இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 13
சாமக்கோழி கூவும்போது எழுந்து, அப்பாவுக்குப் பணி விடைகள் செய்துவிட்டு, அவரது பழைய துணிமணிகளை கொல்லைப்புறக் கிணற்றில் துவைத்து உலற வைத்துவிட்டு அவள் சாப்பிடத் தயாரானபோது, காலை மணி ஒன்பது. சாப்பாடு வந்தது பத்து மணிக்கு.
அப்படியும் அவளால் சாப்பிட முடியவில்லை. நேற்றிரவு சாப்பிடாமலே, ஏன் சாப்பிடல என்று யாரும் கேட்காமலே, தூங்கி எழுந்தவளுக்கு உடம்பின் 'பெளதிகத் தனம் தன் இயல்புப்படி பசியாக மாறியது. சிறுகுடலை பெருங்குடல் தின்பது போன்ற பசி. ஆனால் பசித்தபோது அவளுக்கு உணவு கிடைக்காததால் அந்தப் பசியே ஒரு உணவாகி இப்போது அவளால் புசிக்க முடியவில்லை. ஒரு கவளம் உணவுகூட உள்ளே போக மறுத்தது. சோற்றை எதிரே நின்ற நாய்க்கு வைத்துவிட்டு தட்டைக் கழுவி சமையலறையில் வைத்துவிட்டு வெளியே வந்து அப்பாவைப் பார்த்தாள்.
அந்த ஜீவனற்ற ஜீவன், கல்லாய்ச் சமைந்ததுபோல், குற்றுயிர் கொலையுயிராய் ஆனது போல் அப்படியே கிடந்தது. ஒரு காலத்தில் ஜீவநதியாக ஓடி, இப்போது நீரில்லாப் பள்ளத்தாக்காகப் போன அந்த அப்பாவை அப்படியே பார்த்தாள். அவளுள் ஒரு வைராக்கியம் பிறந்தது. அப்பாவுக்கு எப்படியும் அந்த மாத்திரையை வாங்கிக் கொடுத்து, அவர் உட்காருவதைப் பார்த்தாக வேண்டும். அவரது விழிகள் உருள்வதைக் கண்டாக வேண்டும். ஒருவேளை எதையாவது பேசலாம். அதைக் கேட்டாக வேண்டும்.
எப்படி முடியும்? கையிலே காசில்லை. கடன் கேட்க முடியாத 'அந்தஸ்துள்ளவள்' எப்படி முடியும்? எப்படியோ முடிய வேண்டும். அப்போது கையில் நாலைந்து கடிதங் களோடு வெளியே போய்க்கொண்டிருந்த சந்திரனைப் பார்த்தாள். நேத்து ஆத்திரத்துல பேசிட்டேன்னு தப்பா நினைக்காதே, மன்னிச்சிருக்கா. இப்பவே தூத்துக்குடிக்குப் போய், நீ சொன்னபடியே அந்த மாத்திரைகளை வாங்கிக்கிட்டு வாரேன் என்று சொல்வான் என்று எதிர் பார்த்தாள். அவன் அப்படிச் சொல்லவில்லை. ஒருவேளை நேற்றுச் சொன்னதே போதாது என்று நினைத்தவன்போல் அவளை விழி பிதுங்க முறைத்துக்கொண்டே ஒரு ஈஸிசேரை மடக்கித் தூக்கிக்கொண்டே தோப்புப் பக்கமாகப் போனான். நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கொண்டு கையிலிருந்த கற்றையில் ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தான்.
அவன் போவதை கண்களால பின்தொடர்ந்த மணிமேகலை, அவன் எதைப் படிக்கிறான் என்பதை யூகித்துக் கொண்டாள். மடமடவென்று அவனருகே போய் நின்றாள். சந்திரன் அந்த மகாபெரிய ரகசியக் கடிதத்தை மூடினான்.
"பாமா எழுதுன லட்டருங்களா?”
“எதுவோ ஒண்ணு."
"இந்தா பாருப்பா பாமா நேற்றுவரை உன் காதலியாய் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அவள் இன்னொருவனுடைய மனைவி. அவள் கடிதம் ஒன்கிட்ட இருக்கது தப்பு."
"தப்போ சரியோ, அவள் எனக்கு எழுதுன லட்டருங்க. இதுல தலையிட ஒனக்கு உரிமை கிடையாது.”
"நீ தரப்போறியா, இல்லியாடா ?”
"இதுதான் நான் சாவுறது வரைக்கும் ஆறுதல் தரப் போற கடிதங்கள். இதைவிட நீ என் உயிர எடுத்துக்கலாம்."
"வசனம் பேசாம லட்டருங்கள கொடுடா !”
"நான் ஒன்னை மாதுரி மரக்கட்டை இல்ல."
"மிஸ்டர் சந்திரன்! நான் இப்போ ஓங்களோட அக்கா என்கிற முறையில கேட்கல. ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டிய இன்னொரு பெண் என்கிற முறையில் கேட்கிறேன். கல்யாணமான ஒரு பெண்ணோட லட்டருங்களை வச்சிருக்கவனுக்கும், ஒரு காலிப்பயலுக்கும் வித்தியாசம் கிடையாது."
"எனக்கும் ரோஷம் உண்டு. யோசித்துப் பேசு.”
