இளையர் அறிவியல் களஞ்சியம்/உராய்வு
உராய்வு : இதை ஆங்கிலத்தில் பிரிக்ஷன் (Friction) என்று கூறுவர். ஒரு பொருளை மற்றொரு பொருள்மீது வைத்து நகர்த்தும் போது இரண்டுக்கும் இடையே நிகழும் நிகழ்வே உராய்வு ஆகும். வழவழப்பான பரப்பையுடைய ஒரு பொருள் மீது மற்றொரு வழவழப்பான பரப்புடைய பொருளை வைத்து இழுத்தால் வைத்த பொருள் எளிதாக நகரும். இஃது குறைவான உராய்வால் ஏற்படுவதாகும். சொரசொரப்பான பொருள் மீது சொரசொரப்பான மற்றொரு பொருளை வைத்து இழுத்தால் பொருள் நகருவது சற்று கடினமாகும். இங்கு உராய்வு அதிகமாக இருக்கும்.
ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் உராய்வதால் அப் பொருள் நகருவதற்குள்ள தடைதான் 'உராய்வு ஆற்றல்’ என அழைக்கப்படுகிறது.
நாம் சாதாரணமாக இரு கைகளை அழுத்தித் தேய்த்தால் வெப்பம் உருவாவதை உணரலாம். உராய்வு அதிகமிருந்தால் வெப்பமும் அதிகமாக இருக்கும். உராய்வுக் குறைவாக இருப்பின் வெப்பமும் குறைவாக இருக்கும்.
உராய்வு ஆற்றலைப் பற்றிய ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டறியப்பட்ட புதிய சாதனங்கள் உராய்வுமிக்க போக்குவரத்துக் கருவிகளைக் கண்டறியும் கண்டுபிடிப்புகளாக அமைந்தன. சொரசொரப்புத் தரையில் பொருளை இழுப்பதால் மிகுதியாக உராய்வுத் தன்மை ஏற்பட, பளுவான பொருளை இழுப்பது கடினமாக இருந்தது. இதனால் பொருளை உருளைகள் மீது வைத்து இழுத்தபோது எளிதாக இருந்தது. மேலும், ஆராய்ந்து அதே பொருளை இரு சக்கரம் பொருத்திய வண்டியில் வைத்து இழுத்தபோது மேலும் எளிதாகியது. மேலும் ஆராய்ச்சி செய்து ரப்பர் வளையமிட்ட சக்கர வண்டியின் மீது பொருளை வைத்து இழுத்தபோது மிக மிக எளிதாக இருந்தது. இவ்வாறு உராய்வை எளிமைப்படுத்த கண்டுபிடித்த சாதனங்கள் போக்குவரத்துக்கான வசதிகளாக அமைந்தன.
பொருள்கள் ஒன்றோடொன்று உராயும் போது உராய்வு ஆற்றலின் தன்மைக்கேற்ப வெப்பமுண்டாவது இயல்பு என முன்பே கண்டோம். இன்று எந்திரங்கள் இயங்கும்போது எந்திரத்தில் பொருத்தப்பட்ட பல்வேறு வகையான சக்கரங்கள் சுழலும்போது வெப்பமுண்டாவது தவிர்க்க முடியாததாகும்.
நாளடைவில் உராயும் பொருட்களும் தேய்மானத்திற்கு ஆளாகின்றன. எனவே, இயங்கும் எந்திரம் கடுமையான தேய்மானத்திற்கு உட்படாமல் இருக்க அவற்றிற்கிடையேயான உராய்வை முடிந்த அளவு குறைக்க பல்வேறு வழிகளைக் கண்டறிந்துள்ளார்கள்.
இதற்கு முதற்படியாக உராய்வை ஏற்படுத்தும் பொருள்களின் உராய்வுப் பகுதிகள் வழவழப்பாக்கப்படுகின்றன. மேலும், அவை உராயும்போது உராய்வுப் பகுதியில் எண்ணெய் அல்லது மெழுகைப் பூசி, உராயாது வழுக்கிச் செல்ல வகையேற்படுத்தப்படுகின்றது. தையல் மிஷின் முதலான எந்திரச்சக்கரங்களுக்கு அடிக்கடி எண்ணெய் போடுவது இதற்காகத்தான்.
உராய்வைக் குறைக்க வேறொரு வழியும் கடைப்பிடிக்கப்படுகிறது. உராய்வுப் பகுதியில் சிறுசிறு உலோகக் குண்டுகளை அமைப்பதன் மூலம் உராய்வு மிகவும் குறை கப்படுகிறது. ஆனால், உராய்வுத் தன்மையை அறவே நீக்கிவிட்டால் பொருள்கள் இயக்கமில்லாது போய்விட நேரிடும். மிகவும், வழவழப்பான தரையில் நம்மால் நடக்க இயலாமல் வழுக்கி விழ நேரிடும். ரயிலும் காரும் மிகவும் வழவழப்பானவற்றின் மீது ஒட இயலாமல் நின்று விடும். அவைகள் நன்கு ஓட ஓரளவு உராய்வு இருந்தேயாக வேண்டும். மிதி வண்டியை நிறுத்தும்போது பிரேக்குக் கட்டையை அழுத்துகிறோம். அப்போது ஏற்படும் உராய்வினால் சைக்கிள் நிற்கிறது. எனவே, இயக்கத்துக்கு ஓரளவு உராய்வு அவசியமாகும்.