இளையர் அறிவியல் களஞ்சியம்/சாணைக்கல்
சாணைக்கல் : கார்போரண்டம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சாணைக்கல் கார்போரண்டம் எனும் பொருளாலானதாகும். இது ஒரு சிலிகன் கார்பைடு எனும் சேர்மமாகும். இது மிகவும் கடினத்தன்மை உடைய பொருளாகும். எந்த வித வினைப்பான்களினாலும் பாதிக்கப்படாதவை. அதிக வெப்பத்தை தாங்கும்பண்புடையதாதலால் உலோகங்களை உருக்கும் மூசையை தயாரிக்கவும் பயன்படுகிறது. இது கத்தி. கத்தரிக்கோல், அரிவாள் போன்றவைகள் மழுங்கிய சமயத்தில் சாணைப்பிடித்துக் கூர்மையாக்கப் பயன்படுகிறது. சாணைக்கல்லை வேகமாகச் சுழலச் செய்து, அதன்மீது கூர்மையாக்கவேண்டிய பொருளை வைக்கும்போது எதிர் உராய்வின் மூலம் கூர்மை பெறுகிறது.
கடினத்தன்மை மிக்க சாணைக்கல், கார்பனையும் சிலிக்கனையும் சேர்த்துச் செய்யப்படுகிறது. இதன் வேதியியற் பெயர் 'சிலிக்கன் கார்பைடு' என்பதாகும். சிலிக்கன் டை ஆக்சைடு எனப்படும் வெண் மணலையும் கார்பன் எனும் கல்கரியையும் சேர்த்துக் கலவையாக்கி உயர் வெப்பத்தில் மின் உலையில் வைத்துச் சூடாக்கி இஃது தயாரிக்கப்படுகிறது. 1891 ஆண்டில் அமெரிக்கரான அச்சஸன் என்பவர்மிகுந்த கடினத்தன்மை கொண்ட வைரத்துக்கான மாற்றுப் பொருளைக் கண்டுபிடிக்க முனைந்தார். அதன் பயனாக உருவானது தான் சாணைக்கல். அதிக அளவு வெப்பம் தாங்கும் சக்தி படைத்ததனால் இஃது ஏவுகணை, ராக்கெட் போன்றவற்றில் வெப்பம் தாங்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனைத் தூளாக்கித் துணியிலும் தாளிலும் ஒட்டிக் கடினப் பொருட்களைத் தேய்க்க (உப்புக் காகிதம் போல)ப் பயன்படுத்துகிறார்கள்,