இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 18

18
வள் உள்ளுணர்வு உணர்த்தியது போலவே ஒன்றின் முடிவு இன்னொன்றின் துவக்கமாகி விட்டது. கணவனிடம் இருந்து பிறந்தகம் செல்லும் மனைவி பிரியாவிடை பெறுவதுபோல, அந்த இல்லத்தில் இருந்து கண்ணிர், கழுத்து மாலையாகும்படி விடைபெற்றுச் சென்ற அந்த மூதாட்டி பிறந்த நாட்டில் தமக்கையைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போனவள் அக்காள் இறக்குமுன்பே இறந்துவிட்டாள். முதுமையின் கோளாறா? முடியாத பணிக்கு வாரிசு கிடைத்துவிட்ட திருப்தியில் ஒயாது உழைத்த ரத்த நாளங்கள் ஒய்வெடுக்க நினைத்ததோ ? தெரியவில்லை!

அந்த விடுதியும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களும், தத்தம் வீடுகளிலேயே ஏதோ ஒன்று நடந்துவிட்ட திகைப்பில் சோகத்தில் ஆழ்ந்து போயின. "கலங்காதிங்க! இதுதான் அந்த நாட்டுக்கு நான் போகிற கடைசித் தடவை!" என்று சொல்லிவிட்டுப் போனவள் முதல்

தடவையாகத் திரும்பாமல், முதல் தடவையாகக் கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவள்போல் போய்விட்டாள்.

ஆல்பர்ட் ஸ்விட்சரின் படத்துக்கருகே அந்தத் தாயின் படத்தை இணையாக மாட்டிய மணிமேகலை யாரும் எதிர்க்காமலே பொறுப்புகளை மேற்கொண்டாள். சொல்லப் போனால் அவள் பழையபடியும் பெட்டி பின்ன நினைத்தாள். ஆனால் பெட்டிப் பாம்புகளாய் அங்கிருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தபோது வெங்கடேசன் கொடுத்த உற்சாகத்தில், அவள் உற்சாகமின்றியே பணியாற்றத் துவங்கினாள். இப்போதுதான் அப்பா செத்திருக்கிறார் அதுக்குள்ளேயே அம்மா சாவது என்றால்...?

'காபந்து சர்க்கார் மாதிரி அவள் காரியமாற்றிக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டியின் தார்மிகப் பார்வைக்கு அஞ்சி பொருளுதவி செய்த வெளிநாட்டு நிறுவனம், அங்கே அரசியல் கொந்தளிப்பில் சிக்குண்டு பணவுதவியை பட்டென்று நிறுத்தியது.

மணிமேகலை செய்வதறியாது தடுமாறினாள். அந்தச் சமயத்தில் அவளைப் பார்க்க வந்திருந்த வெங்கடேசன், "இனிமேல் வெளிநாட்டில் கையேந்தாமல் இதை நடத்து வதற்காக நீ பெருமைப்பட வேண்டும்” என்று சொன்ன போது, அவள் பெருமிதப்பட்டாள். விரைவில் அந்த பெரு மிதமும் யதார்த்தத்தில் பட்டு, முட்டி மோதிச் சிதறியது.

அரிசி ஸ்டாக் தீர்ந்து போயிற்று. மரச்சாமான்களை வாங்கிய பேர்வழிகள்-அந்தக் கடன்காரப் பாவிகள்அந்த மூதாட்டியின் ஈமச்செலவை தன் வீடுகளில் செய்து விட்டதுபோல் கை விரித்தார்கள். மூலப்பொருட்களை கடனுக்குக் கொடுத்து வந்த கம்பெனிகள் ரிக்ரட் செய்தன. அந்த அம்மாவுடன் போட்டோ எடுத்துக் கொள்வதற்காக நன்கொடை கொடுத்தவர்கள் நல்லவர்கள். ஆகையால் கொடுத்ததைத் திருப்பிக் கேட்கவில்லை. நோயாளிகளுக்கு  மாத்திரைகள் குறைந்துகொண்டு வந்தன. கம்பவுண்டராக வந்து, இப்போது எத்தனையோ எம்.பி.பி.எஸ்களை உள்ளடக்கிய மருத்துவருக்கு மாதச் சம்பளம் கொடுக்க முடியவில்லை. பிள்ளை குட்டிக்காரரான அவர் வாய் திறந்து கேட்கவில்லையானாலும், அவரது காய்ந்த வயிறு கதையைச் சொன்னது. மணிமேகலை கையில் இருந்த தங்கக் காப்பை விற்றாள். சேமித்து வைத்திருந்த ரூபாயைச் செலவிட்டாள். இருநூறு ஜீவன்களுக்கும் எப்படிப் போதும்?

