இளையர் அறிவியல் களஞ்சியம்/நிமோனியா
நிமோனியா : இது ஒருவகை நச்சுக்காய்ச்சலாகும். நுரையீரல் அழற்சியால் உருவாகும் நோய். நுரையீரல் சிற்றறைகளில் நுண்ணுயிர் கிருமிகள் தங்கி அப்பகுதி பாதிக்கப்படும்போது இந்நோய் தோன்றுகிறது. அதற்கு நச்சு நுண்ணுயிரிகளால் உண்டாகும் அழற்சியே அடிப்படைக் காரணமாய் அமைகிறது.
நிமோனியா என்றும், நிமோனியா நச்சுக் காய்ச்சல் என்றும் இருவகைப்படும். இந்நோய் சாதாரணமாக நாற்பது முதல் ஐம்பது வயதுக் குட்பட்டவர்களையே அதிகம் பீடிக்கும். நியூமோக்காக்கஸ் எனும் நோய்க்கிருமிகளே இந்நோய்க்குக் காரணமாகும். குழந்தைகளுக்கும் வயதான முதியோர்களுக்கும் மூச்சுக்குழல் தொடர்பான நிமோனியா நோய் வரும், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் போன்ற கிருமிகள் இந்நோயை எளிதாகத் தோற்றுவிக்கின்றன.
இந்நோய்க்கு காற்றோட்டம் குறைந்த இடங்களிலும் நெருக்கமான பகுதிகளிலும் வாழ்பவர்களே அதிகம் பலியாகிறார்கள். உடலில் இந்நோய் எதிர்ப்புச் சக்தி குறையம் போதும் இந்நோய் எளிதாக ஏற்படும்.
இந்நோய் திடீரென ஏற்படும். அப்போது கடுமையான காய்ச்சலும் மிகுந்த குளிரும் உண்டாகும். தொண்டைக் கரகரப்பும் இருமலும் ஏற்படும். கடுமையான தலைவலியும் தூக்கமிலாத் தன்மையும் உண்டாகும். இந் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.