“சீ... ஒனக்கு ரோஷம் இருக்காக்கும். இதை நான் நம்பனுமாக்கும். அவள் ஒன்னை ஒரு பொருட்டாக நினைக்காமல் பெரியவங்க காட்டுனவன் நீட்டிய தாலிக்கு நிம்மதியாய் தலையை நீட்டிட்டாள். உன்கிட்ட இருந்து தப்பிச்சதையே பாக்கியமாய் நினைக்கிறாள். நீ வெட்கங் கெட்டதனமாக விரும்பாத பெண்ணோட லட்டருங்கள வச்சிக்கிட்டு பாக்கியில்லாம படிக்கிறியாக்கும். இதுல வேற ஒனக்கு ரோஷம் இருக்காக்கும்? உதறிவிட்ட பெண்ணோட லட்டருங்கள உதறாமல் இருக்கிற நீ, ஒரு ஆண் மகனாடா? நம் சங்க கால இலக்கியத்துல கைக்கிளைன்னு' ஒரு பிரிவு இருக்குது தெரியுமா? ஒன்னை மாதுரி பேடிப் பயலுவளுக்காக அப்பவே பாடி வச்சிருக்காங்க பாரு சீச்சீ!”
சந்திரன், தனக்கு ரோஷம் இருக்கிறது என்று நிரூபிக்க விரும்பியவன்போல ஒரே ஒரு கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு இதர கடிதங்களை வீசினான். மணிமேகலை வீசப்பட்டவைகளை குனிந்து எடுத்துக்கொண்டு வீசாமல் இருந்ததை அவன் கையை மடக்கிப் பிடுங்கிக்கொண்டு அவற்றைக் கிழிக்கப் போனாள். பிறகு பாமாவுக்குக் கொடுத்த வாக்கு. அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவளிடம் காட்டிவிட்டுக் கிழிக்க வேண்டும். அவள்தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை. நாமாவது நிறைவேற்றுவோம்.
தம்பிமீதே சற்று இரக்கம் ஏற்பட்டது. அவனை அனுதாபத்தோடு பார்த்துக்கொண்டே அப்பாவின் பக்கம் வந்தாள். இப்போது அந்த அனுதாபம், கடுங்கோபமாக வந்தது. இவரைவிட, எவர் உசத்தியாயிடுவார்?. எவள் உசத்தியாயிடுவாள்? நம்மை கருவாய் பெற்று உருவாய் ஆக்கினவங்களைவிட அந்த உருவங்களில் மோகித்து வரும் யாரும் இணையாக முடியுமா?
என்ன நடந்தாலும் சரி, இன்றைக்கு அப்பாவுக்கு மாத்திரைகளைக் கொடுத்தாக வேண்டும்.
மணிமேகலை அப்பாவையே பார்த்துக்கொண்டு சுவரில் சாய்ந்தாள். இடையிடையே 'கூத்து' கோவிந்தன், சந்திரமதி, மகன் லோகிதாசனை பிணமாக வைத்துக் கொண்டு புலம்பியது நினைவுக்கு வந்தது. கடவுளே! என் மகனுக்கு அப்படில்லாம் ஆகக்கூடாது!
திடீரென்று காலடிச் சத்தங் கேட்டுத் திரும்பினாள். வெங்கடேசன் வந்துகொண்டிருந்தான். அண்ணன் சிறுமைப்படக் கூடாது என்பதற்காக தான் பெருமையுடன் கைவிட்ட அந்த தோழமை ஆடவன்-அவளோடு, ‘ரயில் எஞ்ஜினாக' இருந்து விளையாடியவன், கையில் மஞ்சள் தடவிய கட்டுக் காகிதங்களுடன் வந்தான். இப்போது முகத்தில் தாடியில்லை. மீசை கம்பீரமாக இருந்தது.
அவளைப் பார்க்கவே அவனுக்கு சங்கடமாக இருந்தது. எழுந்து நின்ற மணிமேகலையை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் "ராமலிங்கத்தான் இருக்காரா? எனக்கு நாளைக்குக் கல்யாணம். சிம்பிள் கல்யாணம். திருச்செந்தூர்ல தாலி கட்டிட்டு, அப்படியே மெட்ராஸ்ல பெண் வீட்டுக்குப் போறேன்" என்றான். அவள் எதுவும் பேசாமல் இருப்பதை மெளனத்தால் அங்கீகரித்துக் கொண்டே வீட்டுக்குள் போனான். ராமலிங்கத்திடம் அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு, ஐந்து நிமிடத்திற்குள் வெளியே வந்தான். அவளையே பார்த்தான். பிறகு ஒரு கையை ஸ்டூலில் ஊன்றி, அதில் அழைப்பிதழை வைத்து 'மிஸ்ஸஸ் ஜெயராஜ்' என்று எழுதி முடித்துவிட்டு அதனை நீட்டினான். அவன் கைகள் ஆடிக்கொண்டே கொடுத்தன. அவள் கரங்களும் அதை ஆடிக்கொண்டே வாங்கிக் கொண்டன. மணிமேகலை அழைப்பிதழைப் பிரித்துப் படித்தாள். ஆயாசப்பட்டவள்போல், சுவரில் தலையைச் சாய்த்துக்கொண்டாள். அவளுக்கு இருந்த நோயையும் இருக்கின்ற பிரச்னைகளையும் ஒரளவு அறிந்து வைத்திருந்த வெங்கடேசன் அவளைக் கல்லூரிக் காலத்தில் பஸ் நிலையத்தில் எப்படிப் பார்ப்பானோ அப்படிப் பார்த்தான். ஆசை பொங்கப் பார்த்தான். பிறகு அழுகை பொங்கக் கேட்டான்.
"ஏம்மா, பேசமாட்டக்கே? ஒரு வார்த்தையாவது பேசும்மா !”
மணிமேகலை தன்னை அடக்கிக்கொண்டு தலையை சுவரில் இருந்து எடுக்க முடியாமல் "என்னத்த பேச? நான் எஞ்ஜின் இல்லாத ரயிலாய் போயிட்டேன்" என்றாள். சொல்ல வேண்டியதை அவள் சொல்லிவிட்டாள். அவளையே மெய்துடிக்க, மெய் மறக்கப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேசன் வெளியேறினான்.
