இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 14
அவள் கொடுத்த அதே தங்க வளையலும், ஐந்து பத்து ரூபாய் நோட்டுக்களும் அதில் இருந்தன!
எழும்பூர் ரயில் நிலையத்தில், முன்பு எந்த இடத்தில் வந்து நிற்குமோ அந்த இடத்தில்தான் அவள் இருந்த பெட்டி வந்து நின்றது. ஆனால் அன்று எவன் எந்த இடத்தில் நின்று கையை ஆட்டினானோ அந்த இடம், அவளைப் பொறுத்த அளவில் காலியாகவே இருந்தது.
மணிமேகலை எல்லோரும் போகட்டும் என்பதுபோல் காத்திருந்தாள். வெளியே வெறுமை நிரம்பியதால், அவள் உள்ளேயே கண்களை விட்டுக் கொண்டிருந்தாள். ஆரவாரம் ஒய்ந்து கொண்டிருந்தபோது அந்த ஒய்ந்து போனவளும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு வெளியே இறங்கினாள். திடீரென்று பழக்கப்பட்ட குரல் ஒன்று, சிரிப்புக்கும், கும்மாளத்துக்கும் இடையே கணிரென்று ஒலிப்பது கண்டு அவள் திரும்பிப் பார்த்தாள்.
வெங்கடேசன் தன் மனைவியுடனும் மைத்துணிகளுடனும் இறங்க, மணமக்களுக்கு மாலைகள் போடப்பட்டன. ரோஜாப்பூ செண்டுகள் கொடுக்கப்பட்டன. சில ஆடவர்கள், அவனை முதன்முறையாகப் பார்ப்பது போல் நிமிர்ந்து பார்த்தார்கள். கை தட்டல்கள்! கை குலுக்கல்கள்! கண் சிமிட்டல்கள்! அவர்கள் ஒரு பெரிய காரை நோக்கி நடந்து கொண்டிருந்தார்கள். “மாப்பிள்ள! அவள் கையைப் பிடிங்க!” என்று செல்லமான ஆக்ஞை. மணப்பெண்ணின் செல்லமான சிணுங்கல். மணமகனின் முறுவல்.
மணிமேகலை சூட்கேஸை வைத்து தன்னை மறைத்துக் கொண்டாள். இதே ரயில்தான் இவர்களையும் சுமந்து வந்திருக்கிறது. மணப்பெண் அழகாகத்தான் இருக்கிறாள். சென்னைக் கல்லூரியில் படித்த பட்டதாரிப் பெண்ணாம். நீண்டு குவிந்த கைகள்; நிம்மதி பேசும் கண்கள்; எடுத்து முடிந்த கொண்டை, தலைமைக்குரிய தோற்றம்; இரு பக்கமும் மச்சங்கள் கொண்ட சிப்பி வாய்; படிந்த முடி, பணிந்த நோக்கு உறுதி காட்டும் தோரணை; உவகை காட்டும் புன்முறுவல்; கடைந்தெடுத்தது போன்ற கழுத்து. ‘வெங்கடேசத்தான்’ கொடுத்து வச்சவர். ஆனால் நான். நான் கெடுத்துத் தொலைத்தவள்.
மணக்கோஷ்டி தன்னைக் கடந்தபோது மணிமேகலையின் உடம்பு ஆடியது. மெல்ல நகர்ந்து பின்பு விறுவிறுப்பாய் நடந்து பிளாட்பார படியருகே தன்னைக் கொண்டு போய் மறைத்துக் கொண்டாள். அவர்கள் மறைந்து விட்டார்கள்.
மறைந்தவள் சிறிது நகர்ந்தாள். திடீரென்று பையன் ஞாபகம் வந்தது. ஞாபகம் என்று சொல்வதுகூட தவறு. நாடி நரம் பெங்கும் ஊனுடம் பின் அணுவெங்கும் ஊடுறுவி உட்பாய்ந்து நின்ற அந்தத் தாய்ப்பாசம், இப்போது மொத்தமாகத் திரண்டு இதயத்தை அழுந்தப் பிடித்தது. மணிமேகலை எல்லாவற்றையும் மறந்தாள். எதிரே வந்த வண்டிகளைத் தாண்டி, தான் போன திசையில் போன கார்களைவிட வேகமாக ஒடி வெளியே வந்தாள்.
