இல்லம்தோறும் இதயங்கள்/அத்தியாயம் 8
அப்படித்தான், மணிமேகலை உட்பட எல்லோருமே நினைக்கிறார்கள். ஆனால் காலம் மாறவில்லை. அன்று தித்த சூரியனும், வானமும், பூமியும், விஞ்ஞான ரீதியில் தங்களுக்குள்ளே மாற்றங்களுக்கு உட்பட்டாலும், மனிதனைப் பொறுத்த அளவில், அப்படியேதான் இருக் கின்றன. இளமையையும், வாலிபத்தையும், முதுமையையும் ஒரு சேர அனுபவித்துக்கொண்டே காலம் நிற்கிறது. ஒடவில்லை. முதுமை மறுபடி வாலிபமாக, வாலிபம் மறுபடி பால்யமாக, பால்யம் மறுபடி வாலிபமாகி, முதுமையாக காலம் மாறாமல் நிற்கிறது. மாறவில்லை. ஆனால் சூழலுக்கு ஏற்றபடி மாறும் மனிதன்-பிறரை மாற்றியும் பிறரால் மாற்றப்பட்டும் பிறறோடு மாறியும் வரும் மனிதன் பழியை செளகரியமாக, காலத்தின்மீது போட்டுவிடுகிறான்.
அப்படித்தான் மணிமேகலையும் மனிதர்களின் செயலை காலச் செயலாகக் கணக்கிட்டு, காலத்தை நொந்தாள். கண் முன்னாலேயே பிறக்கும் குழதை, அதே கண் முன்னாலேயே- அதே சமயம் அந்த கண்ணுக்குத் தெரியாமலேயே அணு அணுவாய் வளர்ந்து, தானே ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதுபோல, அந்த வீட்டு மனிதர்களும் அவள் உணராமலே- அதாவது படிப்படியாக உணர்ந்தாலும் மொத்தமாக உணராமலே மாறிக் கொண்டிருந்தார்கள். மாறாமல் இருக்க நினைத்த மணிமேகலையையும், அந்த மாற்றம் இட்டும், தொட்டும் இடையூறு செய்தும் மாற்றிக்கொண்டிருந்தது. ராமபத்திரன் மாறியிருந்தால் அவர்கள் மாறியிருக்காமல் இருந்திருக்கலாம். அவர் மாறவில்லை. அவர் புத்தி அப்படியேதான் இருந்தது.
ஒருநாள், செவ்வாய்க்கிழமை என்று ஞாபகம்.
எல்லோரும் மத்தியானச் சாப்பாட்டு மயக்கத்தில் லேசாகத் தூங்கிக்கொண்டிருந்தபோது மணிமேகலை ஏதேதோ நினைவுகளுடன் வெளியேயுள்ள மாமரத்து தூணில் உட்கார்ந்து, லட்சுமியின் மகன் சேகருக்கு ஒரு பனியன் பின்னிக் கொண்டிருந்தாள். தற்செயலாக வீட்டுப் பக்கம் திரும்பியவள் லட்சுமி ஒரு வட்டக் கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு முகத்தில், உதட்டின் ஒரத்தை தட விவிட்டுக் கொண்டிருந்தாள். மணிமேகலை அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.
"என்னக்கா, பெரியப்பா வீட்டுக்கு போறிங்களா? வெயிலாய் இருக்கே?"
"இல்ல!"
"நீங்க கண்ணாடியைப் பார்த்தத வச்சு சொன்னேன்
"அவர இவங்க பேசுன பேச்சுக்குப் பிறகு, நான்தான் போகமுடியுமா? இல்ல. அவருதான் வரமுடியுமா? இந்த உதட்டுப் பக்கமாய் ஒனக்கு வந்தது மாதிரி ஒரு புள்ளி வந்திருக்கு. அத பாக்குறேன்.”
மணிமேகலை விக்கித்துப் போனாள். பனியனில் தப்புத் தப்பாக பின்னல்கள் விழுந்தன. என்ன செய்வதென்று புரியாமலும், எப்படிப் பேசுவதென்று தெரியாமலும் லட்சுமியையே வெறித்துப் பார்த்தபோது, லட்சுமி அந்தப் பெயருக்கு எதிர்மாறான பெயரின் முகத்தைப் போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணாடியை அதில் ஏதோ கோளாறு இருப்பதுபோல் உற்றுப் பார்த்துக்கொண்டு "ஒனக்கு இருக்கது மாதிரியே தான் வந்திருக்கு. எல்லாம் எதிர்பார்த்ததுதான்" என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்விட்டாள்.
