இளையர் அறிவியல் களஞ்சியம்/கண்ணாடி

கண்ணாடி : இன்றைய நாகரிக வாழ்வில் கண்ணாடி மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நாம் நாள்தோறும் முகம் பார்க்கவும் நமக்கு ஏற்படும் பார்வைக் குறைவைப் போக்கிக் கொள்ளவும் கண்ணாடி பெரிதும்

கண்ணாடி

பயன்படுகிறது. மருந்து பானம் முதலானவைகளை வைக்கவும் கண்ணாடியாலான போத்தல்கள் அதிக அளவில் பயன்படுகின்றன.

தூய்மையாக்கப்பட்ட மணல், சுண்ணாம்பு, சலவைச் சோடா ஆகியவைகளே கண்ணாடி செய்வதற்கான மூலப் பொருள்கள். இவற்றை 15000 வெப்பத்தில் கொதிக்க வைத்தால் அவை உருகி பாகு போலாகும். அக்குழம்பை பல்வேறு வடிவங்களில் உள்ள அச்சுக்களில் ஊற்றி பலவகை வடிவக் கண்ணாடிப் பொருட்களாக வார்த்தெடுப்பார்கள். இக்கண்ணாடிக் குழம்பை வாயால் ஊதியும் பலவடிவப் பொருட்களை உருவாக்குவதும் உண்டு.

வாயால் ஊதி கண்ணாடி உருவாக்குதல்

கைதவறிக் கீழே விழுந்தால் கண்ணாடிகள் உடைந்து விடும். எனவே, இக்காலத்தில் உடையாத கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையா இத்தகைய கண்ணாடிகள் விமானங்களிலும் கார், பஸ் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பார்வைக் குறைவைச் சரிசெய்யவும் கண்ணாடிகள் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணியவற்றை ஆராயப் பயன்படும் நுண்பெருக் காடிகளும் படப்பிடிப்புக் கருவியான காமிரா லென்சுகளும் சோதனைக் குடுவைகளும் கண்ணாடியாலேயே உருவாக்கப்படுகின்றன.

சிலவகை வண்ணக் கண்ணாடிகள் வழக்கமான மூலப்பொருட்களுடன் இரும்பு, நிக்கல், கோபால்ட் போன்ற தாதுப்பொருட்களைக் கலந்து செய்கிறார்கள்.

சுமார் நாலாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே கண்ணாடி செய்யப்பட்டு வருகிறது. முகம் பார்க்கவும் கைவளையல் போன்ற அலங்காரப் பொருட்கள் செய்ய மட்டுமே பயன்பட்டுவந்தது. அறிவியல் வளர்ச்சியின் விளைவாக இன்று மனித வாழ்வில் அனைத்துத் துறைகளுக்கும் பயன்படும் பொருட்களாகக் கண்ணாடிப் பொருள்கள் அமைந்துள்ளன.

குறிப்பிட்ட உலோகச் சேர்மங்கள் குறிப்பிட்ட நிறங்களை தருகின்றன. அச்சேர்மங்கள் கண்ணாடி குழம்பில் சேர்க்கப்பட்டு வண்ண வண்ணக் கண்ணாடிகள் தயாரிக்கப் படுகின்றன. இதுவே வண்ணக் கண்ணாடி சரவிளக்குகள் தயாரிக்க உதவுகின்றன.