இளையர் அறிவியல் களஞ்சியம்/ஜென்னர்
ஜென்னர் : இவரது முழுப் பெயர் எட்வர்ட் ஜென்னர். இவர் பெரியம்மை எனும் கொடிய தொற்றுநோய் வராமல் தடுக்க மருந்தையும் அதை ஊசி மூலம் உடலில் செலுத்தும் முறையையும் கண்டறிந்தவராவார்.
ஆங்கிலேயரான ஜென்னர் இங்கிலாந்தில் உள்ள கிளஸ்ட்டர்டியரிலுள்ள பர்க்கவே எனும் சிற்றூரில் 1749ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தம் பள்ளிக் கல்வி முடிந்ததும் மருத்துவப் படிப்பைத் தொடர்த்தார். பாதிரியராக இருந்த இவர் தந்தை அதற்குப் பெரும் தூண்டுகோலாக இருந்தார்.
மருத்துவப் பட்டம் பெற்ற ஜென்னர் முதலில் லண்டனில் லட்லோ எனும் மருத்துவ அறிஞரிடம் சேர்ந்து மருத்துவப் பணியாற்றினார். பின்னர், அக்காலத்தில் லண்டனிலேயே புகழ்பெற்ற மருத்துவ வல்லுநராகத் திகழ்ந்த ஜான் ஹன்டரிடம் சேர்ந்து அறுவை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார். ஜென்னரிடம் மிகுந்த திறமையும் ஆய்வு முனைப்பும் இருப்பதைக் கண்டறிந்த ஜான்
ஹன்டர். ஜென்னருக்குச் சிறப்புப் பயிற்சிகள் அளித்தார். சிறந்த ஆய்வாளரான ஜான் ஹன்டர் சிலவகைப் பரிசோதனைகளைத் தம் உடம்பிலேயே செய்து பார்க்கும் மன வலிமை கொண்டவர். அவரையே தன் ஆராய்ச்சி வழி காட்டியாகக் கொண்டு ஜென்னர் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளலானார்.
தன் வழிகாட்டியான ஹன்டரின் ஆலோசனைக்கிணங்க ஜென்னர் தன் சொந்த ஊருக்கே மீண்டும் திரும்பிவந்து தன் மருத்துவத் தொழிலைத் தொடர்ந்தார். தன் சொந்தக் கிராம மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்வதில் பெருமகிழ்வு கொண்டார்.
அக்காலத்தில் மக்கள் அம்மை நோயால் பெரும் பாதிப்புக்கு ஆளாயினர். இந்நோய் கண்டவர்கள் பிழைப்பது அரிதாக இருந்தது. அப்படியே பிழைத்தாலும் அம்மை நோய் வடுக்களால் அழகிழந்து கொடுரத் தோற்றத்தால் பெரும் பாதிப்படைந்தனர். இக்கொடிய நோயிலிருந்து தப்பும் வகையறியாது திகைத்து நின்று வருந்தினர். இந்நோய் மிகக் கொடிய தொற்று நோயாக இருந்ததால் எவ்வகையில் இந்நோய் பரவுகிறது என்பது யாருக்குமே தெரியாத புதிராக இருந்தது.
இவர் வாழ்ந்த ஊர் முற்றிலும் கிராமச் சூழலைக் கொண்டதாக இருந்தது. அக்கிராமத்தில் மாடுகள் அதிகமாக இருந்தன. மனிதர்களைப் போலவே அவற்றுக்கு மாட்டம்மை (Cowpox)நோய் அடிக்கடி வந்தது. ஆனால், விரைவிலேயே குணமாகி விடுவது அவற்றின் இயல்பாக இருந்தது. அம்மை நோய் கண்ட மனிதர்களுக்கு ஏற்படுவது போல் மாடுகளுக்கு அம்மை வடுக்கல் ஏதும் ஏற்படவில்லை. அத்துடன் ஒரு முறை அம்மை நோய் வந்தால் மறுமுறை வருவதில்லை என்பதும் அம்மக்களின் நம்பிக்கையாக இருந்தது.
இந்நிலைமைகளையெல்லாம் அறிந்தஜென்னர் இந்நோயின் இயல்பு பற்றி மிகத் தீவிர மாக ஆராய முற்பட்டார். முனைப்பான ஆராய்ச்சிக்குப்பின் ஒருமுறை அம்மைநோய் கண்டால் அஃது மறுமுறை வராது என்ற கிராம மக்களின் நம்பிக்கை உண்மை என்பது புலனாகியது. இதை ஆதாரப்பூர்வமாக 1796ஆம் ஆண்டு மே 14இல் பரிசோதனை முறையில் தெரிவித்தார். ஒரு முறை மாட்டம்மை வந்தால் மறுமுறை அம்மாட்டுக்கு மாட்டம்மை வருவதில்லை. காரணம், மாட்டம்மை கண்டபோது உடலில் மாட்டம்மை எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு நிலைபெறுவதுதான் என்பதை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிந்தார். இதே அடிப்படை மனிதர்களுக்கும் பொருந்தும் எனக் கண்டார். அம்மை நோய் கண்டிருந்த மாட்டுக்காரப் பெண்ணின் கொப்புளத்திலிருந்து எடுத்த அம்மைப் பாலின் சீரத்தை நல்ல உடல் நலத்தோடு இருந்த எட்டு வயதுச் சிறுவனுக்கு ஊசி மூலம் செலுத்தினார். அவனுக்கு அம்மை நோய் ஏற்படவில்லை. இச்சோதனைக்குப் பின் மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் ஏற்படும். அம்மை நோய் ஒரே இயல்புடையது என்பதைத் தெளிவாக்கினார். இதன் பின் மாட்டம்மை பாலை எடுத்து, மனிதர்களுக்கு ஊசி மூலம் செலுத்தி அம்மை எதிர்ப்புச் சக்தியை உருவாக்கினார். இதனால் அம்மை நோய் வராமல் முன்னெச்சரிக்கையாகத் தடுக்கமுடிந்தது.
அம்மை குத்தல் முறையைக் கண்டறிந்ததனால், மருத்துவ உலகம் பெரும் மகிழ்ச்சியடைந்தது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் அம்மைக்குப் பலியாவது தடுத்து நிறுத்தப்பட்டது. ஜென்னரின் இக் கண்டுபிடிப்பையும் பணியையும் பாராட்டும் வகையில் ஆங்கிலப் பாராளுமன்றம் விருதும் பரிசும் வழங்கிப்பாராட்டியது. ஃபிரெஞ்சு மன்னர் நெப்போலியனும் ரஷ்ய மன்னர் ஜாரும் பரிசலித்துப்
போற்றினர். உலகமெங்குமுள்ள மருத்துவர்கள் இன்றும் ஜென்னரைப் போற்றுகின்றனர்.
மருத்துவத் துறையில் கருத்தூன்றியவராக இருப்பினும் இசையார்வமும் கவிதையாற்றலும் மிக்கவராக விளங்கினார். பறவைகளைப் பற்றிய ஆய்விலும் இவர் ஆர்வமுடையவராக இருந்தார். இவர் 1828ஆம் ஆண்டில் தம் 74 -ஆம் வயதில் மறைவெய்தினார்.