அந்த 'எஞ்ஜின்' ரயில்பெட்டியை விட்டுவிட்டு தனியாக ஓடியது.
'புதியோன் பின்னே போனது என் நெஞ்சே' என்று அந்த மணிமேகலையே புலம்பினாள் என்றால், இந்த மணிமேகலையோ “பழையோன் முன்னே நெஞ்சம் பட்டுப் போனது" போல் விக்கித்து நின்றாள். அந்த மணிமேகலையின் எண்ணச் சேர்க்கையால் புன்னை மரத்திற்குக் கீழே காதலனுடன் பேச நாணிய சங்ககாலப் பெண்-காதலன் காரணம் கேட்டபோது "என் அன்னை எனக்கு முன்னால் நட்ட புன்னை மரம். இது என் தமக்கை. நாணம் வராதா?’ என்று சொன்னதாக புலவர் பாடிய பாட்டொன்றை கல்லூரியில் படித்ததும், அந்தப் பாட்டுக்கு வெங்கடேசன், கோனார் நோட்ஸ் கொண்டு வந்து கொடுத்ததும் அவள் நினைவுக்கு வந்தது. உடனே மரம்போல் கிடந்த தந்தையை நாணங்கலந்த அவலத்துடன் பார்த்தாள். அந்த உருவத்தின் பொட்டல் கண்கள் இரண்டிலும் ஒரு சொட்டு நீர் உருண்டு திரண்டு நின்றது.
மணிமேகலை அவரது கால் பாதங்களைக் கட்டிக் கொண்டே கண்ணீர் சிந்தினாள். கண்ணீர் விடும் அந்த உருவத்தை, இருக்க வைத்து, முடியுமானால் பேச வைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம், வைராக்கியமாக அவள் தன்னை தைரியப்படுத்திக் கொண்டதுடன், தனக்குள்ளே தன்னை நொந்துகொண்டாள்.
'சேசே.... பெற்ற அப்பாவை விட காதலியை தம்பி பெரிசா நினைச்சிட்டான்னு நான் கோபப்பட, எனக்கு என்ன அருகதை இருக்கு? நான்கூட, அப்பா மரணப் படுக்கையில் இருக்கிற இந்தச் சமயத்தில் கூட, வெட்கங்கெட்டத்தனமாய் நினைக்கிறேனே, சந்திரன் எம்மாத்திரம்? எப்படியும் அவனுக்கும் ஒரு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டுதான் ஊருக்குப் போகணும்....'
மணிமேகலை வெங்கடேசனை விலக்கிக்கொண்டு, தம்பியைத் தள்ளிகொண்டு தன்னையும் பின்னால் வைத்து, தந்தையை முன்னால் வைத்தாள். மாத்திரைகள் வாங்கியாகணும். யார் போய் வாங்கி வருவார்கள்? ஒரு வேளை ரத்தின அண்ணன்கிட்ட கேட்டுப் பார்க்கலாமா?
மணிமேகலை வாரிச் சுருட்டி எழுந்தாள். தலை முடியைச் சரிப்படுத்தாமலே செருப்புகளைப் போட்டுக் கொள்ளாமலே முந்தானையை மட்டும் இழுத்துப் பிடித்துப் போர்த்துக்கொண்டு நடந்தாள். வழியில் இவள் ஜாதி ஏழைப்பெண் காத்தாயியும், ஹரிஜனப் பெண் ராமக்காவும் இன்னும் இவர்களைப் போன்ற இரண்டொரு விவசாயக் கூலிப் பெண்களும், இவளைச் சூழ்ந்து கொண்டார்கள். ராமக்கா மூச்சைப் பிடித்து வெளியே நிறுத்துபவள் போல் பேசினாள்.
"எம்மா.. எம்மா. எப்படிச் சொல்லுறதுன்னே தெரிய மாட்டக்கு. சொல்லாமலும் இருக்க முடியல. இங்க நாயும் பேயும் நாலு விதமாப் பேசுது. வேற யாருமில்ல, ஒங்க ஜாதில ஒசந்து நிக்கிற ஆளுங்கதான். நீங்க வாழா வெட்டியா வந்துட்டியளாம். புருஷங்கிட்ட ஒத்து போவத் தெரியாதவியளாம். இன்னும் ஒரு வருஷத்துல கையி காலுல விரல் இருக்காதாம். ஒங்க நாத்தனார்காரியும் 'பீட போவமாட்டக்குன்னு' எல்லாருகிட்டயும் சொல்லுதாவ. உங்கள வாய் நிறைய வரணுமுன்னு சொன்ன இந்த வாயாலயே இப்போ சொல்லுதேன், பேசாம புருஷன் வீட்டுக்குப் போயிடுங்கம்மா! நல்லதோ கெட்டதோ அங்கயே பழிகிடங்கம்மா. இன்னொண்ணயும் சொல்ல நினைக்கேன். வரமாட்டக்கே...”
"சும்மா சொல்லு! நான் இப்போ எல்லாத்தையும் தாங்கிக்குவேன்.”
"ஓங்களபோயி-இங்க ராசாத்திய போயி-கூத்துப் போடுற கோவிந்தனை வச்சிக்கிட்டு இருக்கதா, ஒங்க நாத்துனாரே சொல்லியிருக்காம்மா. என் ராசாத்தி ! மவராசி! பேசாம போயிடும்மா! வந்துடும்மான்னு சொல்ல முடியாமப் போன என் வாயில கரையான் அரிக்க-கட்டெறும்பு திங்க-பேசாம போயிடும்மா ! போயிடு என் மவராசி!"
எல்லாப் பெண்களும், ராமக்கா சொல்வது உண்மை என்று ஒப்புக்கொண்டவர்கள் போல் 'பரக்கப்பரக்க' விழித்தார்கள். மணிமேகலை அந்த அன்புப் பெட்டகங்களை ஆசை தீரப் பார்த்துக்கொண்டே, நெஞ்சில் விழுந்த இடியை நிலத்திலே போட்டவள் போல் நிலம் நோக்கி நடந்தாள்.
