இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 17

17
செங்கை மாவட்டத்தில் சமூகத்தில் இருந்து ஒதுக்கி யவர்களுக்காக ஒரு ஒதுங்கிய பகுதியில் கட்டப்பட்ட இல்லம். மரமும் செடியும் மைனாவும் கிளியும் மண்டிக் கிடந்த மலைப்பகுதி. உலகை விட்டு ஒதுங்கியதுபோல் தோன்றிய அந்தப் பெரிய கட்டிடத்திற்குள்தான் உலகத்தின் தலைவிதியே நிர்ணயிக்கப்படுகிறது என்ற பிரமையை ஏற்படுத்தும். ஒரு தார்மீக ஒளி அங்கிருந்த ஒவ்வொரு மரத்திலும், மரக்கிளைகளிலும், புல்லிலும், பூவிலும் உள்ளொளியாய் ஓங்கிக் கொண்டிருந்ததுபோல் தோன்றியது.

கட்டிடத்தின் வராந்தாவின் முனையில் ஒரு வரவேற்பு அறை. தொழுநோயாளிகளைத் தொழுது இறுதியில் ஒரு தொழுநோயாளியாகவே மரித்து இன்று எல்லோரும் தொழும் உள்ளொளியான டாக்டர் ஆல்பர்ட் ஸ்விச்சரின் படம் பெரிதாகச் சிரித்துக் கொண்டிருந்தது. அருகில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் படம். அந்த மனிதாபிமானக் காவலர்களுக்கு நேர் கீழே இருந்த நாற்காலியில் அந்த மாது கண்ணாடி போடாமலே ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மணிமேகலை அம்மூதாட்டிக்கு பார்க்க முடியாத இடங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள்.

இந்த மூதாட்டியின் பெயர். பெயர் எதுக்கு? அவரே பெயரைப் பற்றிக் கவலைப்படாத போது? வேண்டுமானால் மனிதாபிமானி என்று சொல்லிக் கொள்ளலாம். இந்த அம்மையார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 

வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் தேவதாசிகளைப் பற்றி ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் எழுதுவற்தகாக வந்தவர். இவரது தமக்கை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியுடன் நெருங்கிப் பழகியவர். அப்போதுதான் தேவதாசி ஒழிப்புச்சட்டம் வந்திருந்தது. புதிய வாழ்க்கை கிடைக்கப் போகிறது என்று மகிழ்ந்திருந்த தேவதாசிகளை, அவர்கள் குடும்பத்தின விரட்டினார்கள். அந்த அபலைகளுக்கு வாழ்வளிப் பதற்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவ்வை இல்லத்தைத் துவக்கினார். தமக்கையின் அறிமுகக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவருடன் ஆராய்ச்சி பற்றிப் பேசப் போனார். அந்த அம்மையாருக்கு டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி அறிவுரை கூறினார். "ஆயிரம் ஆராய்ச்சிகளை விட அதில் கிடைக்கும் பட்டங்களைவிட, ஒரு அபலைக்காவது ஆதரவளிப்பது தனக்கே ஒரு காலத்தில் தற்காப்பாக மாறும்” என்றார். தர்மம் என்பதே ஒரு தற்காப்பு யக்ளும்தானே! அதோடு, எளியவர்களை ஆய்ந்து அவர்களை வைத்துப் பட்டம் பெற்று அவர்களுக்காக எதுவும் உதவவில்லையானால் அது எழுத்தாளனாக இருந்தாலுஞ் சரி ஆராய்ச்சி மேதையாக இருந்தாலுஞ் சரி அதுவே அவர்களுக்கு ஒரு தற்கொலை தர்மமாகும் என்றார்.

