இளையர் அறிவியல் களஞ்சியம்/நீர்முழ்கிக் கப்பல்
நீர்முழ்கிக் கப்பல் : நீரினுள் மூழ்கியவாறே செல்லும் கப்பல் நீர்மூழ்கிக் கப்பலாகும். இஃது நீளவாட்டத்தில் அமைந்திருக்கும். நீர் மூழ்கிக் கப்பலின் முன் பகுதியும் பின்பகுதியும் ஓரளவு ஒடுங்கியிருக்கும். நடுப்பகுதி சற்று அகன்றும் உயர்ந்தும் அமைந்திருக்கும். விரும்பும்போது கடல் மட்டத்திற்கோ அல்லது கடலில் குறிப்பிட்ட ஆழத்திற்கோ கொண்டு செல்ல முடியும்.
நீர்மூழ்கிக் கப்பலின் உடற்பகுதி இரு கூடுகளைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். கடல் நீருள் அமிழ்ந்து செல்லும்போது நீரின் அழுத்தத்தை நன்கு தாங்கும் வண்ணம் இக் கூடுகள் உறுதி மிக்கவையாக அமைந்திருக்கும். உள் கூட்டிற்கும் வெளிக் கூட்டிற்குமிடையே இடைவெளி இருக்கும். இவ்விடைவெளியில் நீர் நிறைந்தவுடன் நீர்க் கனத்தால் நீரும் அமிழும். அந்நீர் இடைவெளியிலிருந்து அகற்றப்பட்டவுடன் கணம் குறைந்து நீர்ப் பரப்பை நோக்கி மேலெழும்.
நீர் மூழ்கிக் கப்பலின் நடுப்பகுதியில் அமைந்துள்ள உயரமான பகுதியில் பெரிஸ்கோப் எனும் தொலைநோக்கிக் கருவி அமைந்துள்ளது. இது எப்போதும் நீர்மட்டத்திற்கு மேலாகவே இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் இதன் மூலம் கடலின் மேற்பரப்பில் சென்று கொண்டிருக்கும் கப்பல்களின் நடமாட்டத்தை உள்ளிருந்தபடியே அறிந்து கொள்ள முடிகிறது.
நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையின் இன்றியமையா அங்கமாக இன்று விளங்கி வருகிறது. இவை இன்று கடற்பகுதி ஏவுகணைத் தளங்களாகவும் விளங்கி வருகின்றன.
நீர்மூழ்கிக் கப்பல்களின்மூலம் எதிரிக் கப்பல்களை மட்டுமல்லாது எதிரியின் விமானங்களையும் அறிந்து அவற்றின்மீது ஏவுகணைகளைச் செலுத்தி அழிக்க முடிகிறது. கடலில் உலவும் கப்பல்களை அழிக்க வெடிகுண்டுகளை வைக்கவும் எதிரிகளால் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றவும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்று பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
கடலினுள் நீர்மூழ்கிக் கப்பலைப் போன்றே சென்று, எதிரிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் ஒருவகை நீர்மூழ்கிக் கப்பல் உண்டு. அஃது ‘டார்பிடோ’ என அழைக்கப்படுகிறது.
போர்ச் செயல்களுக்கு மட்டுமல்லாது கடலடி ஆய்வுக்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் இன்று பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கென அணுச் சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றால் பல அறிய கடலடி வாழ் உயிரினங்களும் உள் அமைப்புகளும் கண்டறியப்படுகின்றன.
நீர்மூழ்கிக் கப்பலை முதன்முதலில் கண்டறிந்து வடிவமைத்தவர் கார்னிலியஸ் வான்டிரெபெல் எனும் நெதர்லாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். 1620ஆம் ஆண்டில் இவர் வடிவமைத்த முதல் நீர்முழ்கிக் கப்பல் தேம்ஸ் நதியில் சுமார் 5 மீட்டர் ஆழத்தில் இயக்கிப் பார்க்கப்பட்டது. அதன் பின்னர் 1899இல் ஜான் ஹாலண்ட் எனும் அமெரிக்க அறிவியலறிஞர் இதில் பல மாற்றங்களைச் செய்து மாற்றித் திருத்தியமைத்தார். அது கிட்டத்தட்ட இன்றைய வடிவையொத்து அமைந்தது. காலப்போக்கில் மேலும் பல மாற்றங்களை ஏற்று இன்றைய அமைப்பைப் பெற்றுள்ளது.
உலக வல்லரசுகள் மட்டுமல்லாது இந்தியா போன்ற வளரும் நாடுகளும் நீர்முழ்கிக் கப்பல்களைத் தயாரித்துப் பயன்படுத்தி வருகின்றன.
நீர்மூழ்கிக் கப்பல்களில் இடவசதிக் குறைவாக இருப்பதால் அதில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் அதிக நடமாட்டமில்லாதவர்களாக இருந்த இடத்தில் இருந்தவாறே பணியாற்ற வேண்டியவர்களாகிறார்கள். இதற்கு வீர தீர உணர்வும் மனவலிமையும் கொண்டவர்களே ஏற்றவர்கள். அத்தகையவர்கள் மட்டும் இப்பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.