ஒருநாள் மத்தியானம் எல்லோருமே அரைபட்டினி, தூக்கம் வரமுடியாத அளவிற்கு வயிற்றை வலிக்கும் பசி, இரவில் தண்ணிரைத் தவிர எதுவும் இல்லை. மணிமேகலை அலுவலக அறையில், சுவரை அலங்கரித்த ஸ்விட்சர்-முத்துலட்சுமி ரெட்டி-அந்த மூதாட்டி ஆகிய அந்த சேவையின் திரிமூர்த்திகளை கண்கலங்கப் பார்த்தாள். அவள் ஏதாவது ஒரு வழிகாட்டுவாள் என்பது போலவும் அதற்கு அந்த திரிமூர்த்திகள் வழி சொல் வார்கள் என்பது போலவும் இரண்டு பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

செய்வதறியாது, கழுத்தைத் தடவிய மணிமேகலை, தன் ஏழு பவுன் தங்கத் தாலியைப் பிடித்தாள். சந்தோஷம் தாங்காமல் தரையை மிதித்தாள். இதை விற்று இன்னும் ஒரு மாதத்தை எப்படியும் ஒட்டிவிடலாம். கூடவே இன்னொரு யோசனை.

இந்தத் தாலியைக் கட்டியவனே தனக்கு இல்லாமல் போனபோது ஏழு பவுன் தாலிக்காக அவனிடம் விட்டு வைத்திருந்த அறுபது பவுன் நகை ஏன் இருக்க வேண்டும்? அதோடு அவனிடம் ஜீவனாம்சம் ஏன் கேட்கக்கூடாது? சகோதரர்கள் அனுபவிக்கும் நிலத்தை ஏன் பிரிக்கக் கூடாது? எதற்காக, விட்டுப்போன உறவை ஒரேயடியாக

விட்டுவிடக் கூடாது? அவர்களாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஒன்றையும் நினைக்காமல் இருந்தது சரிதான். ஆனால் இங்கே இந்த அனாதைகள், வயிற்றுக்குக் கிடைக்காமல் கையது கொண்டு மெய்யது பொத்தி, அவள் எப்படியும் தங்களைக் கைவிட மாட்டாள் என்று நம்பும்போது நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா?

ஒன்று இந்த இல்லத்தை சிலர் சொல்வதுபோல் இழுத்து மூட வேண்டும். அல்லது தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சொத்தைப் பெற்று இதன் கதவுகளை-இந்த பேரின்பப் பெரு உறவுக் கதவுகளை அதியமானின் அரண்மனையைப் பற்றி ஒளவையார் சொன்னதுபோல, அடையா நெடுங்கதவாய் ஆக்க வேண்டும். ஜன சமுத்திரத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஒருத்தி உறவுக் கிணற்றை மூடுவதில் தவறில்லை. விலக்கியவர்களிடமிருந்து சொத்தை விடுவித்து இந்த இல்லத்தின் ஒளியைப் பராமரித்தாக வேண்டும். இங்கே ரத்த பாசத்திற்கு இடமில்லை. ரத்தம் நீரைவிட அழுத்த மானதாக இருக்கலாம். ஆனால் அந்த ரத்தம் சேவை யென்று வரும்போது, சீழாகவும் மாறலாம். பொதுநலத்தில் இவர்களின் விருப்பங்கள்தான் முக்கியம். இவர்களின் நம்பிக்கைதான் முக்கியம். இவளா செய்தாள் என்று உறவு நம்பிக்கையிழந்து போனதுபோல் ஒலமிட்டால் ஒல மிடட்டும். அவள் அனுபவிக்காத ஒலமா?

மணிமேகலை திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்தாள். அப்போது 'அம்மா அரிசிக்கு என்று ஒரு இன்மேட் கேட்டபோது அவள் ஒரு மஞ்சள் கயிற்றைப் போட்டுக்கொண்டு, தாலிச்சரட்டைக் கொடுத்து மதுராந்தக சேட்டிடம் விற்று அங்கேயே நாலு அரிசி மூட்டைகளை வாங்கி வரச் சொன்னாள். மாத்திரைகள், இன்னும் ஒருவாரம் தாளும். மருத்துவருக்கு மூன்று மாத பாக்கியில் பாதியாவது கொடுத்துவிடலாம். 