பிள்ளையைப் பார்க்க வேண்டும் ! கண்ணோடு கண்ணை உரச வேண்டும்! ‘என் கண்ணே! என் ராசா ! கலிதீர்க்கும் தெய்வமே! இதோ வாரேண்டா! இனிமேல் நீ அழவேண்டியது இல்லடா... இல்லடா!’
அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து, அவள் படுவேகமாக நடந்தாள். உச்சி வெயில் அவளுக்கு உறைக்க வில்லை. கொட்டிய தார் ரோடு, அந்த செருப்பில்லாக் கால்களைச் சுடவில்லை.
ஒதுங்கிய இடத்தில் ஒய்யாரமாக இருந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் அவள் மூச்சு விட்டாள். வந்த வேகத்தில் ஜன்னலைப் பார்த்தாள். என் பையன் எங்கே? எங்கே? அது பூட்டிக் கிடந்தது. கதவைப் பார்த்தாள். பெரிய பித்தளைப் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. இரும்புக் கேட்டைத் திறக்கப் போனாள். அது சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தது.
'என்ன இதெல்லாம்? எங்கே போய்விட்டார்கள்? ஒருவேளை என் பிள்ளைக்கு சந்திரமதியின் லோகிதாசன் போல்.’
இதயத்தைப் பிடித்துக்கொண்டவள் போல், அவள் சற்று குவிந்து முழங்கை முன் மார்பில் பட்டபோது 'கம்பவுண்டர் மணி வருவது கண்ணில் பட்டது. தன்னை நோக்கி வந்தவனை நோக்கி அவள் ஓடினாள்.
“என் பையன் எங்கே?”
“எப்போ வந்தீங்க?”
“என் பையன் எங்கே?”
"“சொல்றேம்மா. பெரிய கதையே நடந்துட்டு.”
"என் பையன் கதையச் சொல்லுங்க."
"பையன் நல்லாத்தான் இருக்கான், ஒங்கள நினைச்சி இங்க அழுதது எனக்கு அங்கே கேட்கும். சதா அம்மாங்க தான்; மற்றபடி நல்லாத்தான் இருக்கான்." மணிமேகலை சற்று நிம்மதியுடன் அவனைப் பார்த்தாள். பிறகு சாவகாசமாக, நின்று நிதானித்துப் பேசலாம் என்று நினைத்தவள் போல் தன் வீட்டை நோக்கி நடந்தாள். அவன் தன்னோடு இணையாக நடந்தபோது, இவள் சிறிது விலகி நடந்தாள். இருவரும் அந்தப் பெரிய வீட்டின் வெளிப்பக்கம் நின்றார்கள்.
மணி ஒரு யோசனை சொன்னான். “இந்தச் சுவர. சிரமப்படாமலே தாவிடலாம்.”
மணிமேகலை அதை அங்கீகரிக்காதவள்போல், தலையைப் பக்கவாட்டில் ஆட்டினாள். அவன் பேசப் போவதை கேட்கப் போகிறவள் போல் காதுகளை கூர்மை யாக்குபவள்போல், முகத்தை குவித்துக் கொண்டாள். ‘கம்பவுண்டர்’ மணி பேசாமல் இருந்தான். அவளால் அப்படி இருக்க முடியவில்லை.
“பாமாவுக்குக் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?”
“பாமாவுக்கும் ஆயிட்டுது!”
“இவங்கல்லாம் எங்க போயிருக்காங்க?”
“திருப்பதிக்கு.”
“சாமி கும்பிடவா? பரவாயில்லியே! மாமா போக மாட்டாரே?”
