இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆலிவ் மரம்
ஆலிவ் மரம் : “ஒலியா யூரோப்பியா’ எனும் தாவர இனத்தைச் சார்ந்தது ஆலிவ் மரம், இவ்வினத்தில் எழுபதுக்கு மேற்பட்ட வகை கள் உள்ளன. ஆலிவ் மரத்தை பற்றிய விரி வான குறிப்புகள் கிரேக்க, ரோம இலக்கியங் களில் காணப்படுகின்றன. ஆலிவ் இலை சமாதானச் சின்னமாகக் கருதப்படுகிறது.
ஆலிவ் மரம் சுமார் 10 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. இதன் இலைகள் கரும்பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் வெண்மை நிறமானவை. மத்திய தரைக்கடல் நாடுகளில் அதிகம் பயிராகிறது. இதன் கனிகள் நீள் சதுரமாகவோ முட்டை வடிவிலோ இருக்கும். பார்க்கப் பளபளப்பாக இருக்கும். ஆலிவ் கனி சற்றுக் கசப்புச் சுவையுடையதாகும். கனிகள் கருநீலம் அல்லது கருமை நிறமுடையனவாகும். கனியில் ஒருவிதை மட்டுமே இருக்கும். ஆலிவ் மரம் ஒட்டுமுறையிலும் பதியன் முறையிலும் அதிகம் பயிரிடப்படுகின்றது. அடிமரத்திலிருந்து பக்கக் கன்றுகள் தோன்றி வளரும். இதன் ஆயுட்காலம் 1500 ஆண்டுகட்கு மேலாகும். ஆலிவ் மரம் தரும் பலன் ஆண்டுக்காண்டு வேறுபடும்.
ஆலிவ் மரக்கனிகள் எண்ணெய்ச்சத்துமிக்கவை. இவற்றிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்கும் விளக்கு எரிக்கவும் அதி
கம் பயன்படுகின்றன. ஆலிவ் எண்ணெயை மதச்சடங்குகளின்போதும் பிற சமயங்களிலும் உடலில் தேய்த்துக் கொள்வதும் உண்டு. ஆலிவ் கனிகள், எண்ணெய் ஆகியன மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வாசனைப் பொருட்கள் சோப்புகள் செய்யவும் உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும் கம்பளியைப் பதப்படுத்தவும் ஆலிவ் எண்ணெய் பயன்படுகிறது. ஆலிவ் காய்கள் ஊறுகாய் போடவும் தின்பண்டங்கள் செய்யவும் பயன்படுகின்றன.