இளையர் அறிவியல் களஞ்சியம்/நிலநடுக்கம்
நிலநடுக்கம் : இது 'நில அதிர்ச்சி’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. நில நடுக்கம் எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதனால் அப்பகுதிகள் பெரும் சேதங்களுக்கு ஆளாகும். நிலப் பிளவுகளும், பூமி வெடிப்புகளும் நிலச் சரிவுகளும் ஏற்பட, அப்பகுதி வாழ் மக்களின் வாழ்க்கை பெருந் துன்பத்துக்கு ஆளாகிறது. நில அதிர்ச்சி தரைப் பகுதியில் மட்டுமல்ல, கடற் பகுதிகளிலும் உண்டாவது உண்டு. அப்போது பேரலைகள் தோன்றி கடல் வாழ் உயிரினங்களையும் கடற்மேற் செல்லும் கப்பல்களையும் அலைக்கழிக்கும். இதற்குக் காரணம் என்ன?
நாம் வாழும் பூமியின் அடிப்பகுதி பல்வேறு அடுக்குகளால் ஆனது. அதன் உச்சிப் பகுதியாகிய மேற்பகுதி, புறணி என்று அழைக்கப்படுகிறது. அஃது மிகவும் கெட்டித்தன்மை கொண்டதாகும். இந்நிலத்தின் உட்பகுதியோ மிகுந்த வெப்பமுடையதாக உள்ளது. இதனால் அங்கு அழுத்தம் அதிகம். மிகு வெப்பத்தின் காரணமாக உட்பகுதி திரவ நிலையில் அமைந்துள்ளது. அவற்றினூடே உள்ள பெரும் பாறைகள் பிளவுபட அல்லது அவற்றின் நிலை மாற நேரிடும்போது அவை அமிழவோ உயரவோ இடம் மாறவோ செய்கின்றன. அப்போது நிலம் அசைகிறது. இந்நிகழ்ச்சியின் விளைவாக ஏற்படும் ஆற்றல் வெளிப்படுகிறது. இஃது அதிர்ச்சி அலைகளாக பூமியினுாடே செல்கிறது. இதுவே பூமி அதிர்ச்சியை அல்லது நிலநடுக்கத்தை தோற்றுவிக்கிறது. இதன் விளைவாக பெரிதாகும்போது பூகம்பமாக மாறி நெருப்புக் குழம்பையும் பாறைத் துண்டுகளையும் பூமிக்கு மேலாக வீசியடிக்கிறது. நிலநடுக்கத்தின்போது பூமியில் பெரும் பிளவுகள் ஏற்படுகின்றன. வெடிப்புகள் உண்டாகிறது. நிலச் சரிவுகள் ஏற்படுகின்றன. இதனால் கட்டிடங்கள் நொறுங்குகின்றன. இந் நிலநடுக்கங்களால் லேசாகவோ, கடுமையாகவோ சேதங்கள் ஏற்படும். உட்பகுதிகளில் ஏற்படும் அதிர்ச்சி அலைகள் பூமியினுடே செல்லும் நேரத்தைப் பொறுத்து, நிலநடுக்க நேரம் அமையும்,
இந்தியாவில் இமயமலைப் பகுதிகளில் நில நடுக்கம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. தென் பகுதிகளில் ஏற்படுவதில்லை. காரணம் இப்
பகுதி கடுமையான இறுகிய பாறைகளாலான உட்பகுதியைக் கொண்டிருப்பதேயாகும். லேசான நில அதிர்வுகள் மக்களால் அதிகம் உணரப்படுவதில்லை. ஆயினும் நில அதிர்ச்சி மாணி (Seismograph)யைக் கொண்டு அறிந்து கொள்ளலாம், நிலநடுக்கத்தின் வலிமையை ரிக்டர் எனும் அளவைக் கருவியைக் கொண்டு அளந்தறியலாம்.
1991 அக்டோபர் 20இல் உத்திரப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலந்டுக்கம் பல்லாயிரம் உயிர்களையும் வீடு முதலான உடமைகளையும் அழிப்பதாய் அமைந்தது. 1998ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மஹாராஸ்டிர மாநிலத்திலுள்ள மராத்துவாடாப் பகுதியில் லத்துார் முதலான பல கிராமங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் நாசத்தை ஏற்படுத்தியது. இதனால் முப்பதினாயிரம் மக்களும் ஏராளமான கால்நடைகளும் மடிய நேரிட்டது.