அசைக்க முடியாத முடிவுக்கு வந்துவிட்டதால் மணிமேகலை அசைந்தாலும் கலையாத தூக்கத்தில் சங்கமமானாள். மறுநாள் வெங்கடேசன் அரை மூட்டை காய்கறிகளோடு வந்தான். 'கூத்து கோவிந்தன், நான்குபடி உப்பு வாங்கிக்கொண்டு வந்தான். அதுவும் தீர்ந்து போயிருந்தது.

அவள் முடிவைத் தெரிவித்ததும் சற்று அயர்ந்துபோன வெங்கடேசனிடம் "அன்பு ஒரு சக்தின்னு சொன்னே மில்லா, இப்போ அந்த அன்பின் சக்தி நான். இந்த சக்தி பத்ரகாளியாகவும் மாறும் என்பதைக் காட்டப் போகிறேன். என்னை ஆசீர்வதியுங்கள்" என்று சொன்னபோது அவனால் 'சிவனே என்று இருக்க முடியவில்லை. அந்த சக்தியின் பெயரில் தன் ஸீனியர் மூலமாக, மிஸ்டர் ஜெயராஜூக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினான். அறுபது பவுன் நகை வேண்டும். ஜீவனாம்சம் வந்தாக வேண்டும். நோட்டீஸிற்கு எதிர் நோட்டீஸ் வரவில்லை. இரண்டாவது நோட்டீஸ் அனுப்பினால், விலாசதார் வாங்க மறுக்கிறார். என்ற தபால் அலுவலகக் குறிப்புடன் ரிஜிஸ்டர் நோட்டீஸ் திரும்பி வந்தது. இனிமேல் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும். அது ஆயுள் வரைக்கும் நீடிக்கும். என்ன செய்யலாம்?

இந்தச் சந்தர்ப்பத்தில், உடனே வரவும் என்ற கடிதத்தைப் படித்தவுடனேயே ரத்தினம் வந்துவிட்டான். மணிமேகலைக்கும், வெங்கடேசனுக்கும் உபதேசத்தான்.

"இதுக்குப் போயா கவலப்படுறிய? நம்மள மாதுரி ஏழைங்க கோர்ட்டுக்கு அபராதம் கட்டப் போகலாமே தவிர, நியாயம் கேட்கப் போகக்கூடாது. அடிக்கிறதுல அடிச்சால் கிழியுறதுல கிழியட்டும். நாளைக்கே ஜெயராஜ் வீட்டுக்குப் போவோம். அவன் தலையைப் பிடிச்சால் முடியைப் பிடிப்போம். முடியைப் பிடிச்சால் தலையைப் 

பிடிப்போம். நானும் பழைய செருப்பத்தான் போட்டிருக்கேன்.”

அந்த இல்லத்தில் ஒரு காரும் இருந்தது.

வெங்கடேசனும், ரத்தினமும் பின்னால் ஏறிக்கொண்டார்கள். மணிமேகலை வண்டியை ஒட்டினாள். நல்ல வேளையாக ஜெயராஜைக் கட்டியதில் இந்த 'டிரைவிங்' நன்மையாவது கிடைத்தது. இல்லையானால், டிரைவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டியதாயிருக்கும். கார், மதுராந்தகம் வந்தபோது அங்கே மணிமேகலையைப் பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து திண்டிவனம் பஸ்ஸில் ஏறி அந்த இல்லம் வழியாக ஏதாவது லாரி போகுமா என்று தேடிக் கொண்டிருந்த கூத்து, கோவிந்தன், வண்டியைப் பார்த்ததும் கையாட்டி காலாட்டி அதை நிறுத்தி ஏறிக் கொண்ட பிறகு சிரித்துக்கொண்டே 'ஊய் ஊய் என்று விசிலடித்தான். கார் புறப்பட்டது.

அரக்கோணத்திற்குள் வந்தவுடனேயே அவளால் காரை ஒட்ட முடியவில்லை. கைகள் ஆடின. 'என் பிள்ள எப்படி இருக்கானோ? எப்படி இருக்கானோ?

எதிரே வழக்கத்திற்கு மாறாக இடது பக்கமாகவே வந்த லாரியில் மோதாமல், சைக்கிள்களை அடிக்காமல், அவள் எப்படியோ-தெய்வாதீனம் என்று சொல்லலாம். தன் மாஜி வீட்டின் முன்னால் நிறுத்தினாள். பையனைப் பார்க்கப் போகிறோம் என்ற இன்பப் பரவசத்துள் ஆழ்ந்து அவள் காரில் இருந்து இறங்கினாள்.

