இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 7

7
ரு வார காலம் ஓடியிருக்கும்.

மணிமேகலை—பொருட்காட்சி பார்ப்பதற்காக அனைவரையும் அழைத்துச் சென்ற அவள், தன்னையே தானாகப் பார்த்துக் கொண்டாள். இப்போது உலகமே வேறுவிதத்தில்—சிலசமயம் தலைகீழாகத் தெரிந்தது. வீட்டுக்குப் பின்னாலும், முன்னாலும் உள்ள பசுமையான மரங்களைப் பார்த்து ரசிக்கும் அவள் கண்களில் இப்போது பட்ட மரங்களே பட்டன. அணில்கள் ஓடிய இடங்களில் ஓணான்களைத்தான் பார்த்தாள். வீட்டில் மொஸாயிக் தரையில் எங்கே கரை படிந்திருக்கிறது என்று கண்டு, அதை ஈரத்துணியினால் துடைக்கும் அவள், இப்போது வெளியே உள்ள தெருவில் உள்ள குண்டுக் குழிகளைத்தான் உற்றுப் பார்த்தாள். முனிஸிபாலிட்டியின் அதிகாலை சங்கு முழங்கியதும், உடனே எழுந்து வீட்டுக் காரியங்களை கவனிக்கத் துவங்கும் அவள் இப்போது அந்த ஓசையையே இழவுச் சங்காக நினைத்தாள். அருகே படுத்திருக்கும் கணவன், தொலைதூரத்தில் இருப்பது போலவும், தொலை தூரத்தில் உள்ள தந்தை அருகே இருப்பது போலவும் தோன்றியது.

என்றாலும், சும்மா சொல்லக்கூடாது, எல்லோருமே அவள்மீது அன்பைப் பொழிந்தார்கள். அவள்மீது, முன்பெல்லாம் லேசாகப் பொறாமைப்படும் லட்சுமிகடிட அவளை எந்த வேலையும் செய்யக்கூடாது என்று தடுத்தாள். மாமனார் அவளை அனுதாபத்துடன் பார்ப்பதுடன், வெளியே போய்விட்டு வரும்போதெல்லாம் முதலில் அவளைப் பார்த்து ‘எப்படிம்மா இருக்கே’ என்று சொல்லிக்கொண்டேதான் வீட்டுக்குள் நுழைகிறார். எப்போது பார்த்தாலும் ஸ்பேனர்களை எடுத்து வரும் அவன், இப்போது மல்லிகைப் பூ வாங்கி வருகிறான். சென்னையில் இருந்து வந்ததும், செய்தி ஊர்ஜிதம் ஆனதும் அதிகமாய்த் துடித்தவர்கள் குடும்பத்தினர்தான். நாலைந்து நாட்கள் வரை அந்த வீடே இழவாகி இருந்தது. எதையாவது பேசி, அந்தப் பேச்சில் எப்படியாவது சந்திரனை இணைத்துவிடும் பாமாகூட, இப்போது அவளைப் பற்றிய உள் விவரத்தைப் பேசுவதில்லை. ஒரே ஒரு சமயத்தில்தான் “கவலப்படாதீங்க அண்ணி! அண்ணன் இருக்கார். அதைவிட ஒங்களுக்குத் துணையாய் சந்திரன் இருக்கார்” என்றாள். முன்பெல்லாம், அவள் இப்படிப் பேசினால் ‘அடியே கள்ளி’ என்று கூறும் மணி மேகலை இப்போது வெட்டப்பட்ட கள்ளிச் செடிபோல் அவளைப் பார்த்தாள். ரமாவுக்கு பள்ளிப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் அவளுக்கு, இப்போது பாடங்களில் லயிக்க முடியவில்லை. தினமும் மாத்திரை சாப்பிடும் போது, அந்த குழந்தை ‘எனக்கும் சித்தி’ என்று சொல்லும் போது “இது ஒங்களுக்கு என்றைக்குமே தேவைப்படக் கூடாது” என்று சொல்லிவிட்டு புத்தகத்தை மூடுவாள்.