மாமரத்து வேரில் உட்கார்ந்து, அதன் அடியில் தலைவைத்து அமர்ந்திருந்த மண்ணிமேகலைக்கு அந்த மரத்தின் ஒரு கிளையாகப் போய்விடக் கூடாதா என்று தோன்றியது. கிளையாக தன்னை எடுத்துக்கொள்ள மறுத்த மரத்தை தண்டிப்பவள் போல், தன் தலையை வைத்தே அதில் அடித்துக்கொண்டாள். மரத்தின் வேருக்கு வேராக, அவள் போகத் துடித்தாள். அப்படித் துடிப்பவள்போல், வேருக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளிக்குள் பெருவிரலை விட்டுக் கிளறினாள்.
எப்படிப் பேசிவிட்டாள் ! அப்படியா பேசினாள்? அப்படியா எதிர்பார்த்ததுதானாம்! எனக்கு இருக்கது மாதிரியே இருக்காம். எனக்கு எங்கே இப்போ இருக்கு? புள்ளி போயிட்டே! டாக்டர்கட குணமாயிட்டு. ஆனால் மருந்தை நிறுத்தாண்டாமுன்னுதானே சொல்லியிருக்கார். லட்சுமி அக்காவா இப்படிப் பேசினது? லட்சுமி அக்காவா..?
பின்னிய பனியனில் வில்லங்கம் ஏற்பட்டது. ஊசி யையும், நூலையும் உள்ளே வைப்பதற்காக அவள் வந்தபோது லட்சுமி தன் மாமியாரின் காதைப் பிடித்துக் கொண்டு "ஒங்களுக்கு லேசா தெரியுது அத்த” என்று சொன்னாள். அவள் சொல்லட்டும். ஆனால் இந்த மாமியார் மருமகளான தம்பி மகளிடம் இன்னொரு காதையும் நீட்டுகிறாள். புள்ளி இருக்கோ, இல்லியோ புள்ளி போடுகிறார்கள்.
மணிமேகலையைப் பார்த்த மாமியார்க்காரி, அவள் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்து "ஏம்மா வெளில போய் உட்காருற? எனக்கு காதுல லேசா வலி. முன்னால காத வடிச்சி தடயம் போட்டிருந்தேனா. அப்புறம் இவருகூட ஊர்ல. இருந்து இங்க வந்த பிறகு காத அறுத்து கம்மல் போட்டனா... அறுத்துட்டு தச்சவன் சரியா தைக்கலியா.-- அதனால, வயசாக வயசாக லேசா வலிக்கு அதத்தான் என் தம்பி மகள்கிட்ட காட்டிக்கிட்டு இருக்கேன்" என்றாள்.
மணிமேகலை, வெளியே சிரித்து உள்ளே அழுதாள். மாமியார் தன்னை நேரடியாகக் குறை சொல்லாததில், அவளுக்கு சற்று மகிழ்ச்சிதான். ஆனால் என்னமா நடிக்கிறார்? இவருக்கு, ஒரு காதுதானே வலிக்கதாய் சொல்வாரு. இப்பொ எப்படி ரெண்டு காதையும் காட்டணும். 'தம்பி மகள்கிட்ட' என்கிறாரே, நான் அந்நியம் என்கிறதை சொல்லாமச் சொல்றாரோ? ஒரு மாதத்துக்கு முன்னால சமையலறைப் பக்கம் போன போது. இனிமே நீ எங்களுக்கு உழச்சது போதும், நாங்க தான் ஒனக்கு உழைக்கணுமுன்னு சொன்னாரே. அதுல நான் 'கொடுத்து வச்ச மருமகள்’னு சந்தோஷப்பட்டேனே. அது தப்போ? சமையலறைக்குள்ள என்ன விடக் கூடாதுன்னு அப்படிப் பண்ணியிருப்பாங்களோ? நான் பறிச்சி கொடுத்த முருங்கை இலைகளை பார்த்துட்டு ஒரே புழும்மா...' என்று சொல்லி அவற்றை வெளியில் எறிந்தார்களே, அவர் எறிந்தது கீரைகளையா? அல்லது...