“வெங்கடாஜலபதிக்கு அடுத்தபடியா அவரோட ஆசீர்வதம் வேணுமில்லையா?”
“நீங்க என்ன சொல்றிங்க?”
“சொல்றேன் மனச கல்லாக்கிக்கங்க!”
“உம்...”
“ஒங்க புருஷனுக்கு ராமபத்திரன் கன்னிகாதானம் செய்றார்.” “வசந்தியையா?”
“ஆ...ஆமாம். இந்நேரம் கல்யாணம் முடிஞ்சிருக்கும்.”
மணிமேகலைக்கு தலை சுழன்றதோ இல்லையோ, எதிரே இருந்த எல்லாப் பொருட்களும் சுழல்வது போலிருந்தன. எங்கே இருக்கிறோம் என்ற இடமோ, என்ன பேசினோம் என்ற பொருளோ, என்ன விளைவு என்ற ஏவலோ-எதுவும் புரியாமல் அதே சமயம் எல்லாம் புரிந்ததுபோல் தோன்றியது. மாவிலைத் தோரணப் பந்தலில் ஐயர் மறையோத கொட்டு மேளம் கொட்ட அப்பா அகம் மகிழ்ந்து நிற்க ஜெயராஜ் அவள் கையைப் பிடிக்கிறான். விடமாட்டேன் என்பதுபோல் பிடிக்கிறான். பிடிக்குள்ளேயே அடிவிரலால் அவள் கையை அழுத்து கிறான். மங்களப் பெண்கள் குலவையிடுகிறார்கள். தங்கம்மா பாட்டி ‘என் தங்கமே’ என்கிறாள். “ராம-சீதா கல்யாணத்தை பார்க்க முடியலியே என்ற குறை இன்னையோட தீர்ந்து போச்சு” என்கிறான் ‘கூத்து’ கோவிந்தன்.
இதோ இப்போதான் நடக்குது. இங்கேயே நடக்குது. அதோ மேளச் சத்தம். அதோ அப்பா. இதோ ஒரு மஞ்சள் கயிறு. என் பக்கத்திலேயே அவரு கையை அவர் பிடிக்க கமல முகம் நாண் சிவக்க இதோ இப்போதான் அம்மி மிதித்துவிட்டு மணப்பந்தலைச் சற்றி வருகிறோம்.
இது எப்படி இதுக்குள்ள முடிந்தது? ராவணன் பிறந்ததை தூங்கி எழுந்த உடனேயே கேள்விப்பட்ட பிரம்மா, பல் தேய்க்கும்போது, பத்துத்தலை ராவணன், இறந்ததுபோல ஆயிட்டே... காலக் கோளாறு, காலத்தை நெருக்குமோ? காலத்தின் முன்னால் போனதெல்லாம் கண்முன்னால் வந்து மறுபிறவி எடுக்குமோ?
கால மயக்கத்தில் கடந்த காலமும், நிகழ்காலமும் இரண்டறக் கலக்க எது துவக்கம், எது முடிவு என்பதை அறியமாட்டாது அவள் மயங்கினாள். பிறகு மயக்கம் தெளிந்தவள்போல் மங்கிய பார்வை மாமூலுக்கு வந்தவள் போல் அவள் எதிரே நின்றவனைப் பார்த்தபோது, அவன் காபி டம்ளரை நீட்டிக்கொண்டு நின்றான். எப்படி ‘காபி’ வந்தது? எங்கிருந்து வந்தது?
மணிமேகலை, சுயமேகலை ஆனாள். எதிர்பார்த்திருந்த ஒன்று எப்படியோ நடக்கும் என்று நினைத்தது, இப்படி நடக்கும் என்று அவள் நினைக்கவில்லை. அவள் தன் தங்கத்தாலியை சுண்டிப் பிடித்தாள். அது பாம்பு மாதிரி அவளைப் பற்றியது.
“சரி. எங்கம்மா தங்குறது?”
“என்ன சொன்னிங்க?”