ரத்தினத்தின் ஒலை வீட்டிற்குள் அவள் வந்தபோது அவன் தன் மகனுக்கு 'தெல்லாங்குச்சி' சீவிக்கொண்டிருந்தான். அந்தப் பயலோ 'நொங்குவண்டி. நொங்கு வண்டி’ என்றான். வாராததுபோல் வந்த மணிமேகலையைப் பார்த்த ரத்தினத்திற்கு, முதலில் ஒன்றும் ஓடவில்லை. உள்ளே அம்மியில் துவையல் அரைத்துக்கொண்டிருந்த பெண்டாட்டிக்கு கேட்கும் வகையில் "மிராசுதார் மகள் வந்துருக்கு" என்றான். பிறகு "ஏய் கொம்பேறி மூக்கி! இங்க வந்து பாருடி. ஒன் நாத்துனா வந்திருக்காள்” என்று ஆனந்தக் கூத்தாடியபோது, அவனோடு அம்மி மிதித்த அந்தப் பெண், மணிமேகலையை, அருந்ததியைப் பார்ப்பது போல் பார்த்தாள். பிறகு "எழுந்திரும்மா. இந்த கோரப்பாயில உட்காரும்மா ஒம்மத்தானே !! பக்கத்து டெய்லர் கடையில முக்காலி கிடக்கு, எடுத்துக்கிட்டு வாருமே” என்றாள். ரத்தினம் முக்காலியை எடுப்பதற்காக, தன் இருகாலை குவித்தபோது மணிமேகலை கையாட்டித் தடுத்தாள்.
ஆரவாரங்கள் ஒய்ந்தபிறகு, மணிமேகலை தன் அப்பாவின் நிலைமையையும், சகோதரர்களின் போக்கையும் நாகரிகமாக எடுத்துச் சொன்னாள். பிறகு “என் வீட்டு நிலயும் சரியில்ல அண்ணே” என்றபோது ரத்தினம் அமைதி கலந்த ஆவேசத்தில் அவளிடம் பேசினான்.
“ஒனக்கு நடந்தது எல்லாம் எனக்குத் தெரியும்மா. அரக்கோணத்துல இவளோட பெரியய்யா பேரன் ஒரு தொழிற்சாலையில டர்னரா வேலை பாக்கான். ஒனக்கு அவனைத் தெரியாட்டாலும் அவனுக்கு ஒன்னைத் தெரியும். நீ அங்க பட்டபாடுல்லாம் அவனுக்குத் தெரியும். ஒன் புருஷனை, இன்னொரு பெண்ணோட சினிமா தியேட்டர்லகூட பாத்திருக்கான். மனிதர்கள் ஜாதி அடிப்படையில தனித்தனியா நிற்குற-ஒரே ஜாதியிலயும் மனுஷங்க, பணத்தின் அடிப்படையில தனித்தனியா நிக்கற இந்த சமுதாயத்துல, இந்த மாதிரி நடக்கது சகஜந்தான். இதுக்கு நீயும் ஒரு வகையில காரண்ம். எப்போ புருஷன் ஒன்னைத் தள்ளி வைக்கிறானோ, அப்பவே நீயும் அவனைத் தள்ளி வச்சிடணும். சொத்துல பங்கு கேட்டிருக்கணும். எப்போ ஒன் அண்ணன் தம்பிங்க அப்பாவ பார்க்கலியோ, நீ அப்பவே அவங்க முகத்துக்கு எதுருலயே ‘என் சொத்த பிரிச்சிக் கொடுங்கடா. எனக்கும் சொத்துல உரிம இருக்குன்னு அடிச்சிப் பேசியிருக்கணும்."
"இந்தக் காலத்துல நல்லவனா மட்டும் இருந்தால் பத்தாது, வல்லவனாயும் இருக்கணும். இப்படித்தான் இந்தப் பொண்ணு வடிவுக்கரசிக்கு, அறுபது பவுனும், இருபதாயிரம் ரூபாய் ரொக்கமும் போட்டு எவனோ ஒரு கிளார்க்குக்கு கட்டிக் கொடுத்தாங்க. அந்தப் பய அப்பா அம்மா பேச்சக் கேட்டு, தூத்துக்குடியில வீடு வாங்குற துக்கு ஒப்பாகிட்ட ரூபாய் வாங்கிட்டு வந்தால்தான் வீட்டுக்குள்ள நுழையணுமுன்னு சொன்னானாம். இந்தப் பொண்ணும் அப்பாக்கிட்ட வந்து ஒப்பாரி வைக்க, அவரும் ரூபாய கொடுத்து விடுறாரு. இப்படிப்பட்ட பயலுவகிட்ட எதுக்காவ வாழனும்? தாலிய அத்து அவன் முகத்துல வீசினா என்ன? இந்த லட்சணத்துல கல்யாண அழைப்பிதழ்ல முருகன் படத்தப் போடுறாங்க முட்டாப் பயலுவ! இவங்க முருகனுக்குப் பதிலா ரூபாய் நான யத்தல்லா அழைப்பில போடணும் : துப்புக்கெட்ட பயலுவ! துட்டுத்தான் இவங்களுக்கு முக்கியம்.”
மணிமேகலை சிந்தனையில் இருந்து விடுபட்டவாறு கேட்டாள்: "சரி இப்போ ஆக வேண்டியதுக்கு வழியச் சொல்லு.
"பொறு. தூத்துக்குடிக்குப் போறேன். நாலு மாத்திரை வாங்கிட்டு வாரேன். யாரிடமாவது கொடுத்து அனுப்புறேன். நான் அங்க வர முடியாது. ஒங்க அண்ணனுக்கும் எனக்கும் அடித்தடி மட்டும் வரல. இப்போ வந்தால் நல்லா இருக்காது."
