சொந்தப் பிள்ளையின் ஞாபகங்கூட இப்பத்தானே வருது:
மணிமேகலை சமையலறைப் பக்கம் போனாள். தொட்டிலில் துங்கிய அண்ணன் மகனை எடுத்து தோளில் போடப் போனாள். அண்ணிக்காரி "இப்பத்தான் துங்குறான். தூக்கத்த கெடுக்காத!” என்று சொன்னதோடு, குழந்தையையும் அவளிடமிருந்து வலுக்கட்டாயமாக வாங்கி தொட்டிலில் போட்டாள். அண்ணன்காரன் சற்று அதட்டலோடு அவளை விசாரித்தான்.
"ஆமாம், ஆயிரம் கஷ்டம் வரட்டும். தொளாயிரம் நோய் இருக்கட்டும். அதுக்காவ இப்படியா 'குளுவச்சி' மாதுரி நடந்து வாரது? ஒரு கார்ல வாரது? காசு இல்லாட்டாலும், நான் குடுக்காமலா போயிடுவேன்? ஒரு லட்டர் எழுதியிருந்தா சந்திரனை அனுப்பி இருப்பேமில்லா? நீ நடந்து வந்தத பார்த்தா, நாளைக்கு தெருவுல எந்தப் பயலாவது என்னை மதிப்பானா? இப்படியா 'கூறு' கெட்டு போவணும் ? சே... சே... ஏன் இப்டி புத்திய கடன் கொடுத்த?”
மணிமேகலை கடன் கொடுத்த புத்தியை வட்டியோடு சேர்த்து வாங்கிக்கொண்டவள் போல் யோசித்தாள். தப்புத்தான். ஊர்லயே பணக்கார வீட்டுப் பெண்ணான நான் தூத்துக்குடில பிச்ச எடுத்தாவது அந்தக் காசுல டாக்ஸில வந்திருக்கணும். அண்ணன் பிச்ச எடுத்தத பெரிசா நினைக்காமல் நான் கார்ல இறங்குவதை பெருமையா நினைச்சிருப்பான். ஒரு வார்த்தை உடம்புக்கு என்னம்மா வந்துதுன்னு கேக்குறானா? உடன் பிறந்த பாசம் என்பது பெண்களுக்கு மட்டுந்தானோ? சகோதரி மனம் பித்து, சகோதரன் மனம் கல்லுன்னு கூட பழமொழிய மாத்திக்கலாமோ? சீ. அப்படியும் சொல்ல முடியாது. அதோ அங்க பித்துப் பிடிச்சவன் மாதுரி நிற்கானே சந்திரன் அவனை இவனோட சேர்க்க முடியுமா? அக்காளோட கோலத்தப் பாத்துட்டு பாவம் தனியா தவிச்சு நிற்கான். இந்த அண்ணன் என்னைக்குமே இப்படித்தான். ஒருநாள்கட சிரிச்சுப் பேசமாட்டான். ஒரு வேளை வயசு வித்தியாசம் காரணமாய் இருக்கலாம். நான் காருல வராமல் கால் வலிக்க நடந்ததுக்காக இவன் வருத்தப்படல. இவன் கெளரவம் அதனால வலியெடுத் துட்டுன்னு வந்ததும் வராததுமா இப்டி அதட்டுறான். ஆனால் சந்திரன்... கூடப் பிறந்த பிறப்புன்னா. அவன் தான் பிறப்பு!
மணிமேகலைக்கு அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. மெள்ள நடந்து முன்னறைக்கு வந்தாள். அப்பாவை வெறித்துப் பார்த்தாள். அவர் இப்போது சுரணையற்று, உறுப்பெல்லாம், செத்து உயிர்மட்டும் சாகாமல் இருப்பது போல் மல்லாந்து கிடந்தார்.
அவரையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றவள், கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டே தோப்புக்கு வந்தாள். சந்திரன் குறுந்தாடி மீசையுடன் மலங்கலான கண்கள் மருட்சியான பார்வையைக் கொடுக்க ஆகாயத்தையே பார்த்துக் கொண்டு நின்றான். "தம்பி, ரயில் விளையாட்டு விளையாடி, இப்போ வாழ்க்கையே விளையாட்டாய் போனதால, நிஜ ரயிலுல வந்து நிஜமில்லாம போயிட்டனே" என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழப் போனவள் தன்னை அடக்கிக்கொண்டே அவன் தோளில் ஆதரவாகக் கை போட்டுக்கொண்டே 'தம்பி'... என்றாள். பிறகு அவன் கையை கெட்டியாகப் பற்றிக்கொண்டாள்.
தம்பி அவளையே பார்த்தான். கண்கள் லேசாகக் கலங்கியிருந்தது. அந்தக் கலக்கம் அழுகைக்கு அச்சாரம் போல் இருந்தது. மணிமேகலை அவன் தோளில் மீண்டும் கைபோட்டுக்கொண்டே "கவலப்படாதடா. அக்காளுக்கு சுத்தமா சுகமாயிட்டு ! நல்ல வேள, ஆரம்பத்துலயே கவனிச்சதால முளையிலயே கிள்ள முடிஞ்சுது. இப்போ நானும் ஒன்னை மாதிரிதான்! உடம்புக்கு ஒண்ணும் கிடையாது! கவலைப்படாதடா" என்றாள்.
சந்திரன் கவலையை விடுவதாத் தெரியவில்லை. அக்காளின் கையிரண்டையும் பிடித்துக்கொண்டு அக்கா என்று சொல்லிக்கொண்டே விம்மினான். மணிமேகலை தாயானாள். ஏதேது. இந்த சந்திரன் சுகமாயிட்டுதுன்னு சொன்னபிறகும் விம்முறானே ? எனக்குமுல்லா அழுகை வருது? நான் அழப்படாது. இவனுக்கு மூத்தவள். ஆறுதல் சொல்ல வேண்டியவள்; அதைத் தேடுபவள் அல்ல. மணிமேகலை தம்பியின் தலையைக் கோதி விட்டுக் கொண்டே அவனைக் குழந்தையாகப் பாவித்துக் கொண்டே "அழாதடா ராஜா ! இப்போ ஒண்னும் கெட்டுப்போயிடல. அழாதடா!” என்றாள்.
சந்திரன் இப்போது அழுதுகொண்டே "அக்கா. அக்கா. பாமா எப்படிக்கா இருக்காள்? என்னை விசாரிச்சாளா? எனக்கு ஏன் லட்டர் போடுறத நிறுத்திட்டாக்கா? என் தவிப்பு ஏக்கா அவளுக்குத் தெரியல? அக்கா, அவள் என்ன மறக்கலன்னு ஒரு வார்த்தை சொல்லுக்கா" என்று சொல்லி அழுதவன் விம்மினான்.
திடுக்கிட்டுப் போன மணிமேகலை அவனையே விளங்காதவள்போல் வெறித்துப் பார்த்தாள். பிறகு, அதைவிட வேறு எதையாவது பார்க்கலாம் என்பதுபோல், மாமரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த பழைய பசு மாட்டைப் பார்த்தாள். அது அவளைப் பார்த்து "ம்மா. ம்மா...' என்று பேரானந்தமாகக் கத்தியது.