இளையர் அறிவியல் களஞ்சியம்/இரத்த அழுத்தம்
இரத்த அழுத்தம் : இதயம் இரத்த நாளங்களுக்கு இரத்தத்தை அனுப்பும்போது ஒரு குறிப்பிட்ட அளவு அழுத்தத்தைக் கொடுப்புதால்தான். இரத்தம் ஒரே சீராக உடலெங்கும் பாய்ந்து பரவுகிறது. இந்த அழுத்தம்தான் ‘இரத்த அழுத்தம்’ (Blood Pressure) எனக் கூறப்படுகிறது.
இதில் இரு பிரிவுகள் உண்டு.
இதயம், இரத்த நாளத்தினுள் இரத்தத்தை செலுத்துவதற்குக்கொடுக்கிற அழுத்தம்-அதாவது இதயம் சுருங்கும்போது உண்டாகிற அழுத்தம்-'சிஸ்டாலிக் அழுத்தம்’ (Systolic Pressure) எனப்படுகிறது. இரத்தக் குழாய்களில் இரத்தம் தங்குவதற்குக் கொடுக்கப்படும் அழுத்தம்-அதாவது இதயம் விரியும்போது உண்டாகிற அழுத்தம்-'டயஸ்டாலிக் அழுத்தம்’ (Diastolic Pressure) எனப்படுகிறது. இதை முறையே சுருக்கழுத்தம், விரிவழுத்தம் எனத் தமிழில் சொல்லலாம். ஒரு சராசரி மனிதனுக்குச் சுருக்கழுத்தம் 120 மி.மீ. பாதரச அளவாகவும், விரிவழுத்தம் 80 மி.மீ. பாதரச அளவாகவும் இருக்க வேண்டும், வயதானவர்களுக்கு இது 140/90 மி.மீ. பாதரச அளவாக இருக்கும்.
இரத்த அழுத்தம் 140/90 மி.மீ. பாதரச அளவைத் தாண்டும் நிலையை இரத்தக் கொதிப்பு, உயர் இரத்த அழுத்தம்,இரத்த மிகு அழுத்தம் (Hypertension) எனப் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது பெரும்பாலும் 40 வயதிற்கு மேல் வரக்கூடிய நோய். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் 80 விழுக்காட்டினருக்குக் காரணமே தெரிவதில்லை. மீதி 20 விழுக்காட்டினருக்கு சிறுநீரகக் கோளாறுகள், நாளமில்லா சுரப்பி நோய்கள், அட்ரீனல் சுரப்பி நோய்கள், பிட்யூட்டரி சுரப்பி நோய்கள். மூளைத் தண்டுவட நோய்கள், உள் கபால அழுத்த அதிகரிப்பு, பெருந்தமனி குறுகலடைந்துபோவது போன்ற காரணங்களினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
உயர் இரத்த அழுத்தம் உடல்நலனுக்கு ஆபத்து தரக்கூடியது. இதனால் பக்கவாதம், பார்வைக் குறைவு, மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, மூளைக்குள் இரத்தக் கசிவு, மூளை இரத்தக் குழாய்கள் வெடித்துவிடுவது போன்ற ஆபத்தான பின்விளைவுகள் உண்டாகலாம்.
இரத்த அழுத்தம் எந்த அளவு உள்ளது என்பதை அளந்து காண்பதற்கு ஒரு கருவி உண்டு. அதை இரத்தக்குழாய் அழுத்த மானி’ (Sphygmomanometer) என்று அழைப்பார்கள். அத்துடன் உடல் உள்ளுறுப்புகளைப் பரிசோதித்தும் இரத்தம், சிறுநீர் ஆகியவற்றை சோதனை செய்தும் எக்ஸ்-கதிர் மின்னலை வரைபடம் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்தும் துல்லியமாகக் கண்டறிவர். இரத்த அழுத்தத்திற்கான காரணங்களை ஆய்ந்து கண்டறிந்து, அவற்றைத் தவிர்த்தும் உரிய மருந்துகளை உட்கொண்டும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி சீரான நிலையில் வைத்துக் கொள்ளலாம்.
மருந்து இல்லாமல் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உடல் பருமனைக் குறைக்க வேண்டும். உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும். புரதச் சத்து உணவுகளை மட்டாக உண்பது, அளவான உடற்பயிற்சி செய்வது போன்றவைகளை மேற்கொள்வது நலம்.