இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 16

16
ரு வாரம், ஒரு வருடம் போல் யுகம் யுகமாக ஓடியது.

மணிமேகலைக்கே ஆச்சரியம். தந்தையின் வீட்டிலும், கணவனின் வீட்டிலும், அங்குள்ளவர்களின் முகச்சுழிப்புக்கும், ஜாடைப் பேச்சுக்கும், தொட்டால் சுருங்கி செடி போல துவண்டவள், இப்போது கிட்டத்தட்ட பாதிப் பைத்தியம்போல் நடந்துகொள்ளும் இந்த காரியதரிசியின் கையைப் பிடித்தவளான காமாட்சியின் இடிபோன்ற ஏச்சுக்களுக்கு ஒரு இடிதாங்கியாய் போய்விட்டதை நினைத்து வியந்தாள். ஒருவேளை தனக்கு ரோஷம் போய்விட்டதோ என்றுகூட சந்தேகப்பட்டாள். இல்லை. இல்லை. மனிதர்களின் பேச்சுக்கள் முக்கியமல்ல; அதன் பின்னணியும் முன்னணி நோக்கமுந்தான் முக்கியம். 'டார்லிங்' என்ற வார்த்தையைவிட "என்னடி இழவெடுத்த பய மவள என்ற வார்த்தைகள், மாறாத-மாற்றமுடியாத பேரன்பைக் காட்டுவதாகக் கூட இருக்கலாம். அதோடு பிற மனிதர்களைப் புரியப் புரிய நம் மனமும் நமக்குப் புரிகிறது. இதனால்தான் மகான்கள் 'சுகமும் துக்கமும் உன்னிடமே உள்ளன என்று உரைத்தார்களோ? இதனால் கல்லூரியில் பாடமாக வந்த 'பாரடைஸ் லாஸ்ட்'டில் ஒரு பகுதியில் 'மைன்ட் இஸ் ஹெல் ஆப் ஹெவன் அண்ட் ஹெவன் ஆப் ஹெல்' என்று படித்தது அவளுக்கு பக்கம் திறந்த பழைய புத்தகம்போல், கண்முன் தோன்றியது.

வந்த இரண்டு நாளைக்கு வளைந்து வளைந்து வேலை பார்ப்பது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. பாத்திரத் தேய்ப்பு, பக்குவச் சமையல், கடைக்குப் போவது முதலிய கணக்கில்லா வேலைகள்! மூன்றாவது நாள் சுவர்க் கடிகாரம் ஐந்து தடவை கத்தினாலும் அவளால் எழும்ப நினைத்தும் எழும்ப முடியவில்லை. பாயில் புரண்டு கொண்டிருந்தாள். திடீரென்று தலையிலும் காதுகளிலும் ஜில்லிட்ட தண்ணீரால் சிலிர்த்து எழுந்தாள். காமாட்சி, அவள் தலையில் 'தண்ணீர் அபிஷேகம்' செய்துவிட்டு காலியாக இருந்த செம்பை வைத்துக்கொண்டு காளிபோல் கத்தினாள்.

"ஒன் மனசில் என்னடி நினைக்கிறே? பொறுப்பிருந்தா இப்டி தூங்குவியாடி ? ஒன்பது மணிக்கெல்லாம் கோவிலுக்குப் போகணுமுன்னேன். இப்படித்துங்குனால் போக முடியுமாடி ? இன்னுமாடி இருக்கிற ? ஒங்களெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். அவரு இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு வாரார். ஷுட்டிங் போயிட்டு, நாலு நாளாய் நாயாய் சுத்திட்டு வருவாரு, அவருக்கு உருளைக்கிழங்குன்னா உயிரு. மார்க்கெட்டுக்குப் போகணும். இப்படியாடி தூங்குறது? தூக்கம் பிடிச்ச மூதேவி! எனக்கு ராத்திரி முழுசும் வராத தூக்கம் ஒனக்கு எப்படிடீ வரும்? எப்படி.டீ வரும்?"

