இளையர் அறிவியல் களஞ்சியம்/சர்க்கரை

சர்க்கரை : நம் உடலுக்கு இன்றியமையாது தேவைப்படும் உணவுப் பொருட்களில் முக்கியமானது சர்க்கரையாகும். இது ஆங்கிலத்தில் ‘சுகர்’ என அழைக்கப்படுகிறது. இச் சொல் ‘சுக்ரோஸ்" என்பதிலிருந்து வந்ததாகும்.

இது கார்போஹைட்ரேட்டுகள் எனப்படும் கரிமச்சேர்ம வகையைச் சார்ந்ததாகும். இதில் காணப்படும் சர்க்கரை தொகுதிகள் காணப்படும் பிணைப்பின் வகை ஆகியவைகளைப் பொறுத்து பல்வேறு பண்புகளை உடைய சர்க்கரைத் தொகுதிகள் கிடைக்கப் பெறுகின்றன.

சர்க்கரை மிக எளிதாகச் செரிமானம் அடையக்கூடிய உணவு மட்டுமன்று; உடலுக்குத் தேவையான சக்தியையும் வெப்பத்தையும் தரவல்லதுமாகும்.

கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகியவற்றின் குறிப்பிட்ட விகிதத்தில் கூடி உருவாகும் சர்க்கரையைப் பல்வேறு பொருட்களிலிருந்து பெறுகிறோம். நாம் சாதாரணமாக உபயோகிக்கும் சர்க்கரையை கரும்பு, பீட்ருட் கிழங்கு போன்றவைகளிலிருந்து பெறும் "சுக்ரோஸ்’ எனும் இனிப்புப் பொருளிலிலிருந்து தயாரிக்கிறோம். பழங்களிலிருந்து கிடைக்கும் 'பிரக்ட்டோஸ்' மற்றும் காய்கறி, தானியம் போன்றவற்றிலிருந்து சர்க்கரைச் சத்தைப் பெருமளவில் பெறுகிறோம். பாலிலிருந்து 'லாக் டேர்ஸ்’ எனும் சர்க்கரைச் சத்துக் கிடைக்கிறது.

அமெரிக்காவிலும் கனடாவிலும் 'மேப்பிள்' எனும் ஒருவகை மரம் உண்டு. இம் மரத்தின் அடிப்பகுதியில் துளையிட்டால் அதன் வழியே ஒருவகைப் பால் வெளிப்படும்.இப்பாலைச் சேகரித்துக் காய்ச்சி சர்க்கரை தயாரிக்கிறார்கள். உலகில் கரும்பு விளையும் நாடுகளில் இந்தியா முதன்மையானதாகும்.