வீடு அப்படியேதான் இருந்தது. மாமனார், அதே சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். இப்போது சற்று அதிகமாகச் சாய்ந்ததுபோல் இருந்தது. ஜெயராஜூம், சங்கரனும் வீட்டில்தான் இருந்தார்கள். இந்திராவைக் 

காணவில்லை. வசந்தி வாயும் வயிறுமாக இருந்தாள். சங்கரன் மனைவியையும், பிள்ளைகளையும் காணவில்லை.

படியேறிய மணிமேகலை மாமனார் காலைத் தொட்டுக் கும்பிட்டாள். அந்தக் கிழவர், அவளை அடையாளம் கண்டுகொண்டவர் போல் தள்ளாடி எழுந்து, அவளை அனைத்துக் கொண்டார். பையனை எங்கே மாமா? என்று அவள் கேட்கவில்லை. எங்கே அவர் அவன் இங்கே இல்லையென்று பதிலளித்து விடுவாரோ என்று பயந்தாள். அந்தப் பதில் உண்மையாகவே இருந்தாலும், அவளால்-அவள் உயிரால்-தாங்கிக்கொள்ள முடியாது.

இதற்குள் வீட்டில் இருந்தவர்கள் எல்லோருமே அங்கே வியப்போடும் பயத்தோடும் வந்துவிட்டார்கள். ரத்தினம் கோஷ்டி அவர்கள் சொல்லும் முன்னாலேயே நாற்காலிகளை அலங்கரித்தார்கள். மணிமேகலை மாமனாரைப் பார்த்தாள். அவர் முன்னால் வந்த விஷயத்தைப் பேசத் தயங்கினாள். தாட்சண்யம் என்று ஒன்று இருக்கிறதே. இது தாட்சண்யம் பார்க்கிற சமயம் இல்லை; தாட்சண்யம் பார்க்கவும் கூடாது. தாட்சண்யம் பார்த்துப் பார்த்து குட்டிச்சுவரான நாடுகள் சில வீடுகள் பல. இதனால்தான் நரகத்திற்கான வழியும் சில சமயம் நல்லெண்ணங்களால் அமைக்கப்படுகிறது என்று ஒரு அறிஞர் சொன்னார். அர்ச்சுனன் தாட்சண்யம் பார்த்தால் பாகம் கிடைத்திருக்காது. தர்மன் தாட்சண்யம் பார்த்த போது ஒரு குடிசைகூட கொடுக்கப்படவில்லை. உரிமையை எடுத்துக் கொள்ள வேண்டும்; யாரும் தரமாட்டார்கள்.

மணிமேகலை எல்லோரையும் பொதுப்படையாகப் பார்த்துவிட்டு ஜெயராஜை குறிப்பாகப் பார்த்தாள். அவன் அசந்துவிட்டது, அவன் நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது போல் தோன்றியது. இவள் புதிய மணிமேகலை. அந்த  கெஞ்சும் கண்கள் போய், மிஞ்சும் கண்கள் வந்துவிட்டன. கைகள் ஒன்றை ஒன்று நெறிக்காமல், அவனை நெறிக்கப் போவதுபோல் குவிந்தும் விரல்கள் கூர்மைப்பட்டும் காட்சியளித்தன. அவன் பயந்துவிட்டான். அதனால் பலமாகக் கத்துவது என்று தீர்மானித்தான். நழுவப்போன சங்கரனை, ரத்தினம் தன் விழிகளை உருட்டியே உள்ளே விரட்டினான்.

மணிமேகலை ஆரம்பித்தாள்.

"என் பையன் எங்கே? மிஸ்டர் ஜெயராஜ், என் பையன் எங்கே?"

ஜெயராஜ் ஒரேயடியாக அதிர்ந்து போனான். மிஸ்டரா? தாலி கட்டிய மனைவி பேசுகிற வார்த்தையா? சுடச்சுட பதில் கொடுக்க வேண்டாமா?

"என் பையன் எங்க இருந்தால் ஒனக்கென்ன?”

"ஒங்க பையன்தான். எங்கேயும் இருக்கட்டும். ஆனால் எங்கே இருக்கிறான் என்கிறதை தெரிஞ்சுக்க எனக்கு உரிமை உண்டு.”

மாமியார்க்காரி மறுமொழி சொன்னாள்:

"ஒன் பிள்ளய கடிச்சித் தின்னுப்புடலம்மா. சோளிங்கர்ல கான்வெண்டோ. கருவண்டோ... அதுலதான் சேர்த்திருக்கு. நல்லாத்தான் இருக்கான். நாளைக்கு வருவான். வேணுமுன்னால் பார்த்துட்டுப் போ"

"கவலப்படாதிங்க அத்தே! நான் போகத்தான் போறேன்!”

