இளையர் அறிவியல் களஞ்சியம்/நொதித்தல்

நொதித்தல் : மிகப்பெரிய சிக்கலான அமைப்பினை உடைய கரிமமூலக்கூறுகள் (Organic Molecules) என்ஸைம்களின் உதவியால் சிறிய மூலக்கூறுகளாக சிதைவுறும் வினை நொதித்தல் என்று அழைக்கப்படுகிறது. நொதித்தலின்போது கரியமிலவாயு வெளிவிடப்படுகிறது. இது நொதித்தலைப் போன்ற தோற்றமுடையதால் இச்செயலுக்கு ‘நொதித்தல்’ என அழைக்கப்படுகிறது. இஃது ஆங்கிலத்தில் ஃபெர்மென்டேஷன் (Fermentation) என்று அழைக்கப்படுகிறது. நொதித்தல் என்பது ஈஸ்ட்டுகளாலும் பாக்டீரியாக்களாலும் உருவாக்கப்படுகிறது. கரிமப் பொருள்களான இவற்றில் நைட்ரஜன் உண்டு. இவை அளவில் குறைவாக இருப்பினும் நொதிப்பு வினையை நிகழ்த்தும் தன்மையுடையதாகும். இந்நொதித்தல் வினை மூலமே திராட்சைச்சாறு மதுவாக மாற்றமடைகிறது. பால் புளிப்பதும் சர்க்கரைப் பொருள் சாராயமாக மாறுவதும் இவற்றினாலேயே யாகும்.

ஈஸ்ட்டும் பாடீக்ரியாக்களும் உயிர்ப் பொருள்களாகும். இவை விரைந்து இனப் பெருக்கம் செய்கின்றன. அமிலத்தன்மை உள்ள பொருட்கள் ஈஸ்ட் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

தானிய வகைகளைக் கொண்டு மது தயாரிக்கப்படுகிறது. தானியமாக சர்க்கரைப் பொருளாக உருமாற்றம் பெறுகிறது. அதனுடன் ஈஸ்ட்டைக் கலக்கும்போது நொதித்தல் மூலம் மது தயாரிக்கப்படுகிறது. பாக்டீரியாவால் பால் புளித்து பின்னர் நொதிப்படைகிறது. இதே முறையில்தான் ஆல்கஹால், அசெட்டிக் அமிலமாக மாறுகிறது.