முதலில் அதிர்ச்சியுற்ற மணிமேகலை பிறகு ஒரு தீர்மானத்தோடு எழுந்தாள். உரலுக்குள் தலையைக் கொடுத்துவிட்டு உலக்கை அடிக்குப் பயப்படுவதில் நியாயமில்லை. பியூஸிக்கு மேலேயே படிததிருக்கேன். பி.ஏ. முதலாவது ஆண்டு. எப்படியாவது ஒரு கம்பெனில கிளார்க்கா போகணும். டைப்ரைட்டிங் எப்படியாவது கத்துக்கணும். என் பிள்ளையை எப்படியாவது கொண்டு வந்துடனும். எப்படிக் கொண்டு வாரது? எப்படியோ அவனைக் கொண்டு வரமுடியும்.

வீட்டு வேலைகளைக் கவனித்துவிட்டு ஏழு மணிக் கெல்லாம் அவள் சற்று நிமிர்ந்தபோது "சீக்கிரண்டி சீக்கிரண்டி. மார்க்கெட்ல நல்ல உருளைக்கிழங்கு வித்துடும். அழுகுனதுதான் இருக்கும். சீக்கிரமாப் போடி, சீக்கிரம். என்னடி எருமைமாதிரி நடக்குற" என்றாள். அருகிலேயே இருந்த பாலசுப்பிரமணியர் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பியபிறகு மணிமேகலையின் கைகளைப் பிடித்துக்கொண்டு "நான் ஒரு கிறுக்கிடி. வாய் இருக்கிற அளவுக்கு மனசு கிடையாதுடி. என்னைக் கை விட்டுடாதே! ஒன்னையே திட்டணுமுன்னால் நான் எவ்வளவு பெரிய பைத்தியமாய் இருப்பேன்" என்று அழுதாள். மாலையில் நட்சத்திர வீட்டு வேலைக்காரி, காரியதரிசியின் வேலைக்காரிக்கு உத்திரவுகள் இட்டுக் கொண்டிருந்தாள். தன்னை, அந்த நடிகரின் இடத்திலும் இவளை அந்தக் காரியதரிசியின் இடத்திலும் அவளாகவே நியமித்துக் கொண்டவள்.

"ஒன் பேரு என்ன, மணிமேகலையா? போவட்டும். இந்தா பாரும்மா இனிமேல் இந்த பூந்தொட்டிகளுக்கும், செடிகளுக்கும் நீதான் தண்ணி ஊத்தணும்!" என்று சொல்லிக்கொண்டு கையிலிருந்த ரப்பர் குழாயை நீட்டியபோது மணிமேகலை அதை வாங்கிக்கொள்ள கைகளை நீட்டப் போனபோது வந்தாள் காமாட்சி. மணிமேகலையைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு "இவள் கால் தூசிக்கு நீ பெருவியாடி? நீ எப்டிடி இவளுக்குச் சொல்றது? ஒன் ராங்கித்தனத்தை எங்க வச்சுக்கனுமோ அங்க வச்சுக்கோ. இவள் என் மகளவிட ஆயிரம் மடங்கு உயர்வானவா. நீயாடி என் பிள்ளைக்கு உத்திரவு போடுற? பூந்தொட்டிக்கு தண்ணி ஊத்துறதுனர்லேயே நீ குப்பத் தொட்டில்லன்னு ஆயிடுமாடி! நீயும் ஒன் தளுக்கும் ஒன் மினுக்கும்..” என்று கத்தியபோது சில வேலைக்காரச் சிறுவர்கள் அங்கே கூடாதது போல் ஒதுங்கி ஒதுங்கி நின்று கூடியபோது "பாருங்கடா இந்த மூதேவி பண்ற வேலையை. என்னோட மணிமேகலை இவள் செய்யுற வேலையைச் செய்யணுமாம். அறிவுகெட்ட மூதேவி. நீ இதைவிட என்னச் செய்யச் சொல்லலாமுடி’ என்று சொல்லிக் கொண்டே அந்த ரப்பர் குழாயை கீழே போட்டு அதை மிதிமிதியென்று மிதித்தாள். பிறகு, "இவளையா இப்டிப் பண்ற பரவாயில்ல. நானே நீ சொன்ன வேலையச் செய்யுறேன்” என்று குழாயை எடுத்து எதையோ பண்ணி விட்டு பிறகு கை வலித்ததால் மீண்டும் அதைக் கீழே போட்டு "நானாடி ஒனக்கு வேலைக்காரி? என்கிட்டயாடி வேலை வாங்குற?" என்று சொல்லி அதை அவளாக நினைத்து மிதித்தாள்.