சிந்தனையில் மூழ்கிப்போய், தமிழகத்தைச் சுற்றிப் பார்த்த இந்த மாது, தேவதாசிகளைவிட, தொழு நோயாளிகள் மிகக் கேவலமாக நடத்தப்படுவதைக் கண்நோகக் கண்டார். தேவதாசிகள் வாழ்கிறபடி வாழ விரும்பாததால் துரத்தப்பட்டார்கள். ஆனால் இவர்களோ, வாழ்கிறபடி வாழ விரும்பினாலும் வாழாதே என்பது போல் துரத்தப் பட்டவர்கள். கணவன் மனைவியாலும், மனைவி கணவனாலும், பிள்ளைகள் பெற்றோராலும், பெற்றோர்கள் பிள்ளைகளாலும் துரத்தப்பட்டவர்கள்.

அன்று, அவர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த இல்லத்திற்கு இப்போது நினைவுச் சின்னமாக இருக்க 

வேண்டிய இந்த மனிதாபிமானக் கட்டிடத்திற்கு இன்னும் வேலையிருப்பது மனிதாபிமானத்திற்கே ஒரு சாட்சியாகவும், அதேசமயம் ஒரு சாவு மணியாகவும் தோன்றியது. இன்றும் இவர்கள் துரத்தப்படுகிறார்கள். இன்றும் இங்கே மனிதாபிமானம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இருநூறு பேர் இருக்கிறார்கள். உருக் குலைந்தாலும் உள்ளம் குறையாதவர்கள். சிலருக்கு உடம்புக்கும் பலருக்கு உள்ளத்திற்கும், மருந்தும் கருணையும் கொடுக்கப்பட்டு வருகின்றன. இங்கே ஒரு தொழிற்கூடம் இருக்கிறது. நாற்காலி, மேஜைகள் செய்யப்படுகின்றன. பெண்கள் பாய் நெய்கிறார்கள். பெட்டிகள் பின்னுகிறார்கள். இவர்களுக்காக, அரசாங்கமும் மான்யம் கொடுக்கிறது. நல்லவர்களும், கெட்டவர்களும் நன்கொடை கொடுக்கிறார்கள். இவை கடலில் கரைத்த காயக் கட்டிகள். வெறும் உப்பு. இந்த உப்புப் போடுவதற்கான உணவுப் பொருட்களுக்கும் மருந்துகளுக்கும் இந்த அம்மையாரின் தாய்நாட்டில் உள்ள ஒரு தர்ம ஸ்தாபனத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்னால், வெங்கடேசனால் இங்கு சேர்க்கப்பட்ட மணிமேகலை முதலில் பெட்டி முனைந்து பழகினாள். பிறகு தனது இயல்பான தாய்மை யாலும் இக்கட்டான சமயத்தில் சொன்ன உபாயங்களாலும் அந்த மூதாட்டியால் அடையாளம் காணப்பட்டு அவரது வாரிசுபோல் ஆகிவிட்டாள். இதனால் இவள் பெட்டி பின்னுவதை விடவில்லை. விற்பனைப் பொருட்களை தயாரிப்பதிலும், உணவுப் பொருட்களை வாங்கு வதிலும் கண்ணாகவும், காதாகவும் கையாகவும் இருந்து வருகிறாள்.

"முந்நூறு ரூபாய் துண்டு விழுதேம்மா” என்று அந்த மூதாட்டி சொன்னபோது, எதையோ சொல்லப்போன மணிமேகலை, குதிரை லாடம் போன்ற ஒலியைக் கேட்டு நிமிர்ந்து பிறகு "வாங்க" என்றாள் வாயார.

'சமூக சேவகிகள் வந்தார்கள். உருக்குலைந்தோர் நிறைந்த அந்த இல்லத்திற்குள் லிப்ஸ்டிக்ஸ் உதட்டோடு, பெரிய காரோடு வந்தார்கள். குதிரைக் கொண்டைகள். ஹை ஹீல்கள். பேஷன் பிளம்ப் பாலீஷ் செய்த நகங்கள். தொப்புளுக்குக் கீழே போன புடவைகள். சேவையில் ஈகோவை திருப்தி செய்யும் மை படர்ந்த கண்ணினர். பொய் நிறைந்த பேச்சினர்.