வெம்பிப்போன மாம்பழம்போல் முகம் மாற, அவள் தன் அறைக்குள் வந்தாள். கணவன் கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவனை அப்போதே எழுப்பி, அப்போதே சொல்லி அப்படியே கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
அந்த இரண்டு நிமிட மனக் கலக்கத்தை பத்து நிமிடமாகப் போராடி அடக்கிக்கொண்டு கண்ணயர்ந்த கணவனையே பார்த்தாள். வெளிலே நிற்கும்போது, மல்லாந்து படுத்து ஏதோ ஒரு புத்தகத்தை படிப்பதுபோல் தெரிந்த கணவன் உடனடியாகத் தூங்கிவிட்டதில், அவளுக்கு அவன்மீது அனுதாபம் ஏற்பட்டது. படுத்தவுடனேயே தூங்கிவிடுகிற பழக்கம். சர்தார் படேலும், மகாத்மா காந்தியும் இப்படித்தான் தூங்கிவிடுவார்களாம். அவ்வளவு உறுதியான மனமாம்.
தலைவர்களோடு தன் கணவனை ஒப்பிட்டபோது மணிமேகலைக்குப் பெருமையாக இருந்தது. கொஞ்சம் அனுதாபமும் ஏற்பட்டது. 'இனிமேல். வழியே இல்லை' என்பதுமாதிரி துக்கம் வரும்போதெல்லாம், இயற்கை தூக்கத்தைக் கொடுப்பது அவளுக்கே தெரியும். பாவம்! படுத்தவுடனே தூங்கிடுறாரே. இருக்காதா பின்னே. லேத் மிஷின் இன்னும் வரல. பெட்ரோல் விலை தீர்மானம் ஆகிறது வரைக்கும் பங்க் கிடைக்காதாம். இதுவாவது பிஸினஸ்; கவலயில்ல! பொறுப்புணர்வு. ஆனால் கட்டின மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் 'அதை' நினைத்தால் கவலை இருக்காதா? என்மேல உயிரையே வச்சிருக்கவரு. என் உடம்புக்கு வந்தத தன் உயிருக்கு வந்ததா நினைச்சுக்கிட்டாரு... எழுந்திருக்கட்டும். 'இப்படியா கவலப் படுறதுன்னு' நல்லா திட்டனும்,
மணிமேகலை அவனுக்கருகே ஒரு காலை தந்தையின் இடுப்பில் போட்டுக்கொண்டு தூங்கும், தன் மூன்று வயது மகனையே பார்த்தாள். முன்னால் துருத்திக்கொண்டிருக்கும் முடி அப்பாவைப் போன்ற உருண்டை முகம். அதே கம்பீரம். அம்மாவைப் போன்ற பப்பாளிப் பழநிறம். அளவுக்கு மீறி வருத்தப்படும் போதெல்லாம், கன்னத்தில் கைவைத்து நிற்கும் தன்னருகே வந்து முன் கைக்கும், தோளுக்கும் இடையே தலையைத் திணித்துக் கொண்டு அறிந்தோ அல்லது அறியாமலோ கையை அவன் எடுத்து விடுவான். அந்த நிமிடத்திலேயே அவன் தன்னையே மறந்துவிடுவாள். ஒசைப்படாமல் குழந்தையின் கன்னத்தில் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிட்டு நிமிர்ந்தபோது அவள் கைபட்டு தூக்கம் கலைந்து கணவன் எழுந்தான்.
லட்சுமி சொன்னதை கணவனிடம் சொல்லலாமா என்று அவள் யோசித்தபோது, ஜெயராஜ் மடமடவென்று எழுந்து ஹேங்கரில் தொங்கிய பேண்ட், சட்டையைப் போட்டுக் கொண்டான். இந்தமாதிரி சந்தர்ப்பங்களில், முன்பெல்லாம் அவள் கைகளைப் பிடித்திழுத்து தன்மேல் கவிழ்க்கும் அவன் இப்போது முறுவலிக்காமலே எழுந்து என்னவென்று கேட்காமலே, உடையணிந்து புறப்டப் போனான். அவனிடம் நடந்ததைக் கூறி, முடியுமானால், கணவனுடன் சொத்தைப் பிரிக்காமலே தனியாக இருக்கலாம் என்று யோசனை சொல்வதற்காக, அவள் நெஞ்சுக்குள் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவன் புறப்படப் போனபோது "ஓங்களத்தான் ! ஒரு முக்கியமான விஷயம் பேசணும்" என்றாள் ஜெயராஜ் அதைவிட முக்கியமான விவகாரத்திற்குப் போகப் போகிறவன்போல், இரண்டு கன்னங்களையும் 'டென்ஷனாக' உப்பிக்கொண்டே "அப்புறமாய் பேசலாம். இப்போ பேக்டரிக்கு அவசரமாய் போகணும்" என்றபோது, அவள் "ஐ அம் ஸாரி” என்றாள். இரண்டு நிமிட இடை வேளைக்குப் பிறகு இன்னும் மோட்டார் பைக் ஸ்டார்ட் ஆன சத்தம் கேட்கவில்லையே' என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது வரவேற்பு அறையில் இன்னொரு சத்தங் கேட்டது. லட்சுமியின் தங்கை வசந்தி வந்திருக்காள் போலும். அவளும் கணவனும் பேசுவது நன்றாகக் கேட்டது. மற்றவர்கள் பேசுவதும் தெளிவாகக் கேட்டது.