இன்னொரு சமயத்தில் காரியதரிசி மணிமேகலையிடம் எதையோ பேசினார். பொதுப்படையான பேச்சு. ஆனால் அதை அவர் 'டயலாக்' மாதிரி பேசிவிட்டு பிறகு அதே பாணியில் "மணி கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து தரலாமா?” என்றார். அவள் டம்ளரை நீட்டியபோது அவரது கை தற்செயலாகப் பட்டதோ அல்லது டெஸ்ட்' செயலாகப் பட்டதோ தெரியவில்லை. அவர் போனதும், ஓணான் மாதிரி அவர்கள் பார்வைக்கு அகப்படாத இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த காமாட்சி ஒரே ஒட்டமாக ஒடி வந்தாள். மணிமேகலையின் கையில் இருந்த டம்ளரை வாங்கி அவள்மீது வீசினாள். மணிமேகலை பிரமை பிடித்தவளாய் ஒதுங்காமல் நின்றபோது டம்ளர் ஒதுங்கிச் சுவர்க் கண்ணாடியை உடைத்தது. காமாட்சி குறிதவறிய கோபத்தில் குதித்துக் கொதித்தாள்.

"கட்டுன பெண்டாட்டி செத்துப் போயிட்டாள்னு நினைத்தியாடி? என் இடத்த அபகரிக்கலாமுன்னு நினைக்கியாடி? அந்த மூளகெட்ட முண்டத்தோடு, கை மேல கைபோட்டு நடக்கலாமுன்னு நினைக்கியாடி ? கொலை பண்ணிடுவேன்! அவன் கையைத் தொடுற அளவுக்கு, நீ ஏண்டி டம்ளரை பிடித்தே? வேலைக்காரியா வந்து வீட்டுக்காரியா மாறி இந்த வீட்டுக்காரியை வேலைக் காரியாய் மாற்றப் பார்க்குறியோ? நடக்காது.டி. ஓங்க ரெண்டு பேரையும் கொலை பண்ணிட்டு போலீஸ்ல சரணாயிடுவேன். ஒங்கள கொஞ்சுறதுக்கு விடமாட் டேண்டி, கொஞ்ச விடமாட்டேண்டி மணியாம் மணி. பேரைச் சுருக்குற அளவுக்கு வந்துட்டிங்களோ? அவனும், வெறுந்தண்ணி டம்ளர விஸ்கிப் பாட்டலை வாங்கிறது மாதிரி எப்படி மயங்கி வாங்குறான்! என்னமா ஏங்கி வாங்குறான்! அந்த சீமப்பண்ணி வரட்டும். ஒங்க ரெண்டு பேரையும் கோர்ட்ல ஏத்துறனா இல்லையான்னு பாரு. ஒஹோ.”

இது அதிகப்பட்சம். இனிமேல் இருப்பது, அவள் சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது மாதிரி. கோவிந்தன் வருவது வரைக்கும் காத்திருக்கலாம் என்று நினைத்தது தப்பு. பழையபடியும் தெருவுல நடக்கலாம். யாராவது நல்லவங்க கண்ணுல விழுவாங்க.