“வெயிலாய் இருக்கு வீதியில நின்னா எப்படி?”
“இதுதானே நான் இருக்க வேண்டிய இடம்.”
“அத அப்புறமா யோசிக்கலாம். இப்போ என் ரூமுக்கு வேணுமுன்னால் போவோமா?”
மணி லேசாக அவள் கையைத் தொட்டான். அவளும் சுரனை இல்லாதவள்போல் அவன் கையை ஆதரவாகப் பிடித்துக்கொண்டே எழுந்தவள், பிறகு அந்தக் கரத்தை உதறிவிட்டுக் கொண்டே நடந்தாள்.
மணி தன் அறையைத் திறந்தான். நல்ல வெயில் சமயம் என்பதால் யாரும் பார்க்கவில்லை. மணிமேகலை அங்கே வந்து கீழே உட்கார்ந்து, கட்டிலின் விளிம்பில் இரண்டு கைகளையும் ஊன்றிக்கொண்டு முதுகை கட்டில் சட்டத்தில் சாத்திக்கொண்டு தலையை அங்குமிங்குமாக ஆட்டினாள்.
மணி கதவைச் சாத்தப் போனான். அவள் ஒரளவு சுய பிரக்ஞை பெற்றவளாய் அவனை வினாவுடன் பார்த்தபோது மணி, “எதிர் வீட்ல இருக்கறவங்க பார்த்தால் தப்பா நினைப்பாங்கன்னுதான்.” என்றான். மணிமேகலை தன்னையே தன்னுள்ளே தாக்கிக் கொண்டாள். சூதுவாதில்லாத மனிதர்.
ஒரு மணி நேரம் அப்படியே ஒடியது. அவள் வெறித்த பார்வை திரும்பாது அப்படியே சாய்ந்திருந்தாள். மணியும் அதிர்ந்து போனவன்போல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்கு ரத்தினம் சொன்னது நினைவுக்கு வந்தது. அதுகூட தவறு. அவளோடு அந்தக் கணத்தில் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
தள்ளி வைத்தவனை நான் ஏன் தள்ளி வைக்கக் கூடாது? பிடிக்காதவனிடம் ஏன் பிச்சைக்காரிபோல் இருக்க வேண்டும்? தாலியை அறுத்துப் போட்டு விடலாமா? எனக்கு வழி சொல்லிட்டு, அப்புறமாய் ஒன் ரெண்டாந்தர பெண்டாட்டியுடன் கொஞ்சுடான்னு கேட்கலாமா? அந்த வசந்தியை விரட்டியடிக்கலாமா? வேண்டாம்! இது, என் மகனுடைய எதிர்காலம் சம்பந்தப் பட்ட விவகாரம். அவன் நல்லா இருக்கணும். நல்லா படிக்கணும். நான் கெட்டாலும் அவன் கெடக்கூடாது. அவன் அப்பா மாதிரியே எஞ்ஜினியராய் வரணும். "சீச்சி. எஞ்ஜினியராய் வேணு முன்னா வந்துட்டுப்போவட்டும். ஆனால் அந்த வஞ்சகணை மாதிரி வரவேண்டாம். அந்த அடுத்துக் கெடுத்த பாவி மாதிரி ஆகாண்டாம். என்ன செய்யலாம்? என்னால கட்டிக் கொள்ளவும் முடியல. வெட்டிக் கொள்ளவும் முடியலியே. இங்கேயே இருந்துடலாமா? வேலைக்காரியாவே இருந்துட லாமா? வேண்டாம். நான் படும் பாட்டை என் மகன் கண்டு, அவன் பிஞ்சு மனம் பழுத்துவிடக் கூடாது. காய்க்காமலே பழுக்கக் கூடாது.