அறிமுகம் முடிந்ததும், மிஸ்ஸஸ் ராம்நாத் குழையக் குழையச் சிரித்துவிட்டு பின்னர் அழுவதுபோல் முகத்தை வைத்துக்கொண்டு "இந்த ஆர்பன்ட் டெஸ்டிடுட்ஸ்காக ஆப்பிள் கொண்டு வந்திருக்கோம். நானுறு ரூபாய் டொனேஷனும் கொடுக்கலாமுன்னு வந்திருக்கோம். ஏன் இவங்கள ஸொஸைட்டி பாய்காட் பண்ணுதுன்னு புரியலே” என்றாள்.

அந்த மூதாட்டி அவற்றை வாங்காமலே "வெரி குட்! எங் லேடீஸ், ஒங்க உதவிக்கு ரொம்ப நன்றி.! என்ன சாப்புடுறிங்க?" என்றார்.

"நோ தேங்ஸ் மேடம்."

"நோ நோ! எதாவது சாப்பிடணும்!”

"ஒகே! எதாவது ஜூஸ் இருந்தால்.”

"கொடுக்கிறேன்."

மணிமேகலையை அந்த மாது பார்த்தபோது அவள் அதற்குள்ளேயே உள்ளே போனாள். ஐந்து நிமிடத்தில் நான்கைந்து உருக்குலைந்த-அதே சமயம் சுகப்பட்டபெண்கள் ஆளுக்கொரு தட்டில் பழங்களையும், ஜூஸ் களையும் கொண்டு வந்தார்கள். அந்த 'தொண்டுக் கிழவி விளக்கினாள்.

"இங்க எல்லாருக்கும் இவங்கதான் சமைக்கிறது. இவங்கதான் படைக்கிறது. அப்கோர்ஸ் இன்னும்  டேப்லெட்ஸ் சாப்புடுறாங்க. ஆனால் இவங்களால ஆபத்து கிடையாது. இந்த ஜூஸ்களைக்கூட இவர்கள்தான் பிழிந்தார்கள். பிளிஸ், டேக் தெம்."

சமூக சேவகிகள் திக்குமுக்காடிப் போனார்கள். ஒருத்தி அந்த வெள்ளிக்கிழமையில் சனிக்கிழமை விரதம்' என்றாள். இன்னொருத்தி கோல்ட் பிடிச்சிருக்கு என்றாள். மிஸ்ஸஸ் ராம்நாத்துக்கு ஜூஸ் அலர்ஜியாம். அவசரப்பட்டவர்கள் போல், "இந்தாங்க பணம். ரசீத அப்புறமா அனுப்பிடலாம். வி ஹேவ் சம் எங்கேஜ் மென்ட்” என்றாள் மிஸ்ஸஸ் டி. ஸாஸா,

ஒரு டம்ளரை எடுத்து ஜூஸைக் குடித்துக்கொண்டே “தேவைப்படும்போது வாங்கிக்கிறேன். தேங்யூ எங் லேடீஸ், குட் பை!" என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்தார் அந்த மூதாட்டி அவர்கள் எழுந்தார்கள். அவசர அவசரமாகக் காரில் ஏறிப் பறந்தார்கள். பணத்தை வாங்கிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பத்திரிகைகளில் தங்களின் போட்டோக்களுடன் செய்தி கொடுத்து விட்டு இப்போது அந்த செய்தியை நிறுத்துவதற்காக இப்போது நிற்காமலே ஒடினார்கள். திஸ் இஸ் எ வெரி பேட் இன்ஸ்டிடியூஷன். வி வில் நெவர் கம். கம் ஒட் மே.'