சிந்தனைச் சிரமங்களுக்குப் பிறகு மணிமேகலை புறப்பட்டாள். காமாட்சியின் பதினைந்து வயது 'பாப்பாவும்' எட்டு வயது 'அரசுவும்' அவள் கையில் இருந்த சூட்கேஸைப் பார்த்ததும் புரிந்துகொண்டார்கள். 'பாப்பா' மணிமேகலையை வாசல்படியோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டாள். "போகாத அக்கா போகாத அக்கா! மதர் ஒரு மண்ணாங்கட்டி.." என்று அவள் புலம்பியபோது அரசு உள்ளே போய் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வந்தான். காமாட்சி, நாலடியை ஒரடியாய்த் தாண்டி, நடைவாசலுக்கு வந்து, திடீரென்று குனிந்து, மணிமேகலையின் காலைத் தூக்கி தன் இடுப்புப் பக்கமாக வைத்துக் கொண்டு “என்னடி நினைச்சே” என்று பயங்கரமாகச் சொன்னபோது பிள்ளைகள் "வேண்டாம்மா. வேண்டாம் மம்மி" என்று அழுதன. காமாட்சி தன்னிடம் பிடிபட்ட மணிமேகலையின் காலில் போட்டிருந்த ரப்பர் செருப்பைக் கழட்டி மணிமேகலையை விட்டாள். அவள் ஒரு கால் செருப்போடு ஒன்றும் புரியாமல் தவித்தபோது காமாட்சி தன் கைச் செருப்பை அவளின் கைக்குள் திணித்துக்கொண்டே "இந்தாடி என்னை இந்தச் செருப்பால அடிடி! நான் ஒன்னைச் சொன்னது தப்புத் தாண்டி! நல்லா அடிடி! ஒன்னைச் சொல்லிட்டு நான் உயிரோட இருக்கதே தப்புடி நீ அடிக்க மாட்டியாடி? செருப்பை வைத்து அடிக்கமாட்டியாடி? நான் சொல்றத செய்யத்தானடி வேலைக்காரியாய் வந்தே. என்னை அடிக்க மாட்டியாடி? அவ்வளவு திமிறாடி! சரி, நானே என்னை அடிச்சிக்குறேன்...” என்று அழுதுகொண்டே மணிமேகலையிடம் திணிக்கப்பட்ட செருப்பை எடுத்து, தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள் பல தடவை. "மம்மிக்கு இப்படியாவது புத்தி வரட்டும்’ என்று நினைத்ததுபோல் பிள்ளைகள் பேசாமல் இருந்தபோது மணிமேகலை அந்தக் குழந்தையிலும் படுகுழந்தையான காமாட்சியை கட்டியணைத்து வீட்டுக்குள் கொண்டு போனாள்.

இரவில் வெளியே நட்சத்திர வீட்டு போர்டிகோவில், வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த கணவனுக்கு காமாட்சி சவாலிடுவது மணிமேகலைக்கு நன்றாகக் கேட்டது. “யோவ் சீமப்பண்ணி! ஒரு வேலைக்காரியை யாவது உருப்படியா விட்டியாய்யா! ஏய்யா ஒனக்கு இந்தப் புத்தி? பொம்புள பொறுக்கி! ஆனால் ஒண்ணு. இந்த மணி வெறும் சாதா மணியில்லய்யா, இது வைரமணி! ஒன் ஜம்பம் சாயாது. பந்தயத்துக்கு வாரியாய்யா? நீ இவளை நெருங்கிப் பாரு, இவள் கையாலயே நீ செருப்படிபடாட்டால், நான் உனக்கு என் உடம்பை செருப்பா தைத்து போடுறேன். அவள் புதுசா பிறந்திருக்கிற கண்ணகி. அவள் நொந்து பார்த்தாலே போதும், நீ வெந்து போயிடுவே! பந்தயத்துக்கு வாரீயா?”