“அப்படின்னா, என்ன செய்யலாம்? இங்க இருக்க முடியாது. இருக்கக் கூடாது. எங்கேயாவது ஒடிடணும். என் பிள்ள இப்போ கொஞ்சம் என்னை மறந்திருப்பான். அவங்க வாரது வரைக்குமகாத்திருந்து அவன் கண்ணில் என் முகத்தைக் காட்டி, அப்புறம் அதை மறக்கதுக்காக அவன் ஒரு மாசம் அழக்கூடாது. என் பிள்ள அழவே கூடாது.”
மணிமேகலை நிமிர்ந்து நின்றாள். ஓராண்டு கால பிரச்னைக்கும் ஒருகண தீர்மானம் தீர்வாகி விடுவது போல், அவள் இப்போது தன் நோக்கையும், போக்கையும் தீர்மானித்துக் கொண்டாள்.
“மணி! மெட்ராஸ்ல ஏதோ ஒங்களுக்கு ஒரு அனாதை விடுதி இருக்கதாச் சொல்லுவிங்களே பேரு என்ன?”
“மணிமேகலை விடுதி!
“நல்ல பொருத்தந்தான். என்னை, இப்பவே உங்களால கொண்டுவிட முடியுமா?”
“ஆர அமர யோசிக்கலாம். இன்றையப் பொழுத இங்கேயே கழியுங்க. நாளைக்கு அந்த ஸ்கவுண்ட்ரல்ஸ் வந்துடுவாங்க. அப்புறமாய் யோசிப்போம். நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யத் தயார். ஆனால் இன்னைக்கி வேண்டாம். நான் வேணுமானால் வெளில படுத்துக்கிறேன்.
“அய்யோ மணி. நான் அதுக்காவச் சொல்லல. உங்களச் சந்தேகப்பட்டால் என் நெஞ்சுல புத்து வரும். தப்பாப் பேசுனால் வாய் அழுகிடும். நான் அதுக்காகச் சொல்லல. என்னால இங்க இருக்க முடியாது. நாளைக்கி அவங்கள பார்த்தால் ஒருவேள கொலைகூட பண்ணுனாலும் பண்ணிடுவேன். நான் இப்போ எங்கேயாவது போயாகணும். உங்களால அந்த விடுதியில் என்னை சேர்க்க முடியுமோ முடியாதோ, நீங்க வந்தாலும், வராட்டாலும் நான் போய் விடுதி விடுதியா தட்டப் போறேன்.”
“சரி உங்க இஷ்டம்.”
“உம்; சீக்கிரமா புறப்படுங்க.”
மணி தலையை வாரிக் கொண்டான். அவன் வாரி முடியவில்லை. இருந்தபடியே எழுந்தாள். சூட்கேஸை எடுத்துக் கொண்டாள். இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசாமல் நடந்தார்கள். மணிமேகலை தன் முன்னாள் வீட்டுக்கு முன்வந்ததும் விம்மினாள். அந்த அறை, அவருடன் உறவு கொண்ட அறை, அதோ அந்த இடத்தில் தான் லேடி டாக்டர் பெர்க்னன்ஸி டெஸ்ட் நடத்தினார். அதோ அந்தப் படியைப் பிடித்துதான் என் பிள்ள முதன் முதலாய் எழுந்தான். உடனே நான் ‘பாருங்க. பாருங்க. பயலைப் பாருங்க’ என்று கத்தினேன். எல்லோரும் வந்து பார்த்தார்கள். என் பிள்ளய எடுத்து உச்சி மோந்தார்கள்.
அவள் சிறிது நடந்து நடக்க மனமில்லாமல் திரும்பி வந்து வீட்டின் முன்னால் வந்து நின்றாள். இந்த சின்ன அறையில்தான் என்னை நானே ஒதுக்கிக் கொண்டேன். அந்தப் பெரிய படிக்கட்டில் நின்றுதான் அவர் எனக்கு கையுரை கொடுத்தார். அந்த தளத்துல நின்னுதான், வசந்தா அந்தப் பாவியோட கொஞ்சுனாள். இதோ இப்போ நிக்கனே... இதே இடத்துலதான் அந்தக் கார் நின்னுது. இதுல நின்னுதான் வசந்தியும், மிஸ்டர் ஜெயராஜும் நெருங்கி உட்கார்ந்திருக்க, கார் புறப்பட்டது.
