இளையர் அறிவியல் களஞ்சியம்/நியான்

நியான் : இது இயற்கையாகக் கிடைக்க கூடிய வாயு. இது ஒரு தனிமம். மற்ற தனிமங்களுடன் சேர்ந்து புதுச் சேர்க்கை ஏற்படுத்தாத தனிமமாகும். இவ்வாயுவை முதன்முதலில் 1898ஆம் ஆண்டில் வில்லியம் ரான்சே என்பவரும் டிராவெர்ஸ் என்பவரும் இணைந்து கண்டுபிடித்தனர்.

கண்ணாடிக் குழலிலுள்ள காற்றை வெளியேற்றிவிட்டு குறைவான அழுத்தத்தில் சுமார் 10 மி.மீ. அளவில் நியான் வாயுவை நிரப்பி, அக்குழலினுள் மின்சாரத்தைப் பாய்ச்சினால் அவ்வாயு ஒளிரும் தன்மை பெறும். அவ்வொளி சிவப்புக் கலந்த ஆரஞ்சு வண்ண வெளிச்சமாக வெளிப்படும். இரவில் மட்டுமல்லாது பகலிலும் இவ்வெளிச்சம் பளிச்செனக் கண்ணில்படும். மூடுபனி, பனிப்பொழிவு உள்ள பகுதிகளில் நியான் விளக்குகளே வெளிச்சமூட்ட அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தெளிவுக்காக விமான ஒடு பாதைகளிலும் விளம்பர எழுத்துக்களிலும் இந்த வாயுவே பயன்படுத்தப்படுகின்றன. நியான் வாயுவோடு சிறிதளவு பாதரசத்தைக் கலந்தால் ஒளிமிக்க நீலநிறம் கிடைக்கும். மேலும் நியான் வாயுவைப் போன்ற மந்த வாயுக்களான ஹீலியம், ஆர்க்கான், கிரிப்டான், சினான் போன்றவற்றைச் சேர்த்துப் பயன்படுத்தும் போது வெவ்வேறு நிறங்களைப் பெற இயலும்.