மணிமேகலையின் மனம் இறுகியது. தன் பிள்ளையை பார்க்க முடியாமல் போய்விட்டதில் ஏமாந்த தாய்மையின் சக்தி, இப்போது கொஞ்ச நஞ்சமிருந்த தாட்சண்யத்தையும் அழித்துக்கொண்டு ஒரு கோப சக்தியாக மாறியது. 

"மிஸ்டர் ஜெயராஜ். நான் அனுப்புன நோட்டீஸ் ஏன் வாங்கல?” ஜெயராஜுக்கும் பதில் பேசத் தெரிந்தது. ராமபத்திரனின் மாப்பிள்ளை அல்லவா?

"சட்டப்படி நீ அனுப்புன நோட்டீஸ் நான் வாங்க மறுத்துட்டேன். இனிமேல் நீ சட்டப்படி என்ன செய்யனுமோ அதைச் செய்."

வெங்கடேசன் இடைமறித்தான்:

"மிஸ்டர் ஜெயராஜ்! தபால்காரர் கொடுக்கிற எதையும் அது ஒங்க பெயர்ல வாரது வரைக்கும் வாங்க முடியாதுன்னு சொல்றது ஒரு குற்றம். இனிமேல் வருகிற தபால்களை போஸ்ட் ஆபிஸில் போயே வாங்க வேண்டிய திருக்கும். தபால்காரர் இனிமேல் இந்த வீட்டுக்கு வர மாட்டார். இனிமேல் தபால் உங்களுக்கு வராது. நீங்க கேர் ஆப் போஸ்ட் ஆபீஸ்-சீக்கிரம் கேர் ஆப் பிளாட் பாரமா ஆகப்போறிங்க."

"நீங்க யாரு?"

"ஐ அம் லாயர் வெங்கடேசன். இவர் என் கட்சிக் காரர்.” மணிமேகலை தன் வக்கீலை கையாட்டித் தடுத்தாள்.

"என் அறுபது பவுன் நகையை தரப்போறிங்களா இல்லியா..? ஏன் பேசமாட்டக்கிங்க? நான் வேண்டாத வளாய் ஆனபிறகு என் நகை எதுக்கு? என்னை விட்டுட்டு என் நகைகளை வச்சிருக்கது ஒங்களுக்கு வெட்கங்கெட்ட செயலாய் தெரியல?"

"நீதான் வெட்கங்கெட்டு.”

'கூத்து கோவிந்தன் குதித்தான்.

"யோவ்! வார்த்தய அனாவசியமாய் விடாத அப்புறம் பழையபடி பேசுறதுக்கு பல்லு ஒண்ணுகூட இருக்காது. 

ஒப்பன உதைக்கிற பயலே. வெட்கங்கெட்டுப் போனது நீயா என் தங்கச்சியாடா ? அவளைத் துரத்திட்டு அவளோட நகை நட்டுங்கள வச்சிருக்கதை விட நீ தூக்குப் போட்டுச் சாவலாம். யாரப் பாத்துடா..?”

மணிமேகலை தான் ஆடவில்லையானாலும் அவள் தாலி ஆடியதுபோல்,

"அண்ணே! அவர் சட்டப்படி இன்னும் என் கணவர். இனிமேல்தான் டைவர்ஸ் செய்யணும். அதுவரைக்கும் சும்மா இருங்க. ஏங்க ஒங்களத்தான் ! என் நகைகள இப்போ தரப்போறிங்களா இல்லியா?" என்றாள்.

இந்த அமளியில் சங்கரன் திருட்டுத்தனமாக டெலிபோன் பக்கம் போனான். இதைப் பார்த்த ரத்தினம் "டெலிபோனை கீழே வைக்கிறியா இல்ல அந்த டெலிபோன் குமிழிய வச்சே ஒன் குடல குத்தி எடுக்கணுமா?அதை வைடா படுவா!” என்றான்.

வெங்கடேசன் அமைதியாகப் பேசினான்.

"நீங்க போலீஸுக்குப் போன் பண்ணணுமுன்னால் பண்ணுங்க. போலீஸ் வரட்டும். மனைவி இருக்கையில் அவள் சம்மதம் இல்லாமல் இன்னொருத்தியக் கல்யாணம் பண்றது ஒரு கிரிமினல் குற்றம். நான் பேய்லபிள் அபன்ஸ். அண்டர்ஸ்டாண்ட்! இவருக்கு ஏழு வருஷம் வாங்கிக் கொடுக்காட்டால் நான் வக்கீல் திருமலாச்சாரியோட ஜூனியர் இல்ல; போன் பண்ணுங்க ஸார்!"

