இளையர் அறிவியல் களஞ்சியம்/கணக்குப் பொறி
கணக்குப் பொறி : நாம் பலமணி நேரங்கள் போட வேண்டிய கணக்குகளை ஒரு சில விநாடிகளுக்குள் போட்டுவிடும் திறன் பெற்றவை கணக்குப்பொறிகள் (Calculating Machine) ஆகும்.
கணக்குப் போடும் பொறியை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணிதமேதை பிளெங் பாஸ்கல் என்பவராவார். இவர் இதனை 1842ஆம் ஆண்டில் முதன்முதலாக வடிவமைத்தார். இதுவே முதலாவதான கணக்கிடும் எந்திரமாகும். தொடக்கத்தில் இப்பொறியின் மூலம் கூட்டல் கணக்கு மட்டுமே போட முடிந்தது.
அதன்பின் 1889ஆம் ஆண்டில் பல்வேறு சீர்திருத்தங்களோடு அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட கணக்குப் பொறி மூலம் கூட்டலோடு கழித்தல், வகுத்தல், பெருக்கல் ஆகியகணக்குகளையும் விரைந்து போட முடிந்தது. பின் வர்க்கமூலங்கள் சதவீதங்களைக் கணக்கிடும் அமைப்புடன் உருவாக்கப்பட்டன. இதன் பின் இப்பொறியின் வளர்ச்சி துரிதமடைந்தது. பல்வேறு வடிவங்களில் அளவுகளில் கணக்குப் பொறிகள் வெளிவரலாயின. இன்று உலகெங்கும் உள்ள சாதாரண மக்கள் பள்ளிச் சிறுவர்கள் உட்பட கையடக்கமான கணக்குப் பொறிகளைப் பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றின் அளவு தீப்பெட்டியைவிடச் சிறியதாகிவிட்டன. இவை பட்டன் மின்கலத்தால் இயங்குகின்றன. கனத்த தாள் அளவில் சூரிய ஆற்றலால் இயங்கும் கணக்குப் பொறிகளும் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய கணக்குப் பொறி தயாரிப்பில் ஜப்பான் முதலிடம் பெறுகிறது.