இளையர் அறிவியல் களஞ்சியம்/ஜெராக்ஸ்
ஜெராக்ஸ் : இஃது அசலுக்கு நகல் உருவாக்கும் ஒருவகை இயந்திரமாகும். இக்கருவி மூலம் ஒரு மூலத்துக்கும் பல படி(பிரதி)களை மிகக் குறைந்த நேரத்தில் பெறமுடியும்.
மின்சாரத்தால் இயங்கும் இக்கருவியில் மேற் பகுதியில் படியெடுக்க வேண்டிய நூல் அல்லது தாளை தலைகுப்புற படுக்கை வசமாக வைக்க வேண்டும். படி யெடுப்பதற்கான தாளை இயந்திரத்தின் ஒரு மேல் முனையிலிருந்து உட்செலுத்துவர். உள்ளே செல்லும் தாளின் மீது, மேலே கிடைமட்டத்தில் குப்புற வைக்கப்பட்டுள்ள நூல் அல்லது தாளில் உள்ள எழுத்து வரிகள் அல்லது பட வரைகள் தனிமம் பூசப்பட்ட உருளைமீது மிகு ஒளியின் விளைவாகப் படியும். அவ்வுருளையில் பூசப்பட்டுள்ள மை தாளில் படிய நகல் உருவாகிறது. இந்நகல்தான் பின்புறம் வழியாக வெளியேறுகிறது. தற்போது இவை கணிப்பொறியின் துணை கொண்டு இயங்குகின்றன.