இளையர் அறிவியல் களஞ்சியம்/நீர்
நீர் : வாழ்க்கைக்கு இன்றியமையாதது நீர் ஆகும், உலகப் பரப்பில் 70 சதவீதம் நீர் உள்ளது. கடல் ஏரி போன்ற நீர்நிலைகளில் மட்டுமல்லாது மண்ணுக்கடியிலும் காற்றிலும் பிற உயிர்களிடத்தும் நீர் உள்ளது. நம் உடலில் 70 சதவீதம் நீர் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலும் வேண்டிய அளவு நீர் உள்ளது.
தூய நீருக்கு மனமோ, நிறமோ, சுவையோ இல்லை. மழை நீரும் நீராவியிலிருந்து பெறும் நீரும் தூய நீராகும். சில சமயம் மழை நீரும் தூய்மை கெடுவதும் உண்டு. காற்று மண்டலம் வழியே மழை பெய்யும்போது காற்றில் உள்ள ஆக்சிஜனும் நைட்ரஜனும் கார்பன் டையாக்சைடும் மழையோடு கலந்து, கரைந்து பெய்வதுண்டு. தரையில் விழும் மழை நீர் நிலத்தில் பாய்ந்து செல்லும்போது அங்குள்ள சுண்ணாம்பு மற்றும் சிலவகை உப்புக்களோடு கலந்து கடலை அடைகிறது.
திரவப் பொருளான நீர் திடவடிவில் பனிக் கட்டியாகவும் காற்றில் நீராவியாகவும் உள்ளது. நீரின் கொதி நிலை 100 டிகிரி, நீர் பனிக் கட்டியாக மாறும்போது அதன் கன அளவு அதிகரிக்கிறது. பாறைகளுக்கு அடியில் தேங்கியுள்ள நீர் உறைந்து பனிக்கட்டியாகும்போது பாறையின் சிறு பகுதிகள் உடைகின்றன. இவை ஆற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும்போது உராய்வினால் தேய்ந்து மணலாகிறது. கடுங்குளிர்ச்சி காரணமாக பெரும் நீர்ப்பரப்புகள் பனிக்கட்டியாகிவிடும். அப்பணிக்கட்டி அடி நீரின்மீது மிதக்கும், பனிக்கட்டி நிலையில் இருக்கும்போது அடிநீர் குளிராமல் மேலுள்ள பனிக்கட்டி காக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டுவரை நீரை ஒரு தனிப் பொருளாகவே கருதி வந்தனர். அதன் பிறகுதான் ஆக்சிஜனும் ஹைட்ரஜனும் கலந்த ஒரு கூட்டுப் பொருளே நீர் என்பது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டது.
நீரின் தன்மையைக் கொண்டு அதனை இரு வகையினவாகப் பகுப்பர். ஒன்று மென்னீர் (Soft water), மற்றோன்று கடின நீர் (Hard water) ஆகும். மென்னீரில் சோப்பைக் கலந்து கலக்கினால் நுரை உண்டாகும். கடின நீரில் சோப் நுரை உண்டாகாது. காரணம், கடின நீரில் கால்சியம், மக்னீசியம் உப்புக்கள் கலந்திருப்பதேயாகும்.
நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைய நீர் மிக அவசியம். வாழும் உயிர்களின் திசுக்களில் நீர் அடங்கியுள்ளது.
மழை மூலம் தரையை அடையும் நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும். அதை குளம், ஏரிகளில் தேக்கிப் பயிர் விளைச்சலுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கவும் பயன்படுத்துகிறோம். பெரும் அணைகளில் நீரைப் பெருமளவில் தேக்கிவைத்து பயிரிட, குடி நீருக்குப் பயன்படுத்தும் அதே சமயம் நீரோட்ட விசையைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து வாழ்க்கையின் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம்.
நீரில் கன ஹைட்ரஜன் இருப்பின் அதுவே கனநீர் என அழைக்கப்படுகிறது. இது சோதனைச் சாலைகளிலும், உட்கரு மின்சக்தி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது.