இளையர் அறிவியல் களஞ்சியம்/கொழுப்பு
கொழுப்பு : பிராணிகள். தாவரங்கள் உட்பட உயிரினங்களில் பலவும் கொழுப்பைப் பெற்றுள்ளன. சிலவற்றின் கொழுப்பு திடப் பொருளாகவும் சிலவற்றின் கொழுப்பு திரவப் பொருளாகவும் அமைந்துள்ளன. பெரும்பாலும் பிராணியின் கொழுப்பு திடத்தன்மையுள்ளதாக இருக்கும். திரவ வடிவ கொழுப்புப் பொருள் எண்ணெயாக இருக்கும். ஆனால் எல்லா எண்ணெய்களும் கொழுப்புத் தன்மையுடையன அல்ல.
திட, திரவ வடிவ கொழுப்புகளுக்குச் சில பொதுத் தன்மைகள் உண்டு. அவை நீரில் கரையா. அவை நீரால் ஈரமாவதும் இல்லை. அதன் வழவழப்பான பரப்பில் நீர் படிவதில்லை. ஆனால், நீர் திவலைகளாக ஆங்காங்கே தேங்கி நிற்கும். கொழுப்பானது நீரைவிட கனம் குறைந்ததாகும். எனவேதான் கொழுப்பு நீரில் மிதக்கிறது.
வேதியியல் அடிப்படையில் கொழுப்பில் மூன்று மூலப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவையாவன: கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகும். இவை கரிமக் கூட்டுப் பொருட்களாகும். பிரித்தால் அவை இரு கூட்டுப் பொருட்களாக அமையும். ஒன்று கிளிசரைன் எனும் நீர்க்கலவைப் பொருள், மற்றொன்று கொழுப்பு அமிலம் (Fatty Acid) எனும் கூட்டுப்பொருள். கொழுப்புகளும் எண்ணெய்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருந்தபோதிலும் அவற்றில் பொதுவாக இருப்பது கொழுப்பு அமிலம் எனும் கூட்டுப் பொருள் ஆகும். நீரில் கரையாத கொழுப்பை பென்ஸைன் போன்ற திரவங்களால் கரைக்க முடியும். இத்தகைய திரவங்கள் எண்ணெய்ப்பசை, கறைகளைப் போக்குவதால் இவை “கறை போக்கிகள்“ என்றே அழைக்கப்படுகின்றன.
கொழுப்பு கலிக்கம் (Alkali) எனும் காரப் பொருளோடு சேர்த்துக் கொதிக்க வைக்கும் போது கிளிசரைன் எனும் நீர்க்கலவைப் பொருளாகவும் சோப்பாகவும் பிரிகிறது. சோப் கொழுப்பு அமிலத்தின் கார உப்பே தவிர வேறில்லை. இச்செய்முறை ‘சவுக்கார மாற்று' முறையாகும்.
நாம் உண்ணும் உணவில் முக்கியமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய பொருட்கள் கார்போஹைட்ரேட் புரோட்டின், கொழுப்பு ஆகும். இவை மூன்றும் உடலுள் நன்கு எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. இச்சக்தியில் ஒரு கிராம் கொழுப்புச் சக்தி இரண்டு கிராம் கார்போஹைட்ரேட், புரோட்டீன் சக்திகளுக்கு ஈடாகும்.
திரவ, திடக் கொழுப்புப் பொருட்களை நீண்டகாலம் காற்றில் இருக்கும்படி வைத்தால் அவை கெட்டுவிடும்.
நம் உடலில் சேரும் கொழுப்பைப்பற்றி இன்று பலரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். காரணம் உடலில் சேரும் அதிகக் கொழுப்பு பல்வேறு உடற் தீங்குகளுக்குக் காரணமாக இருப்பதால் கொழுப்பைப் பலரும் விரும்புவதில்லை.
கொழுப்பு நம் உடலுக்கு மிக இன்றியமையாத அத்தியாவசியப் பொருளாக இருந்தாலும் உடலின் சில பகுதிகளில் அதிக அளவு தேங்குவதால் பல தீய விளைவுகள் உண்டாகின்றன.