"வசந்தி! நீ புறப்படுகிற சமயத்துல எதிர்ல வந்திருக்கே. இன்னைய ஈவினிங் எப்படிக் கழியுதுன்னு பார்க்கலாம்."
வசந்தி கவிழ்ப்புப் பார்வையுடனேயே பேசினாள்.
"எங்கப்பா எந்த நோயும் இல்லாம ஏன் ஹெல்தியாய் இருக்கார் தெரியுமா? சொல்லுங்க பார்க்கலாம்."
"சொன்னால் பார்க்க முடியாது. கேட்கத்தான் முடியும். நீயே சொல்லு பார்க்கலாம்."
"நீங்களே பார்க்கலாமுன்னுதானே சொல்றிங்க." “ஓ அதுவா? ஒன்னமாதிரி அழகான பொண்ணு பேசுனாலும், பாடுனாலும் கேட்க முடியாது. ஆளையே பார்த்துக்கிட்டு இருக்கலாம் போலத் தோணும்.”
வசந்தி தன் கவிழ்ந்த பார்வையை அவனை நோக்கி வீசியபோது பாமா, “ஏய்... மாட்டிக்கிட்டாங்க. மாட்டிக் கிட்டாங்க..” என்றாள். ஜன்னல் வழியாக தவியாய் தவித்த மணிமேகலை பாமாவையே பார்த்தாள். இந்த பாமாகூட மாறியிருப்பாள் போலுக்கே. ஆரம்பத்தில் அவளுக்கு வந்ததை தனக்கு வந்ததுபோல் கருதியவளாய் கன்னம் வீங்க அழுத அவள், இப்போது அதே கன்னங்கள் வீங்கும்படி சிரிக்கிறாள். சீச்சி! நான் ஒரு பிசாசு! பேய்! அரக்கி! பிறர் சந்தோஷப்படுறதை பொறுக்க முடியாத பொறாமைக்காரி!
வெளியே கும்மாளமான பேச்சு அவள் காதில் குத்தியது. ஜெயராஜ், வசந்தியைச் சீண்டினான்.
“சரி ஸ்ப்ஜெக்டுக்கு வருவோம். ஒப்பா ஹெல்தியாய் இருக்கதுக்கு என்ன காரணம்? சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுறாரா?”
“இல்ல தினமும் காலையில எழுந்ததும் என் முகத்துலதான் விழிக்காரு.”
“ஓஹோ ! இந்த சிட்டு முகத்துல விழிக்காரா? அப்படின்னா ஒண்ணு பண்ணேன். தினமும் நான் துங்கி எழுந்திருக்கு முன்னால என் முகத்துல விழியேன்.”
“அதத்தான் ஒங்க அப்பா கெடுத்துட்டாரே” என்று கிழவிக்காரி பெருமூச்சு விட்டாள்.
ஜெயராஜூக்கு திருமணம் ஆகும்போது, வசந்தி ‘பெரியவளாக’வில்லை. ராமபத்திரன் தன் மகள் பெரிய வளானவுடனேயே ஜெயராஜுக்குக் கொடுப்பதாகவும் அதுவரை அவனைக் காத்திருக்கச் செய்யும்படியும், அக்கா கிழவியிடம் சொன்னார். ஆனால் கிழவர் மறுத்துவிட்டார். “ஒன் தம்பி வீட்ல பெண்ணு எடுக்க இன்னும் எனக்குப் பைத்தியமா?” என்றார். ஜெயராஜ், அம்மாவிடம் ஒனக்குப் பைத்தியமா? இல்ல ஒங்க தம்பிக்குப் பைத்தியமா? இல்ல ஒங்க ரெண்டு பேருக்கும் பைத்தியமா? அவள் வயசென்ன... என் வயசென்ன” என்று சொல்லிவிட்டான்.