மணிமேகலையும் புறப்பட்டாள். இனிமேல் இப்போதைக்கு இங்கே வேலையில்லை. தோன்றிய வேகத்தில் நடந்தாள். தெரிந்த இடமெல்லாம் வழியாக, தெரியாத ஒன்றை நோக்கி அவள் வேகவேகமாக நடந்தாள். மணியால் அவளுடன் இணையாக நடக்க முடியவில்லை. ஒடிப் பார்த்தான். மூச்சு இளைத்தது. பிறகு பின்தங்கி நடந்தான்.
நல்ல வேளையோ, கெட்ட வேளையோ எக்ஸ்பிரஸ் ரயில் வண்டி நின்றது. இருவரும் ஏறிக் கொண்டார்கள். எதிரெதிர் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள்.
சென்னைக்கு வந்தபோது மணி மாலை நாலாகி விட்டது. இருவரும் பாரிமுனை வந்து அங்கிருந்து பஸ் ஏறி அண்ணா சதுக்கம் வந்தார்கள். அங்கே கூட்டம் அதிக மாய் இருந்த இடத்தில் அவள் அமர்ந்தாள். சிறிதுநேரம் நின்றுகொண்டிருந்த மணி அவளருகே உட்கார்ந்தான். மணிமேகலை ரசாயன ரீதியில் அவனிடம் கேட்டாள்:
“விடுதி எங்க இருக்கு ?”
“அடையாறுல”.
“போவோமா ?”
“நீங்க இங்கயே இருங்க. நான் போய் விசாரிச்சிட்டு வாரேன்.”
“இதுல விசாரிக்க என்ன இருக்கு? எப்படியாவது சேர்ந்திடணும்."
“அவசரப்படாதிங்க. நான் போய் பக்குவமாய் பேசிட்டு வாரேன்.”
‘கம்பவுண்டர்’ மணி போய்விட்டான். மணிமேகலை வருவோர் போவோரைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஜோடிகள் பக்கமாகப் போய் அவர்களின் நெருக்கத்துக்கு குறுக்கே நின்று ‘மிளகு வட ஸார். வேர்க்கடல ஸார்’ என்று தகர டின்னை வைத்துக்கொண்டு தகாது நடந்து கொள்ளும் வியாபாரச் சிறுவர்கள். சாப்பாடு சரியாகக் கிடைக்காததால், கர்ப்பிணிப் பெண்கள்போல் வயிறு புடைக்க நின்ற குழந்தைகள். சக்கரவண்டியில் பஜ்ஜி சுடும் பையன்கள். கரும்புச்சாறு பிழியும் இளைஞர்கள். சந்தேகத்துடன் தன்னைப் பார்க்கும் சிவப்புத் தொப்பிகள் சந்தேகமில்லாமல் தன்னையே வாடிக்கைக்காரி மாதிரி நினைத்து, முகந்துருத்தி முறைக்கும் முரடர்கள்-இத்தனை பேரையும் அவள் வேடிக்கையாகப் பார்த்தாள்; வாழ்க்கை வேடிக்கையாகி விட்டால், வாழ்வதும் வேடிக்கைபோல் தெரியுமோ? கஷ்டங்கள் அடுக்கடுக்காய் வந்தால், அந்தக் கஷ்டமே ஒரு ரசனையாகி விடுமோ?
ரசனையுடன் பார்த்த அவளுக்குக் கொஞ்சம் பயம் பிடித்தது. அந்த முரடர்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். பத்திரிகைகளில் வேறு, பலவிதமான செய்திகள் வருகின்றன. இவள் பயந்துபோய் எழுந்தபோது மணி வந்துவிட்டான். இந்த மணியால் இவ்வளவு பெரிய விஷயத்தை எப்படி இவ்வளவு சீக்கிரமாய் முடிக்க முடிந்தது? சரியான மணி! மணியான மணி!