மணிமேகலை பெருமையாகவும், வெறுமையாகவும் நெஞ்சை நிமிர்த்தி தலையைத் தாழ்த்தினாள். இதனால் இந்த காமாட்சி மீண்டும் சந்தேகப்படமாட்டாள் என்று அர்த்தமல்ல. அவள் இவளை நன்றாகப் புரிந்துவிட்டாள். சின்ன வயதில் அம்மாவை இழந்தவள். பிறகு சித்திக்காரியின் கொடுமையால் குறுகிப் போனவள். அவளுக்குப் பயந்து சென்னைக்கு ஓடிவந்து மாமா வீட்டுக்கு வந்தவள். அங்கே மாமா பிள்ளைகளின் ‘நேரப் போக்குக்கு’ கோமாளியாகவும் கோபங்களுக்கு குறியாகவும் போனவள். அழுது அழுது ஆத்திரப்பட்டு பட்டு, இப்போது அந்த ஆத்திரமும், அழுகையும் இல்லாமல் வாழ முடியாமலும், அவற்றிலிருந்து மீள முடியாமலும் போனவள். கண் நிறைந்த இரண்டு பிள்ளைகளையும் சீமைப் பண்ணி என்றாலும், சிரித்து மழுப்பும் கணவனையும் வைத்துக் கொண்டே “எனக்கு யாருமே இல்லியே, யாருமே இல்லியே காமாட்சி” என்று தன் தலையில் அடித்துக் கொள்பவள். இளமையில் ஏற்பட்ட நிர்கதியான உணர்வு அப்போது முடங்கிக் கிடந்து இப்போது முழு உருவம் பெற்றிருக்கிறது இந்த பரிதாபத்துக்குரியவள் பேசுவதைப் பாராட்டலாகாது.

மணிமேகலை காமாட்சியைக் கந்தசாமி கோவிலுக்கு அடிக்கடி கூட்டிக்கொண்டு போனாள். ஒரு சமயம் அவள் சந்நிதி முன்னே நின்று “முருகா! எனக்கு யாருமில்லன்னு நினைச்சது தப்புடா. என் மணிமேகலை இருக்காடா" என்று கரங்குவித்துச் சொன்னபோது மணிமேகலை மெய்யுருகி நின்றாள். அவர்கள் வெளியே வந்தபோது ஒரு காரில் இருந்து ஆண்களும் பெண்களுமாக அட்டகாசமாக இறங்கினார்கள். மணிமேகலை கல்லாய் நின்றாள்.

மிஸ்டர் ஜெயராஜ், மிஸ்ஸஸ் ஜெயராஜ், பாமா, அவள் புருஷன் எல்லாவற்றிற்கும் மேலாக ராமபத்திரன்.

காருக்குள்ளேயே ராமபத்திரன் கையை விட்டு இழுத்தார். அழுகைச் சத்தங் கேட்டது. பிறகு ஜெயராஜ் வந்து காருக்குள் கையை விட்டு அழுததை வெளியே கொண்டு வந்து தோளில் போட்டான். மணிமேகலையின் ஏழு வயது மகன். இளைத்திருக்கிறான். முகம் வீங்கியது போல் தோன்றியது. செத்த ஆட்டின் கண்களைப் போல் கண்கள் மங்கலாய் வெளுத்துத் தெரிந்தது.

மணிமேகலை தன் வயிற்றைப் பிடித்தாள். 'என் செல்வமே. என்று வந்த வார்த்தைகளை விரட்டிப் பிடித்தாள். ஒடப்போன கால்களுக்கு நிலத்தில் அவற்றைத் தேய்த்து உதை கொடுத்தாள்.

‘என் ராஜா. என் முத்தே. அம்மா இங்கேதான் இருக்கேண்டா. இங்கேதான் இருக்கேண்டா. அப்பா அடிக்காராடா ? வசந்தி திட்டுறாளாடா ? நல்லாச் சாப்பிடுறியாடா? நல்லாத் தூங்குறியாடா ?’

