இளையர் அறிவியல் களஞ்சியம்/நிணநீர்மண்டலம்
நிணநீர்மண்டலம் : இது ஒருவகை ஊநீர் ஆகும். இது மஞ்சள் நிறம்போன்று தோற்றமளிக்கும். இது உப்புச் சுவை கொண்ட காரத் திரவமாகும். இது இரத்தத் தந்துகிகளிலுள்ள பிளாஸ்மாவிலிருந்து ஊறி வெளிப்படுகிறது.
நிணநீரில் குளோரிட்டைன் குறைவாகவும் புரதச் சத்து அதிகமாகவும் உள்ளது. ஆக்சிஜனும் ஊட்டச் சத்துக்களும் நிறைய உள்ளன. இச்சத்துக்களை திசுக்கள் உறிஞ்சிக் கொண்டு தங்களிடமுள்ள அழுக்குகளை நிணநீரில் கலந்து விடுகின்றன. பின்னர் அவ்வழுக்குகளை நிணநீர் இரத்தத்தோடு கலந்து விடுகின்றன. இரத்தத்துக்குத் தேவைப்படும் ஊட்டச் சத்துக்களையும் இதுவே எடுத்துச் செல்கிறது. இவ்வாறு இந்நிணநீராகிய ஊனிர் உயிரணுக்களுக்கும் இரத்தத்துக்குமிடையே ஓர் இணைப்புப் பாலமாகவே விளங்குகிறதெனலாம்.
நிணநீரை உடலெங்கும் கொண்டு செல்ல நிணநீர் நாளங்கள் பயன்படுகின்றன. இந் நாளங்கள் இரத்த ஒட்டத்திற்கான தமனிகள், சிரைகள் போன்றிருக்கும். ஆழமான நாளங்கள் உடலின் உட்புறத்திலும் ஆழமற்ற நாளங்கள் தோலின் கீழ்ப்பகுதியிலும் அமைந்துள்ளன. இந்நாளங்கள் வால்வுகள் உடையவை. இதனால் நிணநீர் இதயம் நோக்கியே செல்ல முடியும். இதயமும் தசையும் சுருங்கி விரிவதால் நிணநீர் ஓட்டம் நடைபெறுகிறது.
நிணநீர்ச் சுரப்பிகள் ஒரளவுக்குக்கெட்டித் தன்மை கொண்டவையாகும். இவை மார்பு, வயிறு ஆகியன அமைந்துள்ள ஆழப்பகுதியிலும் தொடை, அக்குள் கழுத்து ஆகிய மேற்பகுதியிலும் அமைந்துள்ளன. இச்சுரப்பிகள் சிறிதும் பெரிதுமாக உள்ளன. நிணநீர் தந்துகிகளிலிருந்து எடுத்து வரும் கழிவுகள் தோல், நுரையீரல், சிறுநீரகம் மூலம் வெளியேற்றப்படுகின்றன. நிணநீர்ச் சுரப்பிகள் நோய்க் கிருமிகளை எதிர்க்கவல்ல லிம்போசைட்டஸ் எனும் வெள்ளையணுக்களை உருவாக்கி நிணநீருடன் கலக்கின்றன. நிணநீர் ஓட்டம் தடைப்படின் வீக்கம் ஏற்படும். அப்போது பைலேரியல் பாரசைட் யானைக்கால் வியாதியைத் தோற்றுவிக்கும். -
நோய்க் கிருமிகள் குறிப்பிட்ட உடல் உறுப்பில் நுழையும்போது அந்த உறுப்புக்கு உண்டான நிணநீர் முடிச்சு அளவில் பெரிதாக வீங்கி நோயினை அறிய உதவுகிறது. காலில், புண் வந்தால் தொடையில் நெறி கட்டுவதும் கையில் புண் வந்தால் அக்குளில் நெறி கட்டுவதும் இவ்வாறு வீங்கிய நிணநீர் முடிச்சுகளே யாகும்.