மணிமேகலை மீண்டும் பேசினாள்.

"நகையைத் தரப்போறீங்களா இல்லியா? சும்மாச் சொல்லுங்க! அறுபது பவுனையும் அடகு வச்சிருந்தாலும் பரவாயில்ல. தர்மர் மாதிரி டயம் கொடுக்கிறேன். சொல்லுங்க. மானம், வெட்கம் மனுஷனுக்கு இருக்கணும். 

ஏன் யோசிக்கிங்க? ஒஹோ! நகையை என் கையில் கொடுத்தால் என் கையில இருக்கிற நோய் தொத்திடும்னு நினைக்கிங்களோ? பரவாயில்ல! கையில உறை போட்டுக்கிறேன். எனக்கு இப்போ பதில் தெரிஞ்சாகணும்."

வாயும் வயிறுமாக இருந்த வசந்தி உள்ளே இருந்த படியே முணுமுணுத்தாள்.

"பையன் எங்க கிட்டதானே இருக்கான். அவனுக்கு வேண்டாமா ?” 'கூத்து கோவிந்தனால் தாங்க முடியவில்லை.

"வாம்மா ராசாத்தி! நான் மூளியலங்காரி மூதேவி சண்டாளியாய், அதாவது நல்லதங்காளோட அண்ணியா நடிக்க ஆள் கிடைக்காமல் அவஸ்தப்படுறேன். வாரி யாம்மா! சீ! நீயில்லாம் ஒரு பொண்ணா? இருக்க இடம் கொடுத்த தங்கச்சிகிட்ட படுக்க இடத்த பறிச்ச முண்ட! ஒன்னை மாதுரி பொண்ணுங்க இருக்கதனால தான் நானே நாடகத்துல பெண் வேஷம் போட்டுக்கிறேன். பொண்ணு என்கிற வார்த்தைக்கே தகுதியில்லாத அரக்கி." ஜெயராஜ் மணிமேகலை தனியாக வந்திருந்தால் இந்நேரம் தலைமுடியைப் பிடித்திழுத்து உதைத்திருப்பான். வசந்தியும் அவனுக்கு ஒத்தாசை செய்திருப்பாள். ஆனால்.

மணிமேகலைக்கே கூத்து கோவிந்தன்மீது கோபம் ஏற்பட்டது.

"நமக்கு யாரையும்-அவங்க எவ்வளவு பெரிய பாவியாய் இருந்தாலும்-இழிவுபடுத்துறதுக்கு உரிமை கிடையாது. இதுதான் நான் 'அம்மா'கிட்ட கத்துக்கிட்ட பாடம். கோவிந்தண்ணே நீ இனிமேல் வாயைத் திறக்கக் கூடாது. வசந்தி! மன்னிச்சிடும்மா, மிஸ்டர் ஜெயராஜ்! நான் கேட்ட கேள்விக்கு நீங்க ரெண்டுல ஒண்ணு பதிலாய் சொல்லியிருந்தால் இந்த ரகளையே வந்திருக்காது. 

இன்னொண்ணயும் மறந்துட்டேன். எங்கப்பா கொடுத்த வரதட்சணை பணமும் வந்தாகணும். வாங்காமல் விடமாட்டேன்."

ஜெயராஜ் யோசித்தான். ஐடியா கேட்க மாமனர் ராமபத்திரன் இல்லை. அப்பாகிட்ட ஐடியாவே இல்லை. ஆகையால் தராட்டால். என்று சன்னமாகச் சொல்லி சொன்னதை விழுங்கி,விழுங்கியதைத் திருப்பிச் சொன்னான்.

ரத்தனம் முழங்கினான்:

"இந்தா பாருங்க ஸார்! நான் சொல்றத நல்லாக் கேளுங்க. எங்க வக்கீல் கிரிமினல் கேஸ் போடுவார்!"

வெங்கடேசன் இடைமறித்தான்.

"நோ நோ! கேஸ்-க்கு முன்னால இந்த பேக்டரிய முடக்கி ரிட் வாங்குவேன். ஏன்னா இதனோட வளர்ச்சியில என் கட்சிக்காரியோட நகைகள் அடமானமாயிருக்கு. என்கிட்ட எவிடென்ஸ் இருக்கு. நாளைக்கு யாரும் பேக்டரிக்குள்ள போக முடியாது. சும்மா ஏதோ போனால் போவுதுன்னு பார்த்தால்.”