மணி பேசாமல் சிரித்துக்கொண்டே நின்றான். அவள் அவசரத்துடன் கேட்டாள்:
“பழந்தானே?”
“இன்னைக்கு காய். நாளைக்குப் பழம்!”
“என்ன சொல்றிங்க?”
“மணிமேகலை விடுதி வார்டன் பம்பாய் போயிருக்கார். நாளைக்குக் காலையில வந்துடுறாராம். வந்ததும் சேர்ந்துடலாம்!”
“அப்படியானால் இன்னையப் பொழுதை எப்படிக் கழிக்கது?”
“என்ன பண்றது? ஏதாவது ஒரு லாட்ஜில தங்க வேண்டியதுதான்.” “ஊருக்குப் போயிட்டு நாளைக்கு வரலாமா ?”
“அங்கேயும் ஒங்க வீடு பூட்டித்தானே இருக்கு.”
மணிமேகலை எதுவும் பேசாமல் கீழே வைத்திருந்த சூட்கேஸை எடுத்தாள். ‘போலாமா’ என்றாள். கிட்டே வந்த டாக்ஸிக்காரர்களை கடந்து எதிரே வந்த ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி பழைய பஞ்சாங்கம் மாதிரி இருந்த எதோ ஒரு லாட்ஜுக்குப் போனார்கள். லாட்ஜ் பையன்களுக்கு மணியைத் தெரியும் போலுக்கு! கண் சிமிட்டிச் சிரித்தார்கள். அவளுக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. ‘ரூம் பாய்’ ஒரு அறையைத் திறந்து கொடுத்தான்.
கட்டிலில் வந்து உட்கார்ந்த மணிமேகலை சூட் கேஸைத் திறந்தாள். அங்கே துணிகளுக்கு அடியில் இருந்த பாமாவின் கடிதங்களை எடுத்து குவியலாக்கிக் கொண்டு “ஓங்ககிட்ட வத்திப்பெட்டி இருக்கா?” என்றாள். மணி, உரிமையோடு அருகில் வந்து அவள் கையைப் பற்றி ஒரு கடிதத்தை பிடுங்கிப் படித்தான். படித்துவிட்டு, “அடடே இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிறமாதிரி இருந்த இந்த பாமாவா இப்படி எழுதியிருக்காள்? ‘ஒங்கள கன்னத்தில் முத்தமிடத் துடிக்கிறேன்’. பரவாயில்லியே... முத்தங் கொடுக்கிற அளவுக்குப் போயிட்டாளா? முத்தம் நல்லாதான் இருக்கும், இல்லியா? இதுல தப்பில்ல. செக்ஸ் ஒரு பயாலஜிகல் நீட்... அதை எப்படி வேணுமுன்னாலும் நிறைவேற்றலாம்!”
இந்த மணியின் பேச்சு, ஒரு மாதிரியாகத் தெரிந்தது. அரக்கோணத்தில் ஒரு மணியும், இங்கே இன்னொரு மணியும் இருப்பதுபோல் அவளுக்குத் தெரிந்தது. இங்கே இருக்கும் மணியே, நிஜமான மணி. அவள் சென்ட்ரலில் ரயிலைவிட்டு இறங்கியதும் அவள் முதுகைத் தட்டி ‘புறப்படலாமா’ என்று சொன்னதும் கடற்கரையில் விடுதி தேட அவன் தயங்கியதும், இப்போது அவள் வாழ்க்கையில் எதுவுமே நடக்கவில்லை என்பதுபோல், பாதி அட்டகாசமாகவும் மீதி வேடிக்கையாகவும் பேசுவதும் அவளுக்கு திட்டமிட்ட சதிச் செயல்களாகத தெரிந்தன. என்றாலும் கலவரத்தைக் காட்டிக்கொள்ளாமல் அவன் கையில் இருந்த காகிதத்தை வெடுக்கெனப் பிடுங்கி காகிதக் குவியலோடு சேர்த்து அந்தக் குவியலை சுக்கு நூறாக்கி பாத்ரூமிற்குள் கொண்டுபோய் போட்டாள்.