அந்த மூதாட்டி வியப்போடு பார்த்த மணிமேகலையை நோக்கி "முந்நூறு ரூபாய் துண்டு விழுதேன்னு சொல்லிட்டு நானூறு ரூபாயை ஏன் வாங்கலன்னு நினைக்கிறியா? இந்த யங் லேடீஸ் தாங்கள் சமூக சேவை' செய்யனும் என்கிறதுக்காகவே, எங்கயாவது குடிசைகளில் தீப்பிடிக்காதா யாராவது நடு ரோட்ல சாகமாட்டாங்களான்னு நினைக்கிற சேடீஸ்ட்ஸ். இவங்ககிட்ட பணம் வாங்குறது நாம இவங்களையே கெடுக்கிறது மாதிரி. டு யூ அண்டர்ஸ்டாண்ட் மை டாட்டர் ?”  "எஸ் மதர்!”

மணிமேகலைக்கு மனதார நிம்மதி ஏற்பட்டது. பேரானந்தப் பெருவாழ்வு கிட்டியதுபோல் வந்தது. உலகமக்கள் ஒவ்வொருவரும் நம் உடம்பின் உறுப்புக்களில் ஒன்று என்றும், நாம் அந்த உலக மக்களின் உறுப்புக்களில் ஒன்று என்றும் இரண்டறக் கூட அல்ல, 'ஒன்றர' கலக்கும்போதும், நினைக்கும்போதும் ஏற்படும் பரமானந்தத்திற்கு இணை ஏது? ஈடேது?

என்றாலும் அவளுக்கு மகனின் நினைவு வராமல் இல்லை. அப்பாவின் ஞாபகம் போகவில்லை. அவ்வளவு ஏன்? மாமனாரின் நினைவோடு மிஸ்டர் ஜெயராஜின்மீது கூட நினைவு வந்தது. அவ்வப்போது வெங்கடேசனும், 'கூத்து கோவிந்தனும் வந்து அவளுக்கு ஆறுதல் கூறுவார்கள். சில சமயம் தங்களின் பிரச்னைகளுக்கு ஆறுதல் தேடியும் அவர்கள் வந்தார்கள். 'கூத்து கோவிந்தன் அங்கே கூத்து போடப் போவதாக வாக்களித்திருக்கிறான்.

ஒருநாள் மணிமேகலை மேஜை நாற்காலிகளை மதுராந்தகத்தில் உள்ள ஒரு பர்னிச்சர் கடைக்கு வண்டியில் அனுப்பிவிட்டு வண்டிக்காரருக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டு கைகளைத் துடைத்துக் கொண்டிருந்தபோது ரத்தினம் வந்தான். இப்போது பனியனுக்கு மேலே சட்டை போட்டிருந்தான்.

"வா அண்ணே! இவ்வளவு நாளும் ஏன் வரல? மெட்ராஸ்ல எதுவும் வேலையா?”

"மெட்ராஸ்ல வேலை இருந்து அங்க வந்தால்தான் இங்க வரணுமா? நிஜமாச் சொல்றேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாலக்கூட மெட்ராஸ் வந்திருந்தேன். ஆனால் இங்க வரல. ஏன் தெரியுமா? ஏதோ ஒரு காரியத்துக்கு போற இடத்துல இருக்கிற கோவிலுக்கு போறது புண்ணியமில்லியாம். அந்த கோவிலுக்குன்னே 

தனியாப் போவணுமாம். இதுமாதிரி என் தங்கச்சிய சிரமப்பட்டு பார்க்கணுமுன்னு நினைச்சே இதுவரைக்கும் வரல. ஆனால் இப்ப ஒனக்காகவே ரயிலேறி ஒனக்காகவே ஒரு பொண்ண கிண்டல் பண்ணுன ஒரு பயல உதச்சிட்டு இந்த பாழாப் போற பஸ்ல ஏறி வாரேன். இது பஸ்ஸா? சரியான நொண்டிப் பசு, ஒங்க வீட்ல குட்டி போட்டுட்டு, அப்புறம் எழுந்திருக்க முடியாமல் கிடந்தது பாரு, மயிலப் பசு, அதுமாதிரி ஒரு பஸ் நின்னு நின்னு ஒரு இடத்துல ஒரேயடியாய் நின்னே போச்சு. நான் நடந்தே வாரேன். நான் சொல்றது கொஞ்சம் பைத்தியக்காரத்தனந்தான். ஆனால் ஏதோ ஒரு வகையான பைத்தியம் இல்லாம உலகத்துல எவனுமே கிடையாது."

