இளையர் அறிவியல் களஞ்சியம்/நைலான்

நைலான் : இது ஒரு பாலியமைடு (Polyamide) எனப்படும் பல்லின சேர்மமாகும். இதன் அதிக உறுதிக்கு இச்சேர்மத்தில் காணும் ஹைட்ரஜன் பிணைப்பாகும். பட்டு நூல் போன்று செயற்கை முறையில் உருவாக்கப்படும் இழைகள் 'நைலான்’ என்று அழைக்கப்படுகிறது. நைலான் நூலிழைகளை முதன் முதல் உருவாக்கியவர் புகழ் பெற்ற வேதியியல் அறிஞரான கரோர்ஸ் எனும் அமெரிக்கராவார். இவர் இதை 1988ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இன்றைய வாழ்வில் நைலான் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது

நைலான் நிலக்கரி, நீர், காற்று மற்றும் பெட்ரோலியப் பொருட்களிலிருந்து உருவாக்கப்படுகிறது கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன் ஆகிய தனிமங்களின் சேர்க்கையால் உருவாக்கப்படுவதே நைலான். நைலான் பொடிகளைக் குறிப்பிட்ட அளவில் வெப்பப்படுத்தினால் உருகுநிலையை அடையும். அதை நுண்துளைகள் வழியே வெளியேற்றினால் நூலிழைகளாக வெளிவரும். வெப்பப் பசையோடு வெளிப்படும் இவ்விழைகள் காற்றுப்பட்டவுடன் இறுகிக் கெட்டிப்படுகின்றன். இந்நைலான் இழைகள் உறுதிமிக்கவையாகும். பருத்தி, பட்டு நூலிழைகளைவிட நைலான் நீண்ட காலத்திற்கு நைவடையாமல் உழைக்கும் தன்மையுடையது. இந்நூலிழைக்கு நீரை உறிஞ்சும் தன்மை மிகமிகக் குறைவு. நீர்ப்பட்டாலும் விரைந்து உலர்ந்து விடும். எனவே, நைலான் பொருட்களை நீரால் சுத்தம் செய்வது மிக எளிது.

நைலான் இழைகள் பலவற்றைச் சேர்த்துக் கயிறாகவோ, ஊடும் பாவுமாக அமைத்து ஆடை நெய்யவோ எளிதாக இயலும். எல்லா வகையான ஆடைகளும் நைலான் இழைகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. நைலான் நூலிழைகளைக் கொண்டு காலுறைகளும் உள்ளாடைகளும் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. விமானத்திலிருந்து குதிக்கப் பயன்படும் பாராஷூட்டுகள் எனப்படும் விமானக்குடைகள் செய்யவும் திரைச்சீலைகள், விரிப்புகள், கித்தான்கள், வலைகள் செய்யப் பெருமளவு பயன்பட்டு வருகிறது. மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது அறுவைப் பகுதிகளைத் தைக்கவும் நைலான் நூலிழைகளே பயன்படுத்தப்படு கின்றன.