இளையர் அறிவியல் களஞ்சியம்/நீர்வாழ் உயிரினங்கள்
நீர்வாழ் உயிரினங்கள் : தரைப் பகுதியில் மனிதன், விலங்குகள், பறவைகள் எனப் பல்வேறு உயிரினங்கள் வாழ்வது போன்றே, நீர்ப் பகுதிகளிலும் பல்வகை உயிரினங்கள் வாழ்கின்றன. தரையின் மீது வாழும் உயிரினங்கள் உயிர்வாழ இன்றியமையாது தேவைப்படுவது பிராணவாயு எனும் ஆக்சிஜன். அதே போன்று நீரில் வாழும் உயிரினங்களுக்கும் பிராணவாயு தேவைப்படுகிறது. நீரில் கரைந்துள்ள பிராணவாயுவை செதில்கள் மூலம் கிரகித்து உயிர்வாழ்கின்றன. உலகிலேயே மிகப் பெரிய நீர்வாழ் உயிரினமாகிய திமிங்கிலமும் சிறிய உருவிலான நீர் நாய் மற்றும் சீல், போன்றவைகள் நுரையீரல் மூலம் சுவாசிப்பதால் அவை அடிக்கடி நீர்மட்டத்திற்கு வந்து செல்கின்றன.
நீர்வாழ் உயிரினங்களில் சிறியவை நுண்ணுயிர்களை உண்டு வாழ்கின்றன. திமிங்கிலம் போன்ற பெரிய விலங்குகள் சிறிய உயிர்களை உண்டு உயிர் வாழ்கின்றன. நீழ் வாழ் உயிரினங்கள் நீரில் நீந்தவும் பாறைபோன்றவற்றில் ஒட்டிக்கொண்டு வாழவும் ஏற்ற வகையில் இவற்றின் உடல் உறுப்புகள் அமைந்துள்ளன. ஆமை, முதலை போன்ற நீர் வாழ் உயிரினங்கள் தரைப்பகுதியில் வந்து முட்டையிட்டுச் செல்கின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் நீரை நோக்கிச் சென்று வாழ்கின்றன. மீன்களும் தவளைகளும் நீரிலேயே முட்டையிட்டு, குஞ்சு பொறித்து இனவிருத்தி செய்கின்றன. திமிங்கிலம், டால்ஃபின் கடற்பசு போன்றவை குட்டிகளை ஈன்று பாலூட்டி வளர்க்கின்றன.