கிழவி பழையதை கோடி காட்டிப் பேசியதால் பாதிக்கப்பட்டவர்கள் போல், எல்லோருமே சிறிது துணுக்குற்றார்கள். ஜெயராஜ் எதையோ சிந்திப்பவன் போல் மோட்டார் பைக் சாவிக்கொத்தின் வட்டத்தைப் பிடித்து சுற்றிக் கொண்டிருந்தான். பிறகு திடீரென்று மோட்டார் பைக்கை நோக்கிப் புறப்படப் போனான். உடனே வசந்தி “உங்களுக்கென்னய்யா, மோட்டார் பைக் இருக்கு ஒரு நொடில போயிடுவிங்க. நான்தான் எங்க வீட்டுக்கு நடந்து போகணும்” என்றாள்.
சங்கரன் சும்மா இருக்கலாம். இருக்கவில்லை.
“வேணுமுன்னால் பின்னால ஏறிக்கோ. ஒன்னை வீட்ல டிராப் பண்ணிடுவான்.”
ஜெயராஜ் ஸ்டார்ட் செய்த பைக்கில் எதையோ துடைப்பவன்போல் ‘பாவலா’ செய்தபோது வசந்தி, லட்சுமியை தர்மசங்கடத்துடன் பார்க்க கிழவி, “அய்யா கூடப் பிறந்த அத்தை மகனோட போக யாருகிட்ட கேக்கணும்? வேணுமுன்னா போ” என்றாள். லட்சுமி “ஆமாம். சீக்கிரமா வீட்டுக்குப் போயிடலாம். அடேயப்பா, எங்க வீடு எவ்வளவு தொலவுல இருக்கு” என்றாள்.
ஜெயராஜின் பைக் இன்னும் நகரவில்லை. வசந்தி தயங்கித் தயங்கியே நடந்தபோது, பாமா “இவங்க சரியான கர்நாடகம்” என்றாள். உடனே வசந்தி தான், மிஸ். மெட்ராஸ் என்பதுபோல் வேகமாக நடந்து, பின் வீட்டில் உட்கார்ந்தாள்.
‘பைக்’ நகர்ந்தது. மணிமேகலையும், தெருவைப் பார்த்திருந்த ஜன்னலருகே நகர்ந்தாள். அவள் இருதயம் அந்த எஞ்ஜின் மாதிரி துடித்தது. வசந்தி தன் கவிழ்ப்புப் பார்வையை உரிமைக்காரியின் மீது வீசினாள். மணி மேகலை மறைந்து கொண்டாள்.
ஜெயராஜூம், வசந்தியும் சிரித்துக்கொண்டே போனார்கள். சற்று தொலைவில், அவன் திரும்பி அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே செல்வதும், அவளும் பதிலுக்கு எதையோ சொல்லிச் சிரித்துவிட்டு, தான் சாய்ந்திருக்கும் ஜன்னலையே பார்ப்பதும் மணிமேகலைக்குத் தெரிந்தது. அவளால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கணவனுடன் பைக்கிலும் பல இடங்களுக்குப் போயிருக்கிறாள். அநேகமாக மாலை சமயங்களாகத்தான் இருக்கும். சாலையில் ஆட்கள் கண்ணில் படாதபோது அவன் தன் முழங்கையை வைத்து அவளை இடிப்பான். அவள், அதற்குப் பயந்ததுபோல் தன் இடுப்புக்கு மேலுள்ள பகுதியை அவன் முதுகோடு இறுக்கிக்கொண்டு அவன் விலாவில் முகத்தை வைத்து உராசுவாள். அவரும்... இவள் கிட்டயும் அப்படி நடப்பாரோ? அவளும்... என்னை மாதிரியே... என்னை மாதிரியே...