பையன் வசந்தியைப் பார்த்து ‘சித்திகிட்ட போயிட்டேன்’ என்று அப்பாவிடம் சொல்வது மணிமேகலைக்கு நன்றாகக் கேட்டது.

'என் ராஜா சித்தின்னு சொல்லாதடா. அம்மான்னு அவளைப் பார்த்து ஒரு தடவயாவது சொல்லுடா.

அப்படியாவது நீ அம்மான்னு கூப்புடுற வார்த்தையை கேக்குறேண்டா. எப்படியாவது யாரைப் பார்த்தாவது

அம்மான்னு சொல்லுடா. சித்தியைப் பார்த்து வேணுமுன்னால் நீ விரும்புறதையே சொல்லுடா. 'அம்மா கிட்ட போமாட்டேன்னு சொல்லுடா. என் நிலைமையும் அதுதாண்டா. என் கண்ணே, பரவாயில்லடா. கோவிலுக்குப் போடா. நம்ம அப்பன் முருகன் இருக்காண்டா. அவனை ஒன்னை நினைத்துத்தான் கும்பிட்டுட்டு வாரேண்டா. நாம ஒருவரை, ஒருவர் பார்க்கிற காலம் வருண்டா. வரட்டுமா? ஏய், படுவாப் பயலே! அம்மான்னு சொல்லுடா! சொல்லுடா...'

"என்ன யோசிக்கிற? போகலாண்டி!” என்று காமாட்சி சொன்னபோது அவள் முதுகுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டே பார்த்த மணிமேகலை, அப்படியே மறைந்து மறைந்து அவள் பின்னாலேயே போனாள். சிறிது தூரம் போனதும் முன்னால் போனாள். தன் பிள்ளையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அவளைப் பார்க்கப் பார்க்க, தன்னைப் பார்த்து இதேமாதிரி துடித்த அவள் அப்பாவின் ஞாபகம் வந்தது. யாருக்காக அழுவது? பெற்றவனுக்கா? பிறந்தவனுக்கா? இரண்டு பேரில் யாருக்கு அதிகமாய் அழுவது என்று போட்டியிட்டு இறுதியில் மனம் சலித்துப் போனதுபோல் அவள் போனாள். இறுதியாக அவள் திரும்பிப் பார்த்தபோது மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் ஜெயராஜ்களும், இதரர்களும் கோவில் முனைப்பில் இருந்த பையனிடம் டோக்கன் வாங்கிவிட்டு செருப்பைக் கழட்டிப் போட்டார்கள்.

வாரங்கள், ஒரு மாதமாகச் சேர்ந்தது. 'கூத்து' கோவிந்தன் அடிக்கடி வந்து கொண்டிருந்தான். அவனிடம் 'கிளார்க் வேலையைப் பற்றி அவள் பேசவில்லை. இந்த வேலையில் இப்போது அவளுக்கு ஒரு நிறைவு ஏற்பட்டது.

ஒருநாள். இதுவும் அவளை இன்னொரு விதமாக மாற்றிய மாறுபட்ட நாள்! 

கண்ணாடி பீரோவைத் துடைத்துக் கொண்டிருந்தவள் தன் முகத்தைப் பார்த்துவிட்டுத் திடுக்கிட்டாள். காதோரம் மீண்டும் ஒரு புள்ளி. இப்போது ஒரளவு அது கூர்மைப்பட்டு சிவந்திருந்தது. இன்னொரு மங்கலான புள்ளி. அப்படியானால்.

