இளையர் அறிவியல் களஞ்சியம்/அட்டை
அட்டை (Leech) ; இது நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினமாகும் அட்டைகளில் சுமார் 800 வகைகள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். இவற்றுள் சில நன்னீரில் வாழ்பவை. இன்னும் சில ஈர நிலத்தில் வாழ்பவை. வேறொரு வகை கடல் நீரில் வாழ்பவையாகும். பெரும்பாலான அட்டைகள் ஒட்டுண்ணியாக வாழ்பவைகளாகும். அட்டைகள் நீரில் நீந்தும் இயல்புடையவைகளாகும். அட்டைகளில் கருப்பு, சிவப்பு, கரும்பச்சை, பழுப்பு எனப் பலவகை நிறங்கள் உண்டு. நீரில் வாழும் அட்டைகள் நத்தைகள், புழு, பூச்சிகளை உண்கின்றன. மற்றவை மனிதர்கள், பிராணிகளின் உடலில் ஒட்டிக் கொண்டு அவற்றின் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன.
இவை தட்டையான உடலமைப்பையும் மென்மைத்தன்மையையும் கொண்டவைகளாகும். நன்கு சுருங்கி விரியும் இயல்புடையவை. இவை சுமார் 45 செ.மீ. நீளம்வரை வளரும். இவற்றின் உடல் அமைப்பு மண் புழுவில் காணப்படுவதுபோல் வளையங்களாக 34 மடிப்புக்களைக் கொண்டிருக்கும். இதன் உடலில் காணப்படும் வழவழப்பான தோல் மூச்சுயிர்ப்புக்குப் பெரிதும் உதவுகிறது.
அட்டையின் வாய்ப்பகுதியில் உறிஞ்சி உள்ளது. அதில் மூன்று வகையான தகடுகள் போன்ற தாடைகள் உண்டு. இவற்றின் விளிம்பில் கூர்மையான பற்கள் உண்டு. நன்கு உடலில் ஒட்டிக்கொண்ட அட்டை தன் தாடையால் முக்கோண வடிவில் காயம் ஏற்
படுத்துகிறது. அதன் வழியாக இரத்தத்தை உறிஞ்சுகிறது. உறிஞ்சுமுன் அட்டை தன் உமிழ்நீரை இரத்தத்துடன் கலக்கிறது. இதில் உள்ள 'ஹிருடின்’ எனும் சத்து இரத்தத்தை உறையவிடாமல் காக்கிறது. அதன் மூலம் தொடர்ந்து இரத்தம் வெளிப்பட உதவுகிறது. உறிஞ்சும் இரத்தத்தை உணவுப் பைகளில் சேமித்துக் கொள்கிறது. ஒருமுறை முழுமையாக இரத்தம் குடித்த அட்டை ஓராண்டுக் காலம்வரை உயிர் வாழ முடியும். நீரில் இறங்கும் கால்நடைகள் மனிதர்களின் மூக்கு வழியாகவும் மலவாய் வழியாகவும் உடலுக்குள் சென்றுவிடும். இதனால் பெருந்துன்பமும் இறப்பும் ஏற்படும்.
ஒருவகை அட்டை மருத்துவ நோக்கத்திற்காக நோயாளிகளின் உடலில் உள்ள தீய இரத்தத்தை உறிஞ்சி எடுக்க மருத்துவர்களால் பயன்படுத்தப்படுவதுமுண்டு.