சில குறிப்பிட்ட உடற்பகுதிகளிலுள்ள இணைப்புத் திசு (Connective tissue) உயிரணுக்களில் கொழுப்பு சேருகிறது. முதலில் உயிரணுக்களில் உள்ள மிகச் சிறிய திவலை முகில் (droplets) பகுதியில் சென்று சேருகிறது. பின்னர் அது அளவில் பெரிதாகி பெருந் திவலை போலாகிறது. இறுதியில் உயிரணு பலூன்போல் ஊதிவிடுகிறது. முடிவாக மெல்லிய மேலுறையோடு கூடிய திசு பெரும் கொழுப்புத் துளிபோல் ஆகிவிடுகின்றது. இத்தகைய நிலை உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே ஏற்படுகிறது. காதுகள், மூக்கு, நெற்றி, உடலிலுள்ள மூட்டுகள் ஆகியவிடங்களில் சாதாரணமாகக் கொழுப்பு உயிரணுக்கள் இருப்பதில்லை. வழக்கமாக ஆண்களின் உடலைவிட பெண்களின் உடல் அதிக அளவில் கொழுப்பை சேகரித்து வைத்துக்கொள்கின்றது. உதாரணமாக, சாதாரண ஆணின் உடல் 10 சதவிகித கொழுப்பைக் கொண்டிருந்தால். சாதாரண பெண்ணின் உடல் 25 சதவிகிதக் கொழுப்பைக் கொண்டிருக்கும். இதன்படி பார்த்தால், இளைஞன் ஒருவனின் உடல் 5 கிலோ கொழுப்பைக் கொண்டிருந்தால், ஒரு இளநங்கையின் உடல் 15 கிலோ கொழுப்புடையதாக இருக்கும்.
உடலில் கொழுப்பு அதிகரிப்பது உண்ணும் உணவு உடலில் அதிகம் தங்குவதைப் பொறுத்தமைகிறது. நமக்குத் தெரிந்தவரை நம் உடலிலுள்ள மிகச் சிறந்த எரிபொருளாக அமைந்திருப்பது கொழுப்பாகும். சாதாரணமாக நாள்தோறும் நம் உடலின் எரிபொருளாகப் பயன்படுவது ஸ்டார்ச்சாகிய மாவுச் சத்திலிருந்து பெறப்படும் சர்க்கரைச் சத்தாகும். சர்க்கரை வெகு எளிதாகவும் வேகமாகவும் எரிந்து போகும். ஆனால், கொழுப்பு எரிவது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சர்க்கரை எரிவதன் மூலம் கிடைக்கும் வெப்பத்தைவிட கொழுப்பு எரிவதன்மூலம் கிடைக்கும் வெப்பம் அதிகமாகும். உண்மையில் சர்க்கரையைவிட இரு மடங்கு சக்தி கொழுப்பு மூலம் கிடைக்கிறது. இதனால், கொழுப்பு உடலின் தேவைக்குச் சற்று அதிகமாக நாம் உணவு உட்கொண்டால் தேவைக்கு அதிகமான உணவுச் சத்து கொழுப்பாக உடலில் தங்கிவிடுகிறது.
அடைபஞ்சாக உடலுக்குக் கொழுப்பு தேவைப்படுகிறது. நீர் மெத்தைபோல் உடலில் செயல்படுகிறது. இடுப்புக்குக் கீழேயுள்ள பிட்டப் பகுதியில் கொழுப்பு நீர் மெத்தை போல் அமைந்திருப்பதால் எளிதாக மெத்தென்று நம்மால் வசதியாக உட்கார முடிகிறது. அதே போன்று கால் வளைவுப் பகுதிகள் உள்ளங்கையின் தோல் அடிப்பகுதி, முகத்தின் இருபுறக் கண்ணங்கள் ஆகியவை இத்தகைய கொழுப்பைக் கொண்ட நீர் மெத்தையினால் சிறப்பாக அமைந்துள்ளன. இத்தகைய நீர் மெத்தையின்மீது தான் நம் கண் விழிகள் அமர்ந்துள்ளன.
மூன்றாவதாக, உடலின் வெப்பம் எக்காரணம் கொண்டும் குறைந்து விடாமல் கொழுப்புப் பார்த்துக்கொள்கிறது.
உடம்பில் கொழுப்பு அளவுக்கு அதிகமாக இருந்தாலும் ஆபத்துதான். மாரடைப்பு, இரத்தக் கொதிப்பு, நீரிழிவு போன்ற நோய்கள் வருவதை அது ஊக்கப்படுத்தும். எனவே, உடம்பில் கொழுப்பு அளவோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.