"ஒன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தால், எத்தனையோ விஷயம் புரியுறாப்போல இருக்குது. நீ சொல்றத ஒத்துக்க முடியாட்டாலும் ஆறுதலா இருக்கு. அப்போ நான் வரட்டுமா? அப்பா தனியா இருப்பாரு"
"கடலுக்கு மத்தியில தாகத்துக்கு தண்ணி கிடைக்காத கதை ஒங்க அப்பாவோட கதை, ஒன்னோட கதை?”
"நான் வரட்டுமா..?” "அவ்வளவு சீக்கிரமா ஒன்ன விட்டுடுவோமா? அடியே பகவதி அம்மாளு! ஒன் நாத்தினார உபசரிக்கிற லட்சணமாடி இது?"
பகவதி அம்மாள் சிரித்துக்கொண்டே, ஒரு தட்டில் வறுத்த மொச்சக்கொட்டைகளையும், கூடவே ஒரு டம்ளர் 'கருப்பட்டிக் காபியையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு "இவிய பேச்ச கேளாதம்மா. ஊர்ல யாரும் சண்ட போடலன்னா இவியளுக்கு தூக்கம் வராது" என்றாள்.
"நான் இப்போ சொல்றதுதான் தங்கச்சி. ஒன் புருஷங் கூட இனிமேல் உன்னால இருக்க முடியாது. அந்த நரிப் பயல் ராமபத்திரனப்பத்தி எனக்கு நல்லா தெரியும். என் உதவி ஒனக்குத் தேவன்னா ஒரு லட்டர் போடு. நான் அங்க வந்து நிக்குறேன்.”
"மருந்த எப்படிண்ணே கொடுக்கணும்? எப்பண்ணே கிடைக்கும்?”
"இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்திரு.” "பணம் எவ்வளவு?”
"அட சும்மாக் கிடம்மா. ஒன் பணத்துலதான் நான் அந்த கம்மாவ விலைக்கு வாங்கப்போறேன்? சரி கிளம்பு. ஒன் அண்ணன் இங்க வந்து ரகளை பண்ணப் போறாரு. அப்புறம் மருந்த நல்லா தூள் தூளாக்கி, வெந்நீர்ல கலந்து கொடு. ஒரு நாளைக்கி இரண்டு வேளை."
மணிமேகலை புறப்பட்டாள். மத்தியான வேளை. அப்பா அப்படியே கிடந்தார். அண்ணன் குடும்பத்தினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சந்திரன் இன்னும் அந்தத் தோப்பிலேயே இருந்தான். ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே, மாத்திரைகளை 'கூத்து' கோவிந்தன் கொண்டு வந்து கொடுத்தான். மணிமேகலை உடனடியாக ஒரு மாத்திரையை தூள் துளாக்கி வெந்நீரில் நன்றாகக் கலக்கி தந்தையை லேசாகத் துரக்கிக்கொண்டு, உதடுகளைப் பிரித்து உள்ளே ஏற்றினாள். வெந்நீர்க் கலவை, தொண்டைக்குள் போகும் சத்தம் குட்டி அருவியோசை மாதிரி கேட்டது. இதற்கிடையே வெங்கடேசன் வகையறாக்கள், பூத்தட்டுகளுடன் மேளதாளத்துடன், பத்ரகாளியம்மன் கோவிலுக்குப் போனார்கள். வெங்கடேசன் மேல் சட்டை போடாத மேனியில் ரோஜாப்பூ மாலை விளங்க, கையில் மஞ்சள் காப்பு குலுங்க, கூட்டத்தின் மத்தியில் போய்க் கொண்டிருந்தான்.
நடந்ததையும், நடப்பவைகளையும், அவள் நினைத்து நினைத்து இறுதியில் நெஞ்சத்தை நிர்மூலமாக்கியபோது, பகல் பொழுதும் நிர்மூலமானது. இரவு எட்டு மணிக்கு மீண்டும் ஒரு மாத்திரையை எடுத்து தந்தையின் வாயில் ஊற்றினாள்.
விடிந்தது. அவளுக்கு விடியாததுபோல் விடிந்தது. காலைப்பொழுது. கதிரவன் 'கை விரித்தான்.' மணிமேகலை அப்பாவைப் பார்த்தாள். ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரது கையாடியது. காலாடியது. கண்கள் சுழன்றன. வாய் ஊமைபோல் முனங்கியது. அவள் வீட்டுக்குள் இருந்தவர்களைப் பார்த்து 'இங்கே பாருங்க. பாருங்க' என்று சொல்லிவிட்டு அப்பாவை அணைத்தபடி தூக்கி கட்டிலில் வைத்தாள். அவர் அப்படியே இருந்தார். உடம்பு கீழே சாயவில்லை. "எம்மா.எம்மா.மணி.மணி என்று சன்னமாகச் சத்தங் கேட்டது. ஒட்டில் இருந்து குதித்த கோழியைப் பார்த்து அவரது கண்கள் சுழன்றன. காதுகூட கேட்குதோ?
மணிமேகலை ஆனந்தப்பரவசமானாள். அப்பாவைக் கட்டிப்பிடித்து குழந்தை மாதிரி விம்மினாள். பின் தாய் மாதிரி நீவி விட்டாள். பாட்டி மாதிரி அவரை உச்சி மோந்தாள்.
"அப்பா.அப்பா.அப்பா"
"எம்மா.இம்மா.எம்மா."