இருவரும் வரவேற்பு அறைக்கு வந்தார்கள். 'அம்மாவை அறிமுகப்படுத்தலாம் என்று போனாள். அந்த மூதாட்டி கண்களை மூடிக்கொண்டிருந்தாள். சத்தம் போடாமலே ரத்தினத்தை வெளியே கூட்டிக்கொண்டு வந்தாள்.

"அப்பா எப்படி இருக்காரு அண்ணே ?”

"யாரோட அப்பா?”

"என்னோட அப்பா! ஒன்னோட சித்தப்பா !”

"என்னம்மா நீ? நாலு மாதத்துக்கு முன்னால நடந்து போன சங்கதிய இப்போ கேக்குற? வெங்கடேசன் சொல்லலியா? உடனே இந்த கூத்துப் பயகிட்டகூட சொல்லி யனுப்புனேன். சொல்லலியா? ஒரு வேள ஒன் மனசக் கஷ்டப்படுத்தாண்டாமுன்னு சொல்லல போலுக்கு."

மணிமேகலை அவனிடம் கேட்கவில்லை. செத்துட்டார் என்கிற வார்த்தையை தன் காதுபடக் கேட்க வேண்டாம் என்று நினைத்தவளாய் தலையை இரண்டு தடவை ஆட்டிக் கொண்டாள். உள்ளத்தில் ஏதோ ஒரு இடம் சூன்யமாக இருந்தது. அதேசமயம் அப்பாவின்  வாதை உயிரோடு போய்விட்டது. என்ற லேசான நிம்மதியும் ஏற்பட்டது.

ரத்தினம் அனுதாபம் சொட்டச் சொட்டப் பேசினான்.

"கலங்காதம்மா. ஒனக்கே தெரியும், ஒங்க அப்பாவும் நானும் கூலிக்காக வயலுல ஒருவர ஒருவர் முறைச்சிருக்கோம். ஆனால் அந்த பெரிய மனுஷன் என்ன செய்தார் தெரியுமாம்மா? ராமபத்ரன் தேவடியா மவன், ஒனக்கு அது வந்துட்டுன்னு சொன்ன மறுநாளே இவரு தரத்துக்குடில வக்கீலப் பாத்து உயில் எழுதி வச்சிட்டாரு. சொத்துல ஒனக்கு உரிம உண்டுன்னாலும், அவரு உயிலுல தெளிவா எழுதிட்டாரு. மாசுலாங்குளத்துப் பாசன வயலும், பேயான் தோட்டமும் ஒனக்கு. ஒரு லட்சம் ரூபாய்க்கி மேல பெறும் உயிலை என்கிட்டதான் தந்தாரு. 'நான் செத்த பிறவு ஒன் உயிரக் கொடுத்தாவது இந்த உயில நிறைவேத்துன்னு சொன்னாரு அவரு செத்ததும் ஒன்னோட அண்ணன் தம்பிங்க என்கிட்ட ஆள் அனுப்பி ஐயாயிரம் பத்தாயிரம் தாரதாயும் உயில கிழிக்கும்படியும் சொன்னாங்க. நான் காலுல கிடக்குறத கழத்துனேன். உயிலப்பத்தி ஏன் அப்போ ஒன் கிட்ட சொல்லல தெரியுமா? என்னதான் புருஷன எதிர்த்து போடான்னு நீ சொல்லணுமுன்னு நான் ஒன்கிட்டச் சொன்னாலும் அவனோட நீ வாழனுங்ற ஒரு ஆசை. உயிலைப்பத்தி சொன்னால் ஒருவேள புருஷங்கிட்ட தைரியமாய் கோவிச்சு காரியத்த கெடுத்துப்பிடுவியோ என்கிற பயம். உயிலுல ஒன்னைப்பத்தி எழுதியிருக்கிற இடத்தைப் படிக்கேன் கேளு! பிறந்தபோது மட்டும் மகளா இருந்து அப்புறம் தாயா மாறிப்போன என்னோட செல்லமகள், என் மூச்சுக்கு காற்றாயும், உடலுக்கு உயிராயும் ஆகிப்போன என் தங்கமகள் நல்லதங்காள் மாதுரி ஆகிக்கிட்டு