மாத்திரைகளின் நினைவு இப்போதுதான் நிஷ்டுரமாக வந்தது. இந்த வீட்டில் உண்மையை மறைக்கக் கூடாது. மறைத்தால் பாவம். தெரிவித்தால், காமாட்சி குறைந்த பட்சம் சொன்னவுடனேயாவது ஒன்று ஒப்பாரி வைப்பாள், அல்லது திட்டித் தீர்ப்பாள். நிலைமையை இப்படியே விடக்கூடாது. ஒருவேளை. இந்த சின்னஞ்சிறு செவ்வரளிப் பூக்களுக்கும் தொத்தக்கூடாது. தொற்றுமோ தொற்றாதோ இந்த குழந்தைகளுக்கு கிலி பிடிக்கக்கூடாது. காமாட்சியின் ஹிஸ்டிரியா பிரேக்டவுனாகி விடக்கூடாது. 'கூத்து கோவிந்தன் வந்ததும் அவனிடம் சொல்லி எங்கேயாவது போக வேண்டும். எந்த மடமோ, எந்த ஊரோ எப்படியோ போக வேண்டும். கோவிந்த அண்ணன் வந்தாலும் சரி. வராவிட்டாலும் சரி போயாக வேண்டும்.

இரண்டு மூன்று நாட்கள் அவள் ஒதுங்கி ஒதுங்கி பிள்ளைகளை விட்டு விலகி விலகி அவர்களையும் அம்மாவையும் பிரியப் போகிறோமோ என்று கலங்கிக் கலங்கி தவித்துக் கொண்டிருந்தாள்.

நான்காவது நாள், 'கூத்து கோவிந்தன் வந்தான். கூடவே வெங்கடேசன் வந்தான். அந்தச் சூழலிலும் மணிமேகலை ஆனந்த மயமானாளா அல்லது சோக மயமானாளா என்று சொல்ல முடியாது. எப்படியோ ஒரு ‘மயமானாள்.'

வெங்கடேசன் அவளையே வெறித்துப் பார்த்தான். 'உனக்கா. உனக்கா, என் மணிமேகலைக்கா...? என்று 

சொல்லப் போனவன் முகத்தை திருப்பி முதுகுப் பக்கத்தை நனைத்துவிட்டு "எனக்கு இன்னைக்குத்தான் தெரியும். தற்செயலாய் இவனைப் பார்த்தேன்," என்று சொல்லி விட்டு ‘கவலப்படாத, நானிருக்கேன். இன்னையில் இருந்து உன் கவலையை நான் வாங்கிக் கொண்டேன். இனிமேல் நீ கவலைப்படக் கூடாது. புரியுதா?.” என்றான். அவளை வாங்க முடியாது போனாலும் அவள் கவலைகளை வாங்கிக்கொண்ட திருப்தியோடு சோகமாகப் புன் முறுவலித்தான்.

மணிமேகலை விம்மினாள். கையிலிருந்த ஒரு கரண்டி அப்படியே கீழே விழுந்தது. அவள் புலம்பினாள்.

"அத்தான்! என் அத்தான்! என்னை நீங்க மறக்கலியே மறந்திருக்கக் கூடாதா? மறக்கலியே!”

வெங்கடேசன் இப்போது சுயத்துக்கு வந்துவிட்டான். ஆனால் அவன் பதில் கம்பீரத்தோடு வந்தது.

"என்ன மணிமேகலை. 'அன்பு ஒரு சக்தி. அதன் ரூபம் மாறலாமே தவிர அந்த சக்தி மாறாதுன்னு நீயே சொன்னதை மறந்துட்டியே. நான் ரூபம் மாறியிருக்கேன். அவ்வளவுதான். ஒனக்கே இந்த நிலைமைன்னா இயற்கையின் சூட்சுமத்தில் ஏதோ ஒன்று இருக்கும்மா. கடவுள், உலகின் பாவங்களைத் தாங்குவதற்கு தைரியசாலிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் சுமக்கக் கொடுப்பாராம். ஒனக்கு வந்த நோய் ஒரு சிலுவைக் குறி. எதோ ஒரு காரணத்திற்காக வந்த திரிசூலம். ஒனக்குப் புரியுதோ, இல்லியோ எனக்குப் புரியுது!”

அவளும் புரிந்தவள் போல் கம்பீரமாய் நின்றாள்.