மோனத்தின் முழுச்சுகத்தில் அந்த இரு ஜீவன்களும் லயித்தன. மணிமேகலை தந்தையின் கைகளை எடுத்து, தன் முதுகைச் சுற்றி வட்டமாக வைத்துப் பிடித்துக் கொண்டிருந்தபோது அவள் போட்ட சத்தங் கேட்டு அங்கு வந்த அண்ணனும், அண்ணியும் திகைத்து நின்றார்கள். ஒங்களால செய்ய முடியாததை, நான் செய்து காட்டிட்டேன் பாருங்க' என்று பவுசு செய்றாளோ?
அண்ணன் அவளைப் பாராட் டாமல் அவள் மாத்திரைகள் வாங்கிய விதத்தைப் பாராட்டினான்.'
"ஆமாழா, நீ எதுக்காவ ரத்துனத்தோட வீட்டுக்குப் போன ?”
"போனால் என்ன ?” "அவன் என் வயலுல மறியல் பண்ணப் போறேங் றான். நீ என் மானத்த வாங்கும்படியாய் எதுக்காவ போன?”
"நான் எதுக்காவவும் போவல. மாத்திரை வாங்கத் தான் போனேன்!”
"அதுக்கு மட்டுந்தானா, இல்ல..?”
அண்ணிக்காரி, அவன் பேச்சுக்கு இடைச்செருகல் ஆனாள்.
"இன்னும் எதுக்காவ மறச்சி. மறச்சிப் பேசணும்? நேத்து கோவிந்தன் கூட கூத்தடிச்சா. மத்தியானம் ரத்துனங்கிட்ட போயிட்டு வாராள். நாளைக்கி எவன்கூட போகப் போறாளோ? கல்யாணம் ஆவுமுன்னதான் வெங்கடேசன்கிட்ட சிரிச்சா. இன்னுமா இப்டி? நம்ம வீடு தேவடியாக் குடியா மாறப்போவுது பாரும். அங்கேயும் ஏடாகோடமா நடந்திருப்பாள். அதனாலதான் அவங்க துரத்திட்டாவ. ஊர மூட உலமடியா?”
மணிமேகலை காதுகளைப் பொத்திக்கொண்டாள். கண்கள் அப்படியே கொட்ட மறந்து, விழிகள் இமைக்க மறந்து நின்றன. வார்த்தைகளின் வலிமையினால், உள்ளத்தால் உதைபட்டு, முகத்திலே வேர்வை பட்டு, முன்னிருப்பவர் புரியாமல் அவள் தவித்தபோது திடீரென்று 'ஆங் ஆங்' என்று சத்தம்.
மணிமேகலை தவிர, இதர இருவரும் அந்தக் கிழவரைத் திரும்பிப் பார்த்தார்கள். அந்த உருவம் இப்போது சன்னமாகவும், அதே சமயம் சாபக் குரலிலும் பேசியது. கண்களில் நெருப்பும் நீரும் ஒன்றாக நின்றன.
"எம்மா! என் மவளே ! உடனே போயிடு. அரக்கோணம் போயிடு, நீ. நிசமாவே என் மகள்னா போயிடு. போ.. என் மவளே. போ.” இப்போது மணிமேகலையும் அந்த இருவருடன் சேர்ந்து பார்த்தபோது, அந்த உருவம்-ஆசை குலுங்க, மேனி குலுங்காமல் அமர்ந்திருந்த அந்த உருவம், அணு அணுவாகச் சாயாமல், சட்டென்று கட்டிலில் விழுந்தது. ஒரேயடியாய் ஒட்டு மொத்தமாய் விழுந்தது. தானும் அப்படியே விழக்கூடாதா என்று ஏங்கிய மணிமேகலை வெறித்துப் பார்த்தாள். உற்றுப் பார்த்தாள். தன்னைப் பெற்றவனை ‘ஏன் பெற்றாய்’ என்பது போலும் பார்த்தாள்.
எல்லோரும் அவரை நெருங்கிப் பார்த்தார்கள். கண்கள் மீண்டும் நிலைகுத்தி நின்றது. வாய் கோணிப் போய் நின்றது. கைகால்கள் ஜில்லிட்டவை போல் உணர்வின்றிக் கிடந்தன. மூக்கின் வழியாக மட்டும், லேசாகக் காற்று வந்துகொண்டிருந்தது.
மணிமேகலை புரிந்துகொண்டாள். இது மீளாத முடக்கம். மீட்க வேண்டியவர்களே, முடக்கிப் போட்ட முடக்குவாத முடக்கம். இடக்குவாத முடக்கம். இனிமேல் கண்கள் சுழலாது. கை கால்கள் ஆடாது. நீர் முட்டாது. இனி நெருப்புதான் சுடும். அந்த நெருப்பு பற்றி எரிவது வரைக்கும் இவள் அண்ணனின் மேலான அங்கீகாரத்தில், அண்ணி கொடுத்த நெருப்புக் கட்டிகளை நெஞ்சில் வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் இனிமேல் அவள் தேவடியாள்தான். சந்தேகமே இல்லை. அடிச்சாலும், உதைச்சாலும் அரக்கோணம்தான் அவளது வீடு. இங்கே நடக்கும் ஏனோதானோ போக்குகளுக்கு சாட்சிக்காரியாய் இருப்பதைவிட அங்கே சண்டைக்காரியாகக் கூட இருக்கலாம்.
மணிமேகலை சூட்கேஸை எடுத்துக் கொண்டாள். அண்ணிக்காரி அவள் அதை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்பதுபோல், முன்னறையில் தான் வைத்திருந்தாள். மணிமேகலை அப்பாவையே பார்த்தாள். அருகே போய் அவர் கண்களையே பார்த்தாள். அந்தக் கண்களில் இப்போது நீர் முட்டவில்லை. அவரது பாதத்தருகே வந்து சூட்கேஸை கீழே வைத்துவிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள். பிறகு அவர் கால் பாதத்தை கைகளால் அழுத்தி அதில் கிடைத்த புழுதியை எடுத்து தன் நெற்றியில் வைத்துக்கொண்டே கண்களை மூடியபடியே நின்றாள். பிறகு கால்களை, போனபடியே விட்டாள்.
