இளையர் அறிவியல் களஞ்சியம்/குடல்

குடல் : நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பு குடலாகும். நாம் உண்ணும் உணவு செல்லும் உணவுப் பாதையின் பெரும் பகுதியாக

அமைந்திருப்பது குடல். சீரணித்தது போக மீதமுள்ள கழிவுப் பொருட்கள் குடல் வழியாகவே வெளியேறுகின்றன. குடல் இரைப்பையின் அடிப்பகுதியிலிருந்து மலவாய் வரை நீண்டுள்ளது. குடலின் தொடக்கப் பகுதி குடல்வாய் என்று அழைக்கப்படுகிறது. குடலின் இறுதிப் பகுதியில் மலவாய் அமைந்துள்ளது. குடலை சிறுகுடல், பெருங்குடல் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிப்பர்.

குழாய் வடிவில் அமைந்துள்ள சிறு குடலின் உட்பகுதி குறுகிய இடைவெளியையும் பெருங்குடலின் உட்பகுதி சற்று அதிக இடைவெளியையும் கொண்டுள்ளன.

சிறு குடல் குடல்வாய் தொடங்கி பெருங்குடல்வரை நீண்டுள்ளது. இதன் மொத்த நீளம் 22 அடி முதல் 25 அடிவரை இருக்கும். இது நம் வயிற்றின் நடுவில் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இதைச் சூழ்ந்து பெருங்குடல் உள்ளது.

சிறுகுடல் மூன்று பெரும் பிரிவுகளை உடையது. முதல் பகுதி கீழ்ச்சிறுகுடல் ஆகும். லாடம்போல் அமைந்துள்ள முன்சிறுகுடலே அகலமான பகுதியாகும். கணையம் எனும் சுரப்பி இப்பகுதியிலேயே அமைந்துள்ளது. இதன் நடுப்பகுதியிலேயே கணைய நீரும் பித்த நீரும் கலக்கின்றன.

இடைச் சிறுகுடலும் கீழ்ச்சிறு குடலும் சுருங்கிய வடிவில் சுருண்டு இருக்கும். அதிலும் கீழ்ச்சிறுகுடல் மிகவும் சுருண்டிருக்கும். சுமார் 6 அடி நீளமுள்ள பெருங்குடலோடு கீழ்ச்சிறுகுடல் இணையுமிடத்தில் ஒரு சிறு வால்வு உண்டு. அப்பகுதி பெருங் குடல்வாய் ஆகும். சிறு குடலும் பெருங்குடலும் சேருமிடத் திற்குக் கீழாக 'குடல்வால்' அமைந்துள்ளது.

சத்துருஞ்சி

பெருங்குடல் சுமார் ஒன்றரை மீட்டர் நீளமிருக்கும். இஃது ஏறுகுடல், குறுக்குக் குடல், இறங்கு குடல், மடிப்புக் குடல் எனும் நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. பெருங்குடலின் இறுதிப்பகுதி மலவாய் ஆகும். இதன்மூலமே கழிவுப் பொருளான மலம் வெளியேற்றப்படுகிறது.

வாயில் தொடங்கும் சீரணப் பணி சிறுகுடலில் முடிவடைகிறது. சிறுகுடலில் அமைந்துள்ள குடற் சுவர்களில் சுரக்கும் என்ஸைம்களும் சிறுகுடலுக்குவரும் கணைய நீரும் பித்த நீரும் உணவை சீரணமாக்கப் பெரிதும் உதவுகின்றன. சிரணமாகும் உணவை சிறுகுடலோடு அவற்றின் சுவர்களில் நுண்ணிய விரல்கள்போல் நீட்டிக் கொண்டிருக்கும் 'குடல் உறிஞ்சிகள்' ஈர்த்து தந்துகிகளுக்கு அளிக்க, அஃது பாற்குழல்கள் மூலம் இரத்தத்தில் கலக்கின்றன.

சீரணமாகாத கழிவுப் பொருட்கள் சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்கு வருகின்றன. பெருங்குடல் உடலுக்கு வேண்டிய அளவு நீரை கழிவுப்பொருளிலிருந்து உறிஞ்சியபின் மலவாய் வழியாக வெளியேற்றப்பட்டு விடுகிறது. பெருங்குடலில் சிறுகுடற் சுவர்களில் உள்ளது போல் உறிஞ்சிகளோ குடற்பால் குழல்களோ இல்லை.