இளையர் அறிவியல் களஞ்சியம்/நீர் மின்சாரம்

நீர் மின்சாரம் : மின்சாரத்தின் துணையின்றி வாழவே முடியாது என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது. நம் வாழ்க்கை வளத்துக்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமாக மின்சாரம் அமைந்துள்ளதெனலாம். அத்தகைய மின்சாரத்தை நீரிலிருந்தும் அனலிலிருந்தும் அணுச்சக்தியிலிருந்தும் இன்று நாம் பெற்று வருகிறோம். இவற்றுள் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையே நீண்ட காலமாக இருந்து வருகிறது.

உயரமான இடத்திலிருந்து வேகமாக விழும் போது உண்டாகும் நீர்ச்சக்தியை மின்னாக்கியின் துணைகொண்டுமின்சாரமாகமாற்றுவதன் மூலம் பெறுவதே நீர் மின்சாரம் ஆகும். இதற்காக வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றுநீரை அணை கட்டி நீர்த்தேக்கங்களில் தேக்குவர். இதன் மூலம் ஆற்றுப் பெருக்கு இல்லாத காலத்திலும் கூட மின்சாரம் தயாரிக்க முடிகிறது.

அணையில் தேக்கப்பட்ட நீரைக் குழாய் மூலம் மின்னாக்க எந்திரப் பகுதிக்குப் பாய்ச்சுவர். அங்குள்ள டர்பைன்கள் எனும் நீர்ச் சுழலி எந்திரங்கள் வேகமாகச் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. உற்பத்தியாகும் மின்சக்தியின் அளவு, நீர் விரைந்து வரும் வேகத்தையும் அது பாய்ந்து விழும் உயரத்தையும் பொறுத்து அமையும். இதனால் பெரும்பாலும் நீர்மின் உற்பத்திக்கான இடங்கள் உயரமான மலையில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்படுகின்றன. நீலகிரி மலையில் உள்ள பைக்காரா, குந்தா, மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியாறு மின்னாக்க நிலையங்கள் இத்தகையனவாகும். மேட்டுர் அணை தரைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மின்னாக்க நிலையத்துக்கு எடுத்துக்காட்டாகும். மலைப் பகுதிகளில் பாய்ந்து வரும் அணை நீரிலிருந்து ஒன்றொடொன்று இணைந்ததாக தொடர் மின்னாக்க நிலையங்கள் அமைக்கப்படுவதுண்டு. உதாரணமாக நீலகிரி மலையில் அமைக்கப்பட்டுள்ள பைக்காரா மின்னாக்கி நிலையத்திலிருந்து பாய்ந்தோடும் நீரைக்கொண்டு மோயாறு என்னுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னாக்க நிலையம் மீண்டும் நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.