வீட்டின் காம்பவுண்ட் கேட்டுக்கு வந்தபோது இன்னொரு தடவை அப்பாவை இறுதியாகப் பார்க்கலாமா என்றுகூட நினைத்தாள். வேண்டாம். ‘போகாண்டாம்’ என்று ஒரு வார்த்தை சொல்லாத அந்த சொந்தங்கள் சுகஜீவனம் செய்யும் வீட்டிற்குள், இனியொரு தடவை போக வேண்டாம். அப்பா ஏற்கெனவே செத்துவிட்டார். அப்படியே சாகவில்லையானாலும், அந்த உறவுக்காரர்களின் சுமை தாங்காது அந்த மூக்கு மூச்சு, ரோஷத்தோடு போய்விடும்.
வீதிக்கு வந்த அவளை ‘ஊர்ப்பிரமுகர்கள்’ கண்டுக்கவில்லை. வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார்கள். ராமக்கா, காத்தாயி, தங்கம்மா பாட்டி போன்ற பெண்கள் வாயடைத்துப் போய் நின்றார்கள். ‘போயிட்டு வாங்கம்மான்னு’ எப்படிச் சொல்ல? வாங்கம்மான்னு இந்த கேடு கெட்ட ஊருக்கு அவளை வரச் செல்லப்படாது. அதே சமயம் ‘போ’ என்று மொட்டையாகவும் சொல்ல முடியாது. ஆகையால் அந்த ஏழை பாளைகள், மொட்டை மரம்போல் கையை மட்டும் நெரித்தார்கள்.
‘கூத்து’ கோவிந்தன் அந்தப் பெண்களுக்குப் பின்னால் நின்றான். அவனை ரயில் நிலையம் வரை கூப்பிடலாமா? ஏன் கூப்பிட்டாலென்ன? கூடப் பிறக்காமலே பிறந்த அண்ணன் அவன். வேண்டாம். நான் கூப்பிட்டால் வருவான். அப்புறம் நம் சொந்தக்காரர்கள் எனப்படுபவர்கள் இந்த அப்பாவியைகட்டிவைத்து ‘நீ எப்படிடா போலாம்’ என்று உதைக்கலாம். வேண்டாம்.
மணிமேகலை கூனிக் குறுகி நடந்தாள். “அந்த அம்மாவோட குடியக் கெடுத்திட்டியேய்யா. நீ சூதுவாதுல்லாம போனாலும், அந்த வீட்ல இருக்கவிய சூதுவாது சூன்யக்காரப் பேயுவன்னு ஒம் களிமண்ணு மூளையில ஏன் படல?” என்று சற்றுமுன்பு ராமக்காவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட ‘கூத்து’ கோவிந்தன் சந்திரமதியையும், மணிமேகலையையும் ஒருசேர நினைத்துக்கொண்டே பயந்துபோய் திருட்டுத்தனமாகப் பார்த்தான்.
மணிமேகலை குனிந்த தலை நிமிராமல் அக்கம்பக்கம் அவளுக்காக வருந்தும் எளியவர்களைப் பார்க்காமல் நடந்தாள். திடீரென்று ஒரு கம்பீரமான குரல்.
“சூட்கேஸ் கொடும்மா. இந்த அண்ணங்கிட்ட கொடும்மா.”
ரத்தினம் கம்பீரப் பார்வையுடன் நின்றான். தலையில் முண்டாசு. உடம்பில் பனியன். தார் பாய்த்த வேட்டி.
மணிமேகலை மெளனமாக பெட்டியைக் கொடுத்து விட்டு அவன் பின்னால் நடந்தாள். எதிரே சந்திரன் வந்தான். கரும்புத் தோட்டத்தில் பாமாவின் கையை வங்கி மோதிரக் கையோடு அழுத்திய அந்த இடத்தில் அழுத்தமாக உட்கார்ந்துகொண்டு, ஒரு ஆமணக்குச் செடியைப் பிடித்து, அதை பாமாவாகப் பாவித்து அதன் கொட்ட முத்தை மோதிரமாக நினைத்து அழுந்தப் பிடித்து, சொல்லி மாளாத கற்பனைச் சுகங்களைக் கண்டுவிட்டு, வயிற்றுப் பசி, காதல் பசியை அடக்கியதால் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அவன் அக்கா எங்கே போகிறாள் என்று புரியாமல் தவித்து நின்றபோது, ரத்தினம் ‘எட்டு ஊருக்கு’க் கேட்கும்படி பேசினான். “நானும் ஒனக்கு அண்ணன்தாம்மா. என் பின்னாலயே வா. முருங்கை மரம் தேக்காகாது. ஊர்க்குருவி பருந் தாகாது. கூடப் பிறந்ததுனாலயே ஒருவன் சகோதரனாயிட மாட்டான். உடன்பிறந்தே கொல்லும் நோயின்னு ஒரு பாட்டு இல்லியா? நீ வாம்மா. எவனையும் பார்க்காம இந்த அண்ணன் பின்னால வா!”
சந்திரன் குழம்பினான். ஊர் ஜனங்கள் ஒட்டு மொத்தமாக அவனைப் பார்த்தார்கள். அவன் தன் சகோதர பாசத்தை நிரூபித்தாக வேண்டும்.
“நானும் ஸ்டேஷனுக்கு வாரேன். ” மணிமேகலை தம்பியைப் பார்த்தான். “தம்பியுள்ளான் படைக்கு அஞ்சான்” என்ற கம்பனை நினைத்தாள். ‘உள்ளான்’ என்றுதானே சொன்னான். ‘உள்ளாள்’ என்று சொல்லவில்லையே. இப்பகூட என்னக்கா நடந்தது? அந்த வீட்ல எனக்கும் உரிமை உண்டு. வாக்கா வீட்டுக்கு என்று சொல்ல மனசு வரலியே! ஸ்டேஷனுக்கு வருவானாம். அக்காவை வழியனுப்பி வைப்பதில் அவ்வளவு அவசரம்!