மணிமேகலைக்குக் கண்ணீர் வரவில்லை. அளவுக்கு மீறித் துக்கம் வந்தால், கண்ணீர் வராதாம். அது துக்கத்துக்குப் பயந்து ஒதுங்கிக் கொள்ளுமாம். அவசரமாக வேலையிருப்பவர் போலவும், மனைவியிடம் அரைநிமிட நேரங்கடப் பேச அவகாசம் கிடைக்காமல் போனவர் போலவும், அறையை விட்டு வெளியேறியவர், அரைமணி நேரம் பேசிவிட்டுப் போகிறார். பேசிவிட்டு சும்மா போகவில்லை. வசந்தியுடன் போகிறார்! வசந்தி வரும் போதெல்லாம் ‘கவு கண்ணுப் பேய் வந்துட்டு. இவளைப் பார்த்துட்டு போற காரியம் உருப்பட்டாப் போலத்தான். அவளுக்கும், அவள் அப்பன் மாதிரியே புத்தி... அற்பப் புத்தி’ என்று முன்பு அடிக்கடி சொல்பவர்; தான் அவரது வாயை ‘அப்படிப் பேசக்கூடாது’ என்பது போல் கைவிரல்களால் மூடும் போதெல்லாம், அந்த விரல்களைக் கிள்ளி விலக்கிவிட்டு வாய்க்கு விடுதலை வாங்கி வார்த்தைகளை வெளியிடுபவர்; இப்போது அதே வசந்தியை, காலையில் வரச் சொல்கிறார். கவு கண்ணுப்பேய் சிட்டாகிவிட்டாள். அற்பப் புத்தி அற்புதப் புத்தியாகிவிட்டது. பேய் பின்னால் உட்கார்ந்துவிட்டது. தனக்குள்ளே சத்தம் போடுவதுபோல் விவாதித்துக் கொண்டிருந்த மணிமேகலை, வரவேற்பு அறையில் எஞ்சி யிருப்பவர்களின் பேச்சையும் காதில் வாங்கிக் கொண்டாள். லட்சுமியின் குரல் பலத்தது.
“ஓங்களத்தான் என்னை போற வழில எங்க வீட்ல விட்டுட்டுப் போங்க.”
“நான் கார்ல சோளிங்கர் போறேன்.”
“காருக்கு ஆசப்பட்டுத்தான் கேட்கேன். ஒங்கமேல ஆசப்பட்டுன்னு நினைக்காதிங்க.”
“ஒனக்கு வரவர வாய் அதிகமாவுது. இப்போ ஒப்பா வீட்ல என்ன பண்ணப் போற?”
“ஆயிரம் இருக்கும். நீங்க அவரைத் துரத்திட்டீங்க. ஆனால் நான் அவருகிட்டே பேசியாகணும். யாருகிட்ட மறச்சாலும் அவருகிட்ட மறைக்கப்படாது.”
“என்ன உளறுற!”
“ஒண்ணும் உளறல. கார்ல போகும்போது சொல்றேன்.”“ஓ! இப்பதான் எனக்குப் புரியுது. ஏய்... என் தம்பி... ஒன் தங்கச்சிய எங்கேயும் கொண்டு போயிட மாட்டான். வீட் லதான் விட்டிருப்பான். நீ ‘செக்’ பண்ண வேண்டியதில்ல.”
“ஓங்களுக்கென்ன பைத்தியமா?... அத்தை மகன் பாடு... மாமா மகள் பாடு. நான் அப்பாவ அவசரமா பார்த்தா கணும். பெத்தவருக்குத்தான் தெரியும் பிள்ளை அருமை.”
இப்போது கிழவி இடைமறித்தாள்.
“கொண்டுதான் விட்டுடேண்டா. அவள் இந்த வீட்ல கால் வச்சபிறகு வாங்கின காரு இது. அவளுக்கில்லாத காரா?”
சங்கரனும், லட்சுமியும் காரில் போனார்கள். மணிமேகலை பதைபதைத்தாள். லட்சுமி அப்பாக்காரரிடம், தன் உதட்டுப்பக்கம் புள்ளி இருப்பதாகச் சொல்லப் போகிறாள். அந்த மனிதர் இங்கே வந்து குதிக்கப் போகிறார். பாகப் பிரிவினையைத் தடுத்த தன் உடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டுவது போல பேசப்போகிறார்.
ராமபத்திரன் வருவாரே என்ற எண்ணத்தை அவள் வலுக்கட்டாயமாக விலக்கும்போது, வசந்தி கணவனுடன் சேர்ந்து போன நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. இது போனால் அது... அது போனால் இது...
