இளையர் அறிவியல் களஞ்சியம்/நோய் எதிர்ப்புச்சக்தி
நோய் எதிர்ப்புச்சக்தி : நோய்க்கிருமிகளால் நம் உடலில் நோய் உண்டாகாதவாறு தடுக்கும் சக்தியே நோய் எதிர்ப்புச் சக்தியாகும் நோய் எதிர்ப்புச் சக்தி சிலர் உடம்பில் இயற்கையாக ஏற்பட்டிருக்கும். சிலர் செயற்கையாகத் தம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கிக் கொள்வதும் உண்டு. இதன் மூலம் குறிப்பிட்ட ஓரிரு நோய்களை அல்லது பல நோய்கள் நம் உடலைத் தாக்காதவாறு காத்துக்கொள்ள முடியும்.
ஒருவருக்கு நோய் ஏற்படவில்லை என்றால் அவர் உடலில் நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது என்பது பொருளாகும். நோய்க் கிருமிகள் பலவகைப்படும். ஒவ்வொரு வகைக் கிருமிகளும் ஒவ்வொரு வகை நோயை உண்டு பண்ணும். ஒருவருக்கு உடலில் ஒருவகை நோய்க் கிருமிகளை எதிர்த்து நிற்கும் சக்தி இருக்கலாம். ஆனால், வேறொரு வகை நோய்க்கிருமிகளை எதிர்க்கும் சக்தி அற்றவராக இருக்க நேரிடும். சான்றாக, ஒருவர் பெரியம்மை நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருக்கலாம். ஆனால், டைபாய்டு நோய் எதிர்ப்பு சக்தியற்றவராக இருந்து அந்நோய்க்கு ஆளாகலாம்.
நோய் எதிர்ப்புச் சக்தி இரு வகைப்படும் முதலாவது இயற்கையாக அமைந்துள்ளது. இரண்டாவது செயற்கையாக உடலில் உண்டாக்கிக் கொள்வது. இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி பிறக்கும் போதே உடலில் ஏற்பட்டு நிலைபெறுவதாகும். மனிதர்களுக்கும் பிற விலங்கினங்களுக்கும் அடிக்கடி நோய் ஏற்படும். ஒன்றின் நோய் மற்ற உயிரினத்தைத் தாக்குவதும் உண்டு. எல்லா நோய்களும் அவ்வாறு பற்றுவதில்லை. காரணம் அவற்றிற்கு இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியே யாகும். சான்றாக, கிரந்தி நோய், குஷ்டம் போன்ற நோய்கள் விலங்குகளைப் பற்றுவதில்லை. காரணம், இந்நோய்களை எதிர்க்கும் சக்தி இயற்கையாகவே அவ்விலங்குகளிடம் இருப்பதேயாகும். அதே போன்று விலங்குகளுக்கு வெக்கை போன்ற நோய்கள் உண்டாகும். ஆனால், இத்தகைய நோய்கள் மனிதர்களைத் தாக்குவதில்லை. ஏனெனில், வெக்கை நோயை எதிர்க்கும் சக்தி மனிதர்களிடம் இயற்கையாக இருப்பதே யாகும். மனித இனத்தவர்களுள்ளும் வெள்ளை இனத்தவருக்கு வரும் சில நோய்கள் கறுப்பு இனத்தவரிடம் உண்டாவதில்லை. அவ்வாறு கறுப்பு இனமக்களிடம் உண்டாகும் சில நோய்கள் வெள்ளை இனத்தவரிடம் ஏற்படுவதில்லை. காரணம் வெவ்வேறு வகையான நோய் எதிர்ப்புச் சக்திகளை இவ்வின மக்கள் இயற்கையாகப் பெற்றிருப்பதே யாகும்.
குழந்தை பிறந்தபின் உண்ணும் தாய்ப் பால் மூலமும் உடலில் செலுத்தும் ஊசி மருந்து மூலமும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் செயற்கையாக உண்டாக்கலாம். நோயால் பீடிக்கப்பட்டவர்கள் அந்நோயைப் போக்க மருந்தை உட்கொள்ளுகிறார்கள். அல்லது ஊசி மூலம் உடலுள் செலுத்துகிறார்கள். அம்மருந்து உடலில் உள்ள நோய்க் கிருமிகளை அழித்து நோயைப் போக்குகிறது. அத்துடன் அந்நோயை அழிக்கும் அல்லது எதிர்க்கும் சக்தி உடலில் தங்குகிறது. இதனால் மீண்டும் மீண்டும் அந்நோய் உடலில் தோன்றாமல் காக்க முடிகிறது. சான்றாக, பெரியம்மை ஒருவருக்கு உண்டானால், அம்மை எதிர்ப்புச் சக்தி உடலில் உருவாகி, நிலைபெறுகிறது. இதனால் அவருக்கு மீண்டும் பெரியம்மை நோய் வருவதில்லை. இத்தகைய நோய் எதிர்ப்புச் சக்தி சிலகாலம் வரை இருக்கும்; நீண்ட காலம் உடலில் நிலைபெறுவதும் உண்டு. இது இயற்கையாக உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தியாகும்.
கொல்லப்பட்ட அல்லது பலவீனமான நோய்க்கிருமிகளை உடலில் செலுத்தினால் அவை இரத்தத்தில் நோய் எதிர்ப்புத் தன்மையை உண்டாக்கி, வெளியிலிருந்து வரும் நோய் உடலைப் பற்றாமல் காக்கின்றன. இந்த அடிப்படையிலேயே அம்மை குத்தப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியை மனித உடலில் உண்டாக்குவதற்கு மாறாக, விலங்குகளின் உடலில் உண்டாக்கி, அதன் சீரத்தை மனித உடலில் செலுத்தி நோய் எதிர்ப்புச் சக்தியை உடலில் உருவாக்குவதும் உண்டு. மாடுகளுக்கு அம்மை நோயை உண்டாக்கி அதன் சீரத்தை எடுத்து அம்மைப் பாலாக மனிதர்களுக்குச் செலுத்தப்படுகிறது. அவ்வாறே குதிரை மூலம் பெறும் சீரத்தை மனிதர்களுக்குச் செலுத்தி 'டிப்தீரியா’ எனும் நோய் தீர்க்கப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள மனிதரை ஒரு வித கொடிய நச்சு நுண்மமாகிய 'வைரஸ்' தாக்குவதால் அவனிடமுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தோ அல்லது முற்றிலுமாக இல்லாமலோ போய்விடுகிறது. இத்தகைய கிருமிகளால் தாக்கப்பட்டவர் ‘எய்ட்ஸ்' எனும் கொடிய நோய்க்கு ஆளாகின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அறவே இல்லாததால் தொற்று நோய்கள் அனைத்தும் அவன் உடலில் குடியேறி, அவன் உடலைச் சிதைத்து விரைவாக மரணத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, எப்போதும் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிக அவசியமாகும்.