இளையர் அறிவியல் களஞ்சியம்/அகத்தி

அகத்தி : தாவர இனத்தைச் சேர்ந்த அகத்தி மரம் சிறிய அளவுடைய மரமாகும். இது கெட்டித்தன்மை இல்லாதது. சுமார் 6 மீட்டரிலிருந்து 10 மீட்டர் உயரம்வரை வளரக் கூடியது. இதன் இலைகள் 15.80 செ.மீ. நீளமுடையவை. அகத்திமரம் பிற மரங்களைப் போல் அதிகம் கிளைகள் கிளைத்து வளருவதில்லை. அகத்தி இலைகள் கூட்டிலைகளாகும். ஒவ்வொரு கூட்டிலையிலும் 40 முதல் 60 இலைகள் இருக்கும். அகத்தி இலை கீரையாகச் சமைத்து உண்ணப்படுகிறது. அகத்திக் கீரையில் 68 வகைச் சத்துக்கள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. எனவே, அகத்தி மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அகத்திக் கீரையில் 8.4% புரதமும் 1.4% கொழுப்பும் 3.1% தாது உப்புக்களும் 73% நீரும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக் கீரையுடன் சுண்ணாம்புச் சத்து, மாவுச் சத்து, இரும்புச் சத்து, ‘ஏ’ வைட்டமின் ஆகியவையும் உள்ளன. அகத்திக் கீரையோடு பூவும் சமைத்து உண்ணப்படுகிறது. அகத்தி, மாடுகளுக்கும் கோழிகளுக்கும் சிறந்த தீவனமாகும்.

அகத்தி இலை


அகத்தி இலையிலிருந்து ஒருவகை தைலம் தயாரிக்கப்படுகிறது. இது கண்களுக்கு மிகுந்த குளிர்ச்சி தருவதாகும். அகத்தியின் பட்டையும் வேரும்கூட மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகிறது. அகத்தி மிலாரிலிருந்தும் பட்டையிலிருந்தும் உரித்தெடுக்கப்படும் நார் மீன்பிடி வலைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அகத்திப் பட்டை தோல் தொழிலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. அகத்திப் பட்டைச் சாறு சிரங்கு மருந்தாகவும், வேர் மூட்டுவலி மருந்தாகவும் அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது. பட்டை உரிக்கப்பட்ட வெண்மைநிற அகத்தி மரம் பொம்மை செய்யவும் வெடி மருந்து செய்யவும் பயன்படுகிறது.

வெற்றிலைக் கொடிக்கால்களில் வெற்றிலைக் கொடி படரவும் மிளகுத் தோட்டத்தில் மிளகுக் கொடி படரவும் அகத்தி மரம் பயன்படுகிறது.