மணிமேகலை, இன்னும் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையையே பார்த்தாள். ஏனோ, அவனை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. அவனை ‘என் ராசா... ஒன்னத்தான்’ என்று சொல்லி தட்டியெழுப்பினாள். அப்படியும் தூங்கிய குழந்தையை வாரியெடுத்து, தோளோடு சேர்த்து எடுத்துக்கொண்டே வெளியே வந்தாள்.வீட்டுக்குப் பின்னால் வந்து, அவள் முருங்கை மரத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோது, தன் தோளில் யார் கையோ படுவது கண்டு அவள் திரும்பி னாள். கடைக்குட்டி மைத்துனியான இந்திரா—இன்னும் பதின்மூன்று வயதுகூட முடியாத அந்தச் சிறுமி, அண்ணியின் மனவுளச்சலைப் புரிந்துகொள்ளும் பக்குவம் செல் லாத அவள், அண்ணி ஏதோ கஷ்டப்படுவதால், தானும் கஷ்டப்படுவது போல் மணிமேகலையின் முன்னால் வந்து அவள் மாராப்புச் சேலையை இழுத்து மூடி, காதுப் பக்கம் தொங்கிய முடியை ஒதுக்கி, கை வளையல்களை உருட்டினாள். எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் கண்கள் அன்பைச் சொட்டின.
மணிமேகலையால் தாள முடியவில்லை. மைத்துணிை யின் கைகளைப் பற்றிக்கொண்டே “நீ நல்லா இருப்பம்மா. நல்லா இருப்பே...” என்று சொல்லி விம்மினாள்.
“எதுக்கு அண்ணி அழுவுறிங்க? நோய்தான் சுகமாயிட்டே!”
“ஒண்ணுமில்லம்மா. எதையோ நினைச்சால் என்னமோ வருது. நான் அழுததை யாருகிட்டயும் சொல்ல மாட்டியே?”
“சரி அண்ணி. பிள்ளியக் குடுங்க, ஒங்களுக்கு கை வலிக்கும்.”
எந்தச் சமயத்தில் ராமபத்திரன் வரப்போகிறாரோ என்று, அவள் முருங்கை மரத்தை சுற்றிச் சுற்றியே வந்தபோது, பூமியும் தன்னைச் சுற்றியதில் இரவு வந்தது.
லட்சுமி வந்தாள். வசந்தியை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாள். இந்திரா மூலம் விசாரித்ததில், மணிமேகலைக்கு இரண்டு இனிப்புச் செய்திகள் கிடைத்தன. ராமபத்திரன் தூத்துக்குடிப் பக்கம் போயிருக்காராம். வருவதற்கு ஒரு வாரம் ஆகுமாம். மகள் வசந்திக்கு, அங்கே ஒரு வரன் இருக்காம். பையனைப் பார்த்துவிட்டு, அல்லது அவனைப் பார்க்க முடியாவிட்டாலும் பெரிய காரிய மில்லை, அவன் சொத்துச் சுகங்களைக் கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரப் போகிறாராம். ஆக ஆசாமி, இப்போதைக்கு வரமாட்டார். அவர் லட்சியம்—போன காரியம்—வெற்றி பெற வேண்டும். மோட்டார் பைக்கின் பின்ஸிட் காலியாக இருக்க வேண்டும்.
மணிமேகலை, சந்தோஷத்தில் தன் குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்தாள். வெளியே விளையாடிக் கொண்டிருந்த ரமாவைப் பார்த்து “வா, பாடம் படிக்கலாம்” என்றாள். ரமாவுக்குப் பதிலாக லட்சுமி ‘புரக்ஸி’ அட்டெண்ட்டென்ஸ் கொடுத்தாள்.
“அவள் விளையாடட்டும். விளையாடுற பிள்ளய கெடுக்காண்டாம்.”
அந்தச் சமயத்தில், அந்த வார்த்தை பெரிதாகத் தெரியவில்லை. கணவன் வந்ததும் லட்சுமி ‘புள்ளி’ போடுவதை பக்குவமாகச் சொல்லி, தனியாக ஒரு வீடு பார்த்து இருக்க வேண்டும். டாக்டர் சொல்லியும், சந்தேகப்படும் இவர்களுக்கு ஒரு மெண்டல் ட்ரீட்மெண்ட் தேவை. அவர்களுக்கு மனநோய் வந்திடக் கூடாது. அதற்கு மருந்து கணவனுடன் விலகியிருப்பதுதான்.