வாராள். அவளை இந்தக் கோலத்துல கேள்விப்பட்ட எனக்கு இன்னும் சாவுவரலியே. கை காலு முடங்கலியே. மேற்கொண்டு பயங்கரமானத கேட்க முடியாதபடி காது முடங்கலியே. அப்பப்போ வாரரத்தக் கொதிப்பு இப்போ வரலியே. அவள பாக்க முடியாதபடி கண்ணு கெடலியே!”

மணிமேகலையின் விம்மல் ரத்தினத்தை நிறுத்தியது.

"அப்பா ! என் அப்பா ! என் கடவுளே! என் கண் கண்ட தெய்வமே! நான் ஒங்க கால முடக்கிட்டேனே. கண்ணைக் குத்திட்டேனே!"

ரத்தினம் தன்னையே நொந்துகொண்டான். தன் கண்களையும் துடைத்துக்கொண்டான். சிறிதுநேரம் பேசிவிட்டுப் புறப்பட்டான்.

"இந்தாம்மா உயிலு."

"என் உயிரே போயிட்டு. இது எதுக்கு? அவங்ககிட்ட காட்டி நீயே கிழிச்சிப் போட்டுடு.”

"சரி, ஒன்கிட்ட கொடுத்தால் நீ கிழிச்சிப் போடுவ. என்கிட்ட இருக்கட்டும். அப்புறம் அந்த ஜெயராஜ் பய மேல வழக்கு போடணும். செறுக்கி மவனை கோர்ட்ல நிக்க வச்சி, நானே அவனை செருப்பால அடிக்கப் போறேன். அவன் சொத்துல நீ எப்போ பாகம் கேக்கப் போறியோ, அப்பதான் நான் இனிமே இங்க வருவேன்."

ரத்தினம் புறப்பட்டான். போனவன் திரும்பி வந்தான்.

“மணிமேகலை ! முன்னால அவன்கிட்ட நீ வாழணு முன்னு நினைச்சும், அடாபிடியாப் பேசுனது மாதிரி இப்பமும் ஒப்புக்குச் சொல்றேன்னு நினைக்காத நிச்சயமா இல்ல. ஒண்னு மட்டும் ஒப்புக்குச் சொன்னேன். அதுதான் வழக்குப் போடு முன்ன, இங்க வரமாட்டேன்னு சொன்னேன், பாரு அதுதான் புளுகு. அண்டப் புளுகு."  ரத்தினம் போய்விட்டான். அவனையே பார்த்து நின்ற மணிமேகலை, பிறகு அவனுடன் போய், பஸ் வருவது வரைக்கும் அருகிலேயே நின்று வழியனுப்பி வைத்தாள். பஸ் போன பிறகுதான், அண்ணன் தம்பிகளைப் பற்றி கேட்காமல் போய்விட்டதை உணர்ந்தாள். திடீரென்று தன் பெயரை அழைக்கும் சத்தங்கேட்டு, நடந்தாள். நாளைக்கு அந்த மூதாட்டி தன் தமக்கையைப் பார்ப்பதற்காக சொந்த நாட்டுக்குப் போகிறார். ஒரு மாதத்தில் வந்துவிடுவார் என்றாலும் அவளுக்கு என்னமோ போலிருந்தது. அதுவும் அப்பாவின் இந்த மரணச் செய்தியைக் கேட்டசூழ்நிலையில்.