இளையர் அறிவியல் களஞ்சியம்/அகச்சிவப்புக் கதிர்கள்
அகச்சிவப்புக் கதிர்கள் : இதை ஆங்கிலத்தில் 'இன்ஃப்ரா ரெட் ரேய்ஸ்' (Infra Red Rays) என்று கூறுவார்கள். அகச்சிவப்புக் கதிர்கள் வெப்பம் மிகுந்த கதிர்களாகும். இவை கண்ணுக்குப் புலனாவதில்லை. ஆயினும் நம் உடல் மூலம் வெப்ப உணர்வைப் பெற முடியும். கண்ணுக்குத் தெரியும் சூரிய ஒளிக்கற்றையை முப்பட்டகம் வழிச் செலுத்தினால் அது ஒரு நிறமாலையை உருவாக்கும். இந்நிறமாலையில் அலை நீளம் அதிகமான சிவப்புப் பகுதி உண்டு. அப்பகுதிக்கு அப்பால் உள்ள பகுதியில் வெப்பம் அதிகம் இருக்கும். கண்ணுக்குப் புலனாகாத வெப்பம் மிகுந்த இக்கதிர்களே 'அகச்சிவப்புக் கதிர்கள்’ என்று அழைக்கப்படுகிறது.
கதிரவனின் ஒளிபோன்று இவை நம் கண்களுக்குத் தெரிவதில்லை என முன்பே அறிவோம். எனினும் இக்கதிர்களால் பொருள்கள் எளிதாக வெப்பமூட்டப்படுகின்றன. இவை வெப்ப அலைகளாகும். வெப்பமானியைக் கொண்டு இதன் வெப்ப அளவை அளந்தறியலாம். நாம் பயன்படுத்தும் சாதாரணக் கண்ணாடிகளைக் கொண்டு அகச்சிவப்புக் கதிர்களைக் கடத்துவது எளிதல்ல எனவே இதற்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஒளிக் கருவிகள் மூலமே ஒளியைக் கடத்தி ஆராய்கிறார்கள்.
கதிரவனின் சாதாரண ஒளிக்கற்றைகளை விட அகச்சிவப்புக் கதிர்களின் அலைநீளம் அதிகம் எனக் கூறினோமல்லவா? இக்கதிர்கள் காற்று மூலக்கூறுகளாலும் காற்று மண்டலத் துகள்களாலும் பெருமளவு சிதறுவதில்லை. இதனால் இக்கதிர்கள் நீண்டதூரம் ஊடுருவிச் செல்ல முடிகிறது. இதன்மூலம் நெடுந்தொலைவுக்கு அப்பால் உள்ள பொருட்களை எளிதாகப் படம் பிடிக்க இயலுகின்றது. இக்கதிர்கள் மூலம் வானிலிருந்து தரையிலுள்ளவற்றையும் தரைக்குள் உள்ளவற்றையும் படம் பிடிக்கலாம். அவ்வாறே தரையிலிருந்து வானில் உள்ளவற்றையும் படம்பிடித்து அறியலாம். விண்கோள்களான வியாழன் (Jupiter), வெள்ளி (Wenus), சனி (Saturn) போன்ற கோள்களையும் அவற்றில் உள்ள அம்மோனியா, மீத்தேன் போன்ற பொருள்களைப் பற்றியும் அறிய முடிந்திருக்கிறது. இவ்வாறே அகச்சிவப்புக் கதிர்களின் துணையோடு மற்ற கோள்களையும் படம் பிடித்தறிய தொடர் முயற்சிகள் நடந்து வருகின்றன.
சில சமயம் வானில் தூசிப்படலம் மிகுந்திருக்கும், பனிப்படலமும் புகை மூட்டமும் நிறைந்திருக்கும். இச்சமயங்களில் எடுக்கும் ஒளிப்படம் தெளிவாக இருக்காது. இதற்குக் காரணம் சாதாரணமாகப் பார்வைக்குப் புலனாகும் ஒளிக்கதிர்கள் சிதறடிக்கப்படுவதேயாகும். அகச்சிவப்புக்கதிர்களைப் பொறுத்தவரை இத்தகைய ஒளிச்சிதறல் ஏற்படுவது மிக மிகக் குறைவாகும். இல்லை என்றே கூடச் சொல்லிவிடலாம். எனவே, படப்பிடிப்பிற்கெனத் தனியே தயாரிக்கப்பட்ட ஒளிப்படத் தகட்டை (Photographic Plate)க்கொண்டு தெளிவாகப் படம் பிடிக்க முடியும். அகச்சிவப்புக்கதிர் ஒளித்தட்டின் மீது விழும்போது எளிதாகப் பதிவாகி விடுகின்றது.
அகச்சிவப்புக் கதிர் தொலைநோக்கிகள் உண்டு. அவற்றைக் கொண்டு எத்தகைய மறைவிடத்தையும் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். போரின்போது எதிரிகள் நிலைகொண்டுள்ள இடங்களைக் கண்டறிய முடியும். அவர்களின் பதுங்குமிடங்களையும் கூட அறிந்து கொள்ள இயலும். இதன் மூலம் போர்க்காலங்களில் அகச்சிவப்புக் கதிர்கள் நாட்டுப் பாதுகாப்புக்குப் பேருதவி புரிவதாயுள்ளன.
உடல் நோய்களைக் கண்டறியவும் அவற்றைக் குணப்படுத்தவும்கூட அகச்சிவப்புக் கதிர்கள் துணைபுரிகின்றன. சாதாரண ஒளியைவிட ஊடுருவும் தன்மை அகச்சிவப்புக் கதிர்களுக்கு அதிகமிருப்பதால் இளம்பிள்ளைவாதம், சுளுக்கு, வாத நோய் போன்ற உடற் கோளாறுகளை எளிதாகக் கண்டறிய இயலுகின்றது.
உடலுள் ஏற்படும் கோளாறுகளை மட்டுமல்ல, இயந்திர உறுப்புகளுள் ஏற்படும் பழுதுகளையும் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு எளிதாகக் கண்டறியலாம்.
காசோலைகள், பத்திரங்கள் இவற்றில் யாரேனும் கள்ளக் கையெழுத்துப் போட்டிருந்தால் அந்த மோசடியையும் அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு எளிதாகக் கண்டு பிடித்துவிட முடியும்.