ஒருநாள், மணிமேகலை தற்செயலாக ஒரு பத்திரிகையைப் புரட்டினாள். அதில் ‘தொத்து வியாதிகளிலேயே அதிகமாகப் பரவும் வியாதி சோகந்தான். அதைச் சுமந்திருக்கும் முகத்தைப் பார்ப்பவர் உடலெங்கும் அது பற்றிக் கொள்ளும்’ என்று எழுதியிருந்தது. சில இலக்கிய வரிகள் ஒருவரது மனோபாவத்தை அடியோடு மாற்றும் என்ற கருத்துக்கு உதாரணம்போல் இருந்த அந்த வரிகளைப் படித்ததும் மணிமேகலை வரிக்குதிரை போல் நிமிர்ந்து நின்றாள். இப்போ என்ன நடந்துவிட்டது? விடுதலைப் போரில் வீரனாக, சிங்கமாக கர்ஜித்த சுப்பிரமணிய சிவாவுக்கு வரவில்லையா? ஆப்பிரிக்க நாட்டில் பெருவியாதிக்காரர்களுக்காகவே வாழ்ந்த ஆல்பர்ட் ஸ்வச்சருக்கு வரவில்லையா? எனக்கா? எனக்கா என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம்? அந்த தியாகிகளைப் பார்க்கையில் நான் எம்மாத்திரம்? அதோட எனக்கு ஆரம்பந்தான். கிள்ளி எறியப்பட்டு வரும் வெறும் முளைதான்.

மணிமேகலை பழையவளாக மாற முயற்சித்தாள். பாதிக்குமேல் வெற்றி பெற்றாள். ரமாவுக்கு, சத்தம் போட்டு பாடஞ் சொல்லிக் கொடுத்தாள். பாடங்களைப் படிக்காமல் அரட்டை அடிக்கும் பாஸ்கரையும், சீதாவையும் பலமாகக் கண்டித்தாள். மாமனாருக்கு பால் கொண்டு கொடுத்தாள். கணவனுடன் செல்லமாகச் சிணுங்கினாள். அதே சமயம், முன்பிருந்த ஏதோ ஒன்று குடும்பத்தினரிடம் குறிப்பாகக் கணவரிடம் இல்லை என்பதுபோல் அவளுக்குத் தோன்றியது. சீச்சி... காமாலைக் கண்ணுக்கு, கண்டதெல்லாம் மஞ்சளாம்...

மணிமேகலை ஆராய்ச்சியில் இறங்கவில்லை. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

ஒருநாள்... அதற்குப் பிறகு வந்த நாட்களை எல்லாம் மாற்றிய ஒருநாள்.

ராமபத்திரன் வீட்டுக்கு வந்திருந்தார். இப்போதெல்லாம் அவர் அடிக்கடி வருகிறார். மணிமேகலையிடமும் சகஜமாகப் பழகுகிறார். அவர் வந்திருந்தபோது அவள், வீட்டுக்குப் பின்னால் முருங்கைக் கீரையைப் பறித்துக் கொண்டிருந்தாள். கொல்லைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. என்றாலும் அவரைப் பார்க்க முடியவில்லையே தவிர கேட்க முடிந்தது. ராமபத்திரன், வீரபுத்திரன் போல் பேசினார்:

“நான். நல்லதுக்குத்தான் சொல்லுறேன் என்கிறது ஏன் ஒங்களுக்குப் புரியமாட்டக்கு? இது மோசமானது. அந்த நல்ல பொண்ணுக்கு வந்திருக்கப்படாது. ஆனால் வந்துட்டே. ஒரு குடும்பத்துல ஒருவருக்கு வந்தால் எல்லாரும் டாக்டர்கிட்ட சோதிச்சி பார்க்கணுமுன்னு ஏன் தோணமாட்டக்கு? அக்கா, ஒனக்கு அறிவு எங்க போயிட்டு? மச்சான் நீரு புத்திய கடன் கொடுத்திட்டீரா? சரி, ஒங்களுக்கு இஷ்டமில்லன்னா வேண்டாம். என் மகளயும், பேரப் பிள்ளியளயும் தடுக்கறதுக்கு ஒங்களுக்கு என்ன உரிம இருக்கு ஒண்னு கிடக்க ஒண்ணு வந்துட்டா, என்ன பண் ண முடியும் வெள்ளம் வருமுன்னே அணை போடாண்டாமா? ஏய் லட்சுமி ! ரமா, சேகரோட பேசாம வீட்டுக்கு வந்துரு ! நீ வாழ்ந்தது போதும்!"