ரத்தினம் தன் பேச்சை தடைபட்ட இடத்தில் இருந்து துவக்கினான்:

"அது அவரோட வழி. நான் என்ன செய்யப் போறேன் தெரியுமா? நாளைக்கே தெருவுல மைக்கை வச்சிக்கிட்டு என் தங்கச்சிக்கு ஏற்பட்ட அவமானத்தை தெருத் தெருவாச் சொல்லப் போறேன். என் தங்கச்சி ஒங்க தொழிற்சாலை முன்னால் சாகும்வரை அல்லது சொத்தும் நகையும் சரியாய் கிடைக்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போறாள். ஒங்க தொழிலாளிங்ககிட்ட இவள் கதையை பாட்டாய் சொல்லப் போறான். சும்மா வெறுங் கோர்ட்டு, வெறும் வழக்குன்னு போக நாங்க

பைத்தியக்காரங்க இல்ல. சாம, பேத, தான, தண்டம். தண்டம் என்கிறது கொலை."

மணிமேகலை கர்ஜித்தாள்.

"நான் மட்டும் தனியா உண்ணாவிரதம் இருக்கப் போறதில்ல. பேப்பர்ல படிச்சிருப்பிங்களே அன்னை மார்க்கரெட் செத்துப் போனதாய்! அவரோட இடத்துல அந்த நிவாரண இல்லத்தை பரதன் ராமனோட பாதுகையை வைத்து ஆண்டது மாதுரி நான் நடத்துறேன். அங்கே இருக்கிற என் தாய்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவுந்தான் வந்திருக்கேன். அவங்களும் இங்க வந்து என்னோட உண்ணாவிரதம் இருப்பாங்க. சிலர் மறியல் பண்ணுவாங்க. அங்கே சாப்பாடு இல்லாமல் வெறுமனே சாகிறவங்க இங்க ஒரு லட்சியத்துக்காக சாவட்டும். உம், பதில் சொல்லுங்க! என் நகை, ரொக்கம் சொத்துல பங்கு கிடைக்குமா கிடைக்காதா? எனக்கு இப்போதே தெரிந்தாகணும்."

ஜெயராஜ் வகையறாக்கள் பயந்துவிட்டார்கள். பத்திரிகைகளில் மார்க்கரெட் மரண அனுதாபக் கூட்டத்தில் பேசியது இந்த மணிமேகலைதானா? யோசிக்காம போயிட்டோமே! எதையாவது கொடுத்து சரிக்கட்டணும். முதல்ல நகையைக் கேட்டாள். அப்புறம் ரொக்கத்தைக் கேட்டாள். இப்போ, சொத்துல பங்கு கேட்கிறாள். சீக்கிரமா விவகாரத்தை முடிச்சிடணும். இல்லன்னா லிஸ்ட் ஏறும்!

சங்கரன், தம்பியை அதட்டினான்.

"நீயும் ஒரேயடியாய் பிடிவாதம் பிடிக்கக்கூடாதுடா. ஏதோ கொடுக்கத கொடுத்து, நாமும் கஷ்டப்படுறோம். அவளும் கஷ்டப்படுகிறாள்."

மணிமேகலை ஆணித்தரமாகப் பேசினாள்:

"அறுபது பவுன் நகை வரணும். அப்பா கொடுத்த ரொக்கம் வரணும். சொத்து செட்டில் ஆகணும். என் பிள்ளையும் எனக்கு வேணும்."

மாமியார்க்காரிக்கு தன் முன்னாள் மருமகள்மீது கருணை வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. அறுபது பவுனை விட முடியுமா?

"எப்படியோ ஒன்னப் பிடிச்ச சனியும், எங்களப் பிடிச்ச சனியும் ஏழரை நாட்டானாய் ஆயிட்டு. ஒன்னை நாங்களும் அப்படி பண்ணியிருக்கப்படாதுதான். சரி போவட்டும். பேசாமல் இனிமேல் நீ இந்த வீட்டுக்கு வந்துடு, தாயாய் பிள்ளயாய் இருக்கலாம்."

மணிமேகலை மாறவில்லை.