ஜெயராஜ், இரவு பத்து மணிக்கு வந்தான். அயர்ந்து படுத்துக் கிடந்த மணிமேகலையை எழுப்பினான். அவளுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. என்னதான் இருந்தாலும் கட்டிய கணவனாச்சே அடியே வசந்தி! இங்க பாருடி! இப்போ என்னடி சொல்ற?
தாங்கள் பேசுவது, பிறருக்குக் கேட்க வேண்டாம் என்பதுபோல் மணிமேகலை கதவைச் சாத்தப் போனாள். ஜெயராஜ் சாவதானமாக ஆணையிட்டான்.“கதவச் சாத்தாதே. இங்க ஒரே புழுக்கமாய் இருக்கு. பெட்ஷீட் வேணும். அதுக்குத்தான் ஒன்னை எழுப்பினேன். வராந்தாவுல படுக்கப் போறேன்."
ஜெயராஜ், அவள் பதிலையோ அல்லது அவளையோ எதிர்பாராததுபோல் போகப் போனான். ‘இங்கே ஜன்னல் காற்று நல்லா வருமே’ என்று சொல்லப்போன அவள், அந்த வார்த்தைகளைக் கடிப்பவள் போல் பற்களைக் கடித்தாள். மத்தியானமே ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்று சொல்லியாகிவிட்டது. இப்போது பேசலாம் என்று அப்போது சொன்ன அவரே, எப்போதும் பேச விரும்பாதவர் போல போகத் துடிக்கிறார். போகட்டுமே—போனால் போகட்டுமே...
ஜெயராஜ் போய்விட்டான். அந்தச் சுவருக்கு அருகே உள்ள இடத்தில்தான் படுக்கப் போகிறான் என்றாலும், அவன் எங்கேயோ போவதுபோல் தோன்றியது. இருவருக்கும் இடையே இருப்பது ஒரே ஒரு குறுக்குச் சுவர்தான்... இதை இடித்துக் கொண்டுபோய், அவரைப் பார்க்க முடியாது. இந்த நான்கு சுவர்களுக்குள் உள்ள இடிபாடுகளுக்குள்ளேயே அவள் இருந்தாக வேண்டும்.
இவரும் மாறிவிட்டாரே. ஒருவேளை இங்கே இருந்தால் உடலுறவை கேட்பேன் என்று நினைக்கிறாரோ? இந்த நிலைமையில் ‘அதுவா’ பெரிசு? சரியாய் இரண்டு மாதம், எட்டு நாளாகிறது—இவருடன் அந்தரங்கமாய் பேசி, அந்தரங்கங்களைப் பகிர்ந்து நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டிற்காக, லூப், வாசெக்டமி, நிரோத், டுபெக்டமி என்கிறார்களே... அதெல்லாம் தேவையில்லை. ஒரு பெண்ணுக்கு ‘அந்த’ வியாதி வந்திருப்பதாய் சொல்லிட்டால் போதுமே, அப்புறம் ஜனத்தொகை தாராளமாய் குறையுமே. இது ஏன் இந்த சர்க்காருக்கு தெரியமாட்டக்கு எழுதிப் போடணும்...மணிமேகலை, தனக்குள்ளே பேசிய நகைச்சுவையை தானே கேட்டு தானே ரசித்து, தானே சிரித்து, தானே அழுதாள். தூங்கிக் கொண்டிருந்த பையனின் கால்களை எடுத்து தன் மடியில் போட்டு, அவன் கையை எடுத்து பெற்ற வயிற்றில் வைத்துக்கொண்டு அழுத்தினாள்.
வெளியே—
“பரவாயில்லயே... என் முகத்துல காலையில விழிக்கதுக்காக வந்துட்டாளே வசந்தா.”
“ஒங்க முகத்துல நான் விழிக்கதுக்காக அல்ல; என் முகத்துல நீங்க விழிக்கதுக்கு.”
“அப்படின்னா, என் ஹெல்த்தைப் பற்றி நான் பயப்படாண்டாம். ஆஹா. ஓஹோ... ஹா... ஹோ ..ஹி... ஹி...”
உள்ளேஅம்மாவின் வயிற்றோடு தன் கையை வைத்திருந்த குழந்தை, அந்த வயிற்றின் சூடு தாங்காமல் கையை எடுத்தது.