இளையர் அறிவியல் களஞ்சியம்/தோல் நிறம்
தோல் நிறம் : மனிதர்களின் தோல் நிறம் ஒரே மாதிரி இல்லை. வட ஐரோப்பாவைச் சார்ந்தவர்கள் வெள்ளை நிறமுடையவர்களாக உள்ளனர். அதேசமயத்தில் மேற்கு ஆஃப்ரிக்காவிலுள்ளவர்கள் கருமை நிறத்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென் கிழக்காசியாவைச் சார்ந்தவர்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடையவர்களாக உள்ளனர். மற்ற நாடுகளில் வாழ்வோர் இந்நிறங்களுக்கு அப்பாற்பட்ட புது நிறங்களாகவும் மாநிறமாகவும் இருக்கின்றனர். உலகெங்குமுள்ள மனித குலம் முழுமையும் நூற்றுக்கு மேற்பட்ட நிறமுடையதாக அமைந்துள்ளது.
நம் உடல் தோலில் ஏற்படும் வண்ணங்களுக்கு அடிப்படைக் காரணம் நம் உடலிலும் தோலிலும் ஏற்படும் தொடர் வேதி வினைகளேயாகும். நம் உடல் தோலில் குறிப்பிட்ட வண்ண அடிப்படை கொண்ட நிறஊக்கி (Chromogens) உளது. இந்த நிற அடிப்படையில் உயிர் விளையூக்கிச் செயல் மூலம் (Enzyme) இறுதியில் தோல் ஒரு குறிப்பிட்ட அடிப்படை வண்ணத்தை முழுமையாகப் பெறுகின்றது.
சிலருக்குத் தோலில் அடிப்படை நிறம் ஏது மில்லாமல் இருக்கும். இன்னும் சிலருக்கு அடிப்படை நிறம் இருந்தாலும் நிற ஊக்கியில் உயிர் விளையூக்கிச் (Enzyme) செயல் சரிவர ஏற்படாது போகும். அத்தகையவர்களின் நிறம் வெளிர் நிறமாக (Alling) அமைந்துவிடும். இவ்வெளிர் நிறம் எந்த வண்ணத்திலும் சேராததாகும். இத்தகைய வெளிர் நிறமுடையவர்கள் உலகெங்கும் உண்டு. ஆஃப்ரிக்காவில் இத்தகைய வெளிர் நிற (Albino) மனிதர்கள் வெள்ளையர்களையும்விட வெண்மை நிறத்தவர்களாகத் தோற்றமளிப்பர்.
மனிதர்களின் தோல் நான்கு நிற அடிப் படைகளைக் கொண்டதாக அமைவது இயல்பு. அவை வெண்மை, மஞ்சள், கருப்பு, சிவப்பு மற்றும் இவைகளின் கலவையால் உண்டாகும் புது நிறம்.
தோலைக் கருப்பாக்கும் தன்மை சூரியனின் வெப்பக் கதிர்களுக்கு உண்டு. எனவே, வெப்ப நாடுகளில் வாழ்வோரின் தோல் கரு நிறமுடையதாக இருக்கிறது. சில நாட்களுக்கு சூரிய வெப்பக்கதிர்கள் படும்படி இருந்தால் கதிரவனின் புற ஊதாக்கதிர்கள் தோலில் கரு நிறத்தை உருவாக்கிவிடும்.
தோலின் நிறம் மெலானைன் (Melanine) என்றும் நிறந்தரும் பொருளைப் பொறுத்து அமையும்.