"சரி நாம போவோமா? இவங்ககிட்ட பேசி பிரயோஜனமில்ல. பேசவேண்டிய இடத்துல பேசிக்கலாம். நாளைக்கே என்னோட நோயாளிச் சகோதரிகளை கூட்டி வாரேன். ரத்துனம் அண்ணே ! மெகாபோன் இந்த ஊர்லயே கிடைக்கும். என்னை தாயாய் நினைச்ச தொழிலாளிங்க எனக்கு உதவாமயும் போகமாட்டாங்க. சரி. எழுந்திருங்க! நான் இனிமேல் போய்தான் அங்க, அவங்களுக்கு சாப்பாட்டைக் கவனிக்கணும். மதுராந்தகத்துல வாங்குன அரிசி தீர்ந்து போயிருக்கும்."

ஜெயராஜூம், சங்கரனும், வசந்தியும், கிழவியும் திணறினார்கள். திடீரென்று சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடந்த கிழவர் எழுந்தார். ஜெயராஜிடம், "சாவியைத் தாடா வேட்டியை மாத்தணும்" என்று சொல்லி அதை வாங்கிக்கொண்டு உள்ளே போனார்.

கால்மணி நேரத்தில் நகைப்பெட்டியைக் கொண்டு வந்தார். “இந்தாம்மா! இதுல ஒன் நகை எல்லாம் இருக்கு. நேற்று நான்தான் பாங்ல போய் மீட்டிக்கிட்டு வந்தேன். இந்த பர்ஸ்ல பத்தாயிரம் ரூபாய் இருக்கு மீதியை நானே அங்க வந்து முடிக்கிறேன். மாமாவை நம்பும்மா!”

“ஏதோ வயித்தெரிச்சலில் தாரேன்னோ, வெறுமையில தாரேன்னோ நினைக்காதம்மா, நீ, மாதா மார்க்ரெட்டுக்குப் பதிலா வந்திருக்கிற என்கிறது எனக்குத் தெரியும்மா. அந்த புண்ணியவதி கிட்டதாம்மா நான் ஆரம்பத்துல வேலை பார்த்தேன். மதுராந்தகத்தில் காய்கறி கடை போட்டிருக்கையில் அந்த புண்ணியவதிக்கு காய்கறி கொடுத்தவன் நான். அதோட ஒங்க அப்பாவுக்கு நான் சளைச்சவன் இல்ல. ஒனக்கும் இங்க உள்ளதுல எல்லாத்துலயும் பங்குண்டும்மா. உன் வயிறு எரிஞ்சா, இந்தப் பய மவனுவளும் எரிஞ்சி போயிடுவாங்க! அவங்களும் நல்லா இருக்கணுமுன்னு வாழ்த்தும்மா! ஒன்னை அவங்க படுத்துனபாடு, அவங்க மேல பாவமா போயிடக் கூடாதுன்னு ஆசீர்வாதம் பண்ணும்மா!”

மணிமேகலை, மாமாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு விம்மினாள். கிழவர் இப்போது “என் தாயே! என் தாயே! எங்களை மறந்துடாத தாயே!” என்று மன்றாடினார். ஆனானப்பட்ட ரத்தினங்கூட பிரமிப்பில் தானாக எழுந்தான்.

சிறிதுநேரம் மெளனம் கொடிகட்டிப் பறந்தது.

மணிமேகலை, மாமாவின் காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு காரில் ஏறினாள். மாமியார்க்காரி “நாளைக்கு ஒன் பையன் வந்துடுவான். பார்த்துட்டு போயேன்” என்றாள். அப்படிச் சொல்லியாவது கொடுக்க வேண்டியதைக் குறைக்க நினைத்தாளா அல்லது நிஜமாகவே, கணவரின் பேச்சு அவளைக் கலக்கி மாற்றி விட்டதா என்பது புரியவில்லை.

மணிமேகலை சிறிது யோசித்தாள். அவனைப் பார்த்த பிறகு அவனும் தன்னோடு வருவேன் என்றால். இப்போது தான் அம்மாவை மறந்திருப்பான். இப்போதுதான் ஏக்கக் காயங்கள் ஆறிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அவனைப் பார்த்து தன்னை நினைவூட்டி, அவனுக்கு கலக்கத்தைக் கொடுக்கலாமா? கூடாது! என் கண்மணி இங்கேயே இருக்கட்டும். என் ராஜா, அம்மாவைப் பார்க்க வேண்டாம்! அவன் அப்பா பிள்ளையாகவே இருக்கட்டும்.

மணிமேகலை, மாமியாருக்குப் பதில் சொல்லாமலே காரில் ஏறினாள். அவளுடன் வந்தவர்களும் வண்டியில் அமர்ந்தார்கள். எவரும், எதுவும் பேசவில்லை. அந்த மெளனத்தின் கோர தாண்டவத்தை கலைத்துக்கொண்டே கார் புறப்பட்டது.