இளையர் அறிவியல் களஞ்சியம்/இரத்தம்
இரத்தம் : உயிரின வாழ்வுக்கு மிக இன்றியமையாத ஒன்று இரத்தமாகும். நீர்ம வடிவிலான இஃது சிவப்பு நிறமுடையது இஃது உடலெங்கும் செல்வதால் இரத்தச் சுழற்சிச் செயல் இடையறாது நடைபெறுகிறது. ஒவ்வொரு மனிதரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் இரத்தம் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர்.
இரத்தம் நம் சுவாசக் காற்றுகளை உடலெங்கும் எடுத்துச் செல்லும் துணைவனாகவும் இருக்கிறது. நுரையீரலிலிருந்து பிராணவாயுவாகிய ஆக்சிஜனை உடலெங்குமுள்ள திசுக்களுக்கும் திசுக்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவாகிய கார்பன்-டையாக்சைடை நுரையீரலுக்கும் இரத்தமே எடுத்துச் செல்கிறது.
நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆகும் போது வெளிப்படும் உணவுச் சத்துக்கள் குடலிலிருந்து உட்கவர்தல் மூலம் இரத்தத்தில் கலக்கின்றன. இரத்தம் சுழற்சிமுறை மூலம் திசுக்களை அடையும்போது இச் சத்துப்பொருட்களும் திசுக்களை அடைகின்றன.திசுக்கள் அவற்றை எடுத்துக்கொண்டு செழுமையடைகின்றன. அவ்வாறே நாளமிலாச் சுரப்பிகளால் சுரக்கப்படும்ஹார்மோன்கள் நேரடியாக இரத்தத்தில் கலந்து உடலெங்குமுள்ள திசுக்களுக்குப் போய்ச் சேர்கின்றன. அங்கு அவை வினைபுரிந்து உடலுக்கு வளமூட்டுகின்றன.
அதேபோல, உடலெங்கிலுமிருந்து வெளிப்படும் கழிவுப் பொருள்களை இரத்தமே சுமந்து, கழிவகற்றும் வாயில்களாக அமைந்துள்ள சிறு நீரகம், தோல், நுரையீரல்களுக்குக் கொண்டு செல்கின்றன. சுருங்கச் சொல்வதென்றால் இரத்தம் உடலின் இன்றியமையா போக்குவரத்துக் கருவியாக விளங்கி வருகிறதெனலாம்.
நமது உடலின் வெப்பநிலை ஒரே சீராக இருக்க இரத்தமே பேருதவி புரிகிறது. உடல் ஏதாவது காரணத்தால் நோய்வாய்ப்படும் சமயங்களில் நோயெதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்குவதும் இரத்தமேயாகும். நாம் விபத்துக்காளாகும்போது இரத்தப் போக்கு ஏற்பட ஏதுவாகிறது. அச் சமயங்களில் வெளிப்படும் இரத்தம் உறைந்து போவதால் மேற்கொண்டு இரத்தப்போக்கு ஏற்படாமல் போகிறது.
உடலுக்குத் தேவையான பணிகளை இரத்தம் செவ்வனே செய்து வருகின்றது. இரத்தத்தில் இரு முக்கிய அமைப்புகள் உள்ளன. ஒன்று, இரத்தச் செல்கள். மற்றொன்று பிளாஸ்மா எனப்படும் நீர்மப் பொருள். இரத்தச் செல்கள் எனப்படும் இரத்த அணுக்கள் 45 விழுக்காடும் பிளாஸ்மா 55 விழுக்காடும் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்தமும் சிவப்பு நிறமுடையதாக இருக்கின்றது. (இரத்த அணுக்கள், பிளாஸ்மா தனிக் கட்டுரை காண்க).