சந்திரன் தயங்கி மயங்கியபோது, மணிமேகலை மயக்கம் தீர்ந்தவள்போல் கம்பீரமாகப் பதிலளித்தாள்.
“நீ வீட்டுக்குப் போப்பா, ஸ்டேஷனுக்கு வந்தால், ஒனக்கு ரெண்டு கண்ணும் போன ஞாபகம் வந்துடும். ஒன்னால தாங்க முடியாது. அப்பா இறந்ததும், அவருக்கு ‘கொள்ளியாவது’ வை. போப்பா போ. நான் இப்போ என் அண்ணனோடதான் போய்க்கிட்டிருக்கேன். ” சந்திரனும், ரத்தினத்துடன் மணிமேகலையும் எதிர் எதிர் திசைகளில் போய்க் கொண்டிருந்தார்கள்.
‘டவுன்’ கட்டபொம்மனில் ஏறி ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார்கள். அங்கே ‘கூத்து’ கோவிந்தன் நின்றான். எப்படி வந்தான்? இந்த பஸ்ல வரலியே. அந்த இருவரின் திகைப்பையும் ரசித்துவிட்டு கோவிந்தன் ‘லாரில வந்தேன்’ என்றான்.
ரயில் புறப்பட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. இப்போதுதான் மணிமேகலைக்கு டிக்கெட் ஞாபகம் வந்தது. கையில் இருபது ரூபாய்தான் இருக்கு. டிக்கெட் முப்பது ரூபாய். அங்கிருந்து அரக்கோணம் போயாக வேண்டும். அவள் கையை நெரித்தாள். அப்போது கையில் போட்டிருந்த ஒரே ஒரு தங்க வளையலைப் பார்த்தாள். ஒரு பவுன் தேறும்.
‘கூத்து’ கோவிந்தனைக் காணவில்லை. ரத்தினம் எதையோ யோசித்துக்கொண்டு நின்றான்.
“அண்ணே ! அண்ணாச்சி!”
“என்னம்மா? சொல்லும்மா!”
“டிக்கெட்டுக்குப் பணம். பணம் போதல.. இந்தக் காப்ப.”
ரத்தினம் அவளையே பார்த்தான். அவள் தயங்கிப் பேசிவிட்டு தயங்காமல் கொடுத்த தங்க வளையலை, தயங்கியபடியே வாங்கிக்கொண்டான். மணிமேகலைக்கா இந்த கதி?
“என்னண்ணே யோசிக்கிற? என் தங்க வளையலைப் பார்த்ததும், கண்ணாடி வளையல் கூட இல்லாத பெண்களோட நெனப்பு வருதா? ” மணிமேகலை சிரித்தாள். அந்தச் சிரிப்பால், இதுவரை எல்லோரையும் ‘அழவைத்து’ப் பார்க்கும் அந்தக் கம்பீரக்காரன், இப்போது வேறு பக்கமாகத் திரும்பி தன் கண்களைத் துடைத்துக்கொண்டான். பாவாடை கட்டிக் கொண்டு தன் வீட்டில் சுட்ட வடைகளைக் கொண்டு வந்து கொடுக்கும் அந்த பத்து வயதுச் சிறுமி. அவள் தலையிலே செல்லமாகக் குட்டும் பதினைந்து வயதுச் சிறுவன். எல்லாமே இப்போது நடந்தது போலவே இருக்கு!
ரத்தினம் போய்விட்டான். ‘கூத்து’ கோவிந்தன் ஏழெட்டு ஆப்பிள் பழங்களோடும், ஒரு தயிர்ச்சாதப் பொட்டலத்துடனும் வந்தான்.
கனிகளை கையில் வைத்துக்கொண்டே நின்றான். மணிமேகலையை பணிந்து பார்த்துக்கொண்டே நின்றான். இதற்குள் ரயில் வந்துவிட்டது. ‘கூத்து’ கோவிந்தன் ‘லேடீஸ்’ கம்பார்ட்மென்டில் ஏறி, ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டான். மணிமேகலை அங்கு போய் தன்னை முடக்கிக் கொண்டாள். “அரிச்சந்திரன் ஜெயிக்காம போகல. திரெளபதி தேவி முடியை முடியாமல் போகல. கண்ணகி எரிக்காம போகல. கவலப்படாதிங்க தங்கச்சிம்மா”. என்று அப்போதும் மரியாதையுடன் முறை செப்பினான் கோவிந்தன்.
இதற்குள் ரத்தினமும் வந்துவிட்டான். கையில் பழங்கள். அவற்றை அவளிடம் கொடுத்துவிட்டு, பையில் இருந்த டிக்கெட்டை எடுத்து ஜன்னல் கம்பிகள் வழியாகக் கொடுத்தான்.
‘சிக்னல்’ விழுந்தது. ரயில் சத்தம் போட்டது. பிறகு மெல்ல நகர்ந்தது. வேக வேகமாக நகர்ந்தது. அதனுடன் ஒடிய ரத்தினம், ஒரு பொட்டலத்தை உள்ளே எறிந்தான். “பொட்டலம் ஜாக்கிரதை” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்பே ரயில் ஒடியது. மணிமேகலையின் கண் முன்னால் அவர்கள் மறைந்து மறைந்து மங்கலானார்கள். அப்படியே தன் பிறந்த ஊரின் முகப்புக்குள் அவர்கள் போவது போலவும், அவர்களே அந்த ஊர் என்பது போலவும் அவளுக்குத் தோன்றியது.