மணி சற்றுக் கோபத்தோடு பேசினான்.
"என்ன இது? ஒவ்வொரு லட்டரும் ஒரு லட்சம் தாளுமே. நமக்கு நாளைக்கு உதவக்கூடிய காகிதங்களை இப்படியா பண்றது? பாமாவை ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி வச்சிருக்கலாமே. சரி போனால் போவட்டும். படுக்கலாமா? லைட்ட ஆப் பண்ணட்டுமா? ரூம்பாய் ஒங்க சம்சாரமான்னு கேக்கான். நம்ம ரெண்டு பேருக்கும் அவ்வளவு பொருத்தம். ரிஜிஸ்டர்லகூட ஹஸ்பண்ட் அண்ட் ஒய்ப்புன்னுதான் எழுதியிருக்கேன். என்ன பண்றது? நாட்ல நடக்கிற தப்புக்கு இந்தத் தப்பு பெரிசில்ல. ஒரு தப்பில் இன்னொரு தப்பு பிறக்குது. இந்தப் புடவ ஒனக்கு ரொம்ப அழகாய் இருக்கு"
மணிமேகலை திடுக்கிட்டாள். அட கடவுளே...
‘இவன் ஒரு ஜென்டில்மேன் அயோக்கியன்.’ இனிய சுபாவம் இவனுக்கு ஒரு கபட நாடகம். அபலைப் பெண்களின் சிரமங்களைப் புரிந்துகொண்டு, அந்தச் சிரமங்களால் தானும் சிரமப்படுவதுபோல் அவர்களை நம்ப வைத்து, அவற்றிற்குப் பரிகாரங்களையும் கொடுத்துக் கொண்டே, அவர்களின் கற்பை எடுப்பது தெரியாமலேயே எடுப்பவன். இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான யோக்கியர்களால்தான், பெரும்பாலான பெண்கள் கெட்டுப் போகிறார்கள். அவர்களே கெட்டுப் போகும்படி செய்யும் இந்த ‘ஒயிட் காலர்’ வித்தைக்காரர்கள், கெடுப்பதற்கும் தயாராக இருப்பவர்கள். இவன் கொடுத்த மாத்திரைகள் வசிய மாத்திரைகளைப் போன்றவை. பெண்கள் முரட்டு மீசையும், பரட்டைத் தலையும் உள்ளவர்களைவிட, இப்படிப்பட்ட சுருட்டை முடியும், கிருதாவும் உள்ள கீழ்த்தரமான மேல்தர போர்வழிகளிடந் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த மடையன் என் சம்மதம் கிடைத்துவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் இப்படிப் பேசுகிறான். இவனிடம் பகைமை பாராட்டாது பக்குவமாகப் பேச வேண்டும்.’
“அந்த விடுதில இடம் கிடைக்குமா?”
“அடடா! எந்தச் சமயத்துல எதைப் பேசணுமுன்னு தெரியாதா?”
“அந்த விடுதி எங்க இருக்கு? இடம் மறந்துட்டு”
"எட்வர்ட்ஸ் எலியட்ஸ் ரோட்ல.”
அடையாரை எட்வர்ட்ஸ் எலியட்ஸ் ரோடாய் இடமாற்றம் செய்த அந்த ஆள்மாறாட்டக்காரனை அளவெடுப்பதுபோல் அவள் பார்த்தாள். எப்படி தப்பிப்பது? ஒண்னும் முடியாட்டால் ரத்தின அண்ணன் சொன்னது மாதிரி கொலை பண்ணிட வேண்டியதுதான். அதோ நல்ல வேளையா, ஒரு இரும்புத்துண்டு இருக்கு. விடுதியும் கிடைச்சிடும்.
ஜெயிலும் ஒரு விடுதிதானே!