லட்சுமியே தந்தைக்குப் பதில் கொடுத்தாள்.

"ஒங்க வேலய பாத்துக்கிட்டு போங்கப்பா. அவங்க படிச்ச ஆம்பிளைங்க. அவங்களுக்குத் தெரியாதா? ஒருவருக்கு ஏதோ ஒண்ணு வந்துட்டு என்கிறதுக்காக, அதையே பிடித்துக்கிட்டு இப்படியா குதிக்கது?”

ராமபத்திரன் மகளை முறைத்துப் பார்த்தபோது, லட்சுமியின் கணவன் சங்கர் "அப்படியே பேசினாலும் இப்படியா சத்தம் போட்டுக் கத்தறது? இவரு போடுற கூச்சலுல இந்த அரக்கோணம் முழுசும் கேட்டிருக்கும்" எனறாா.

பேத்தி ரமாகூட, தாத்தா எதையோ சொல்லக் கூடாததை சொல்லிவிட்டார் என்பதுபோல முறைத்துப் பார்த்தாள். நாலு வயதுப் பயல் சேகருக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் ஒன்று புரிந்தது. தாத்தா அங்கே நிற்கக்கூடாது. நிற்கவே கூடாது.

தாத்தாவின் பின்னால் வந்து "போ. போ. போ" என்று சொல்லிக்கொண்டே அவன் அவரைத் தள்ளினான். எல்லோருக்கும், லேசாக சிரிப்புக்கூட வந்தது. ராமபத்திரன் இன்னும் கோபப்பட்டார்.

"ஒப்புக்காவது அப்படிச் சொல்லாதடான்னு சொல்றியளா? சின்னப் பிள்ளய ஏவி விடுறியளாக்கும்!"

லட்சுமிக்கு அப்பாவின்மீது இரக்கம் ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் மணிமேகலையின் மீதும் சிறிது வெறுப்பு ஏற்பட்டது. சேகரின் கையைப் பிடித்து இழுத்தாள். ராமபத்திரன் பேச்சை விடாமலே "இது சின்னப் பிள்ள செய்யுற காரியமான்னேன்” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, கடைக்குட்டியான இந்திரா, "மாமா ஒங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்" என்று சொல்லிச் சிரித்தாள்.

ஜெயராஜின் அப்பாதான், ராமபத்திரனை சமாதானப் படுத்தினார்.

"அவன் ஒம்ம பேரன்தான் வே! ஒம்ம புத்தியில கொஞ்சமாவது இருக்காதா? ஏய் சேகரு! தாத்தாவ தள்ளுனால் அடிப்பேன் படுவா இருந்தாலும் நீரு, பேசப் படாத வார்த்தய பேசப்படாதுல்லா.”

ராமபத்திரன் போய்விட்டதுபோல் தெரிந்தது. அவர் வெளியே போவது வரைக்கும் உள்ளே போக வேண்டாம் என்று நினைத்தவள் போல், முருங்கை மரத்தைப் பிடித்துக்கொண்டே நின்ற மணிமேகலை உள்ளே வந்தாள். முருங்கைக் கீரையை சமையலறையில் வைத்துவிட்டு, தனது அறைக்குள் வந்தாள். ஜெயராஜ் உடையணிந்து கொண்டிருந்தான். இருவரும் ஒருவரை ஒருவர் சங்கடமாகப் பார்த்துக்கொண்டார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. வெளியே லட்சுமி தன் மைத்துனி பதின்மூன்று வயது இந்திராவை சாடிக் கொண்டிருந்தாள்.

"ஏண்டி! எங்கப்பாவ பார்த்து ஒங்களுக்கு. இதுவும் வேணும்.... இன்னமும் வேணுமுன்னு' சொல்றியே, என்னத்தடி அப்படி பெரிதா கண்டுட்டே? அவரு என்னத்தடி அப்டி பேசக்கூடாதத பேசிட்டாரு?