இளையர் அறிவியல் களஞ்சியம்/எக்ஸ் - கதிர்கள்

எக்ஸ் - கதிர்கள் (X-Rays) : பொருள்களினுள் ஊடுருவிச் சென்று, உள்ளே இருப்பவற்றைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்ட உதவும் ஊடுகதிரே எக்ஸ்-கதிர்கள் என அழைக்கப்படுகிறது. இதனை ரான்ட்ஜன் எனும் விஞ்ஞானி தற்செயலாக 1895ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். தம் பரிசோதனைக் கூடத்தில் குறைந்த அழுத்தத்தில் ஒரு குழாயில் மின்சாரத்தைப் பாய்ச்சியபோது பக்கத்தில் இருந்த சில பொருட்கள் ஒளிர்வதைக் கண்டு வியந்தார். பொருளுக்கும் குழாய்க்கும் இடையே திரையேற்படுத்திய போதிலும் தொடர்ந்து பொருட்கள் ஒளிர்வதைக் கண்டார். இது ஒரு வகைக் கதிர்களால் ஏற்படுவதாக உணர்ந்தார். ஆயினும் இக்கதிர்கள் எப்படி ஏற்படுகின்றன. எதனால் உருவாகின்றன, அல்லது எங்கிருந்து வருகின்றன என்ற வினாக்களுக்கு விடை தெரியாமல் திகைத்தார். சாதாரணமாகத் தெரியாத ஒன்றை எக்ஸ் (X) என்ற எழுத்தால் குறிப்பது ஆங்கில மரபாதலால் இக்கதிரையும் அவர் எக்ஸ்-கதிர் என்று அழைக்கலானார். அன்று முதல் இக்கதிர் அப்பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.

சாதாரண ஒளிக்கதிர்களால் ஊடுருவிச் செல்ல முடியாத திடப்பொருள்களினுள் ஊடுருவிச் செல்வது இக்கதிர்களின் தனித்தன்மையாகும். இச்சிறப்புத் தன்மை மனித குலத்துக்கு மாபெரும் நன்மையாக அமைந்தது. நம் உடம்பினுள் ஏதாவது விபத்தால் எலும்பு முறிந்திருந்தாலோ அல்லது உடலுள் ஏதா

சான்ட்ஜன்

வது தீங்கு ஏற்பட்டிருந்தாலோ அது எங்கு எப்படி ஏற்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகப் படம்பிடித்து அறிந்து மருத்துவம் செய்து கொள்ளலாம். குழந்தைகள் எதையாவது விழுங்கி விட்டாலோ அல்லது துப்பாக்கிக் குண்டு உடலில் பாய்ந்திருந்தாலோ அது எங்குள்ளது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்ட இக்கதிர்களே பயன்படுகின்றன.

மனித உடலுள் மட்டுமல்லாது இயந்திரத்தினுள் ஏதாவது கோளாறு ஏற்பட்டிருந்தாலும் எக்ஸ்-கதிர்களைக் கொண்டு கண்டறிய முடிகிறது.

எக்ஸ்-ரே எடுக்கப்பட்ட கைவிரல்கள்

வானொலி வால்வு போன்ற நுண் கருவிகளுள் ஏற்படும் பழுதுகளையும் வானூர்திப் பொறிகளுள் ஏற்படும் கோளாறுகளையும் கூட நுணுக்கமாகக் கண்டறிந்து செப்பனிட எக்ஸ்-கதிர் பயன்படுகிறது.

மேலும் எக்ஸ்-கதிர் நிறமாலை (X - ray spectrograph) என்னும் கருவிமூலம் திடப் பொருளின் அணு அமைப்புகளைத் தெரிந்து கொள்ள இயல்கிறது.

எனினும் எக்ஸ்-கதிர்களால் எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டபோதிலும் அதனால் சில தீங்குகளும் நேரவே செய்கிறது. எக்ஸ்-கதிர்கள் உடலில் உள்ள திசுக்களை அழிக்கும் வல்லமை உள்ளவைகளாகும். உடலில் ஏதேனும் கட்டிகள் ஏற்பட்டால் அதைக் கரைக்க எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்துவதுண்டு. அதைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடலுள் பாயும் எக்ஸ்-கதிர்கள் புண்ணை ஏற்படுத்தி விடுகிறது. சிலசமயம் எக்ஸ்-கதிர்களைப் பாய்ச்சுபவரும் பாதிப்புக்கு ஆளாகிறார். இதற்காக எக்ஸ்-கதிர் கருவியை இயக்குபவர் அதற்கென உள்ள பாதுகாப்பு அங்கியை அணிந்து கொள்கிறார். அத்துடன் தங்கள் உடலையும் அடிக்கடி சோதித்துக் கொள்வர்.