இளையர் அறிவியல் களஞ்சியம்/பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் : 'குழைமம்' என்று தமிழில் அழைக்கப்படும் பிளாஸ்டிக் இன்றைய வாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. பிளாஸ்டிக்கினால் ஆன பொருட்கள் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

முன்பு பிளாஸ்டிக் போன்ற குழைமப் பொருளாக 'செல்லுலாயிடு' எனும் பொருள் 1889 -ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பருத்தி இழைகளை கர்ப்பூரத்தோடு சேர்த்து நைட்ரிக் அமிலத்துடன் கலந்து தயாரிக்கப்பட்டது. அதன்பின்னர் 1909 ஆம் ஆண்டில் 'பேக்கலைட்' எனும் மற்றொரு வகைப் பிளாஸ்டிக் கண்டறியப்பட்டது. இதனின்றும் உருவானதே இன்று நாம் அதிக அளவில் பயன்படுத்தும் பிளாஸ்டிக்.

இது ஒரு பல்படி கரிமச் சேர்மமாகும். பல எளிய கரிம மூலக்கூறுகள் இணைந்து ஒரு பெரியகரிம மூலக்கூறுகளாக மாறுவதற்குப்பல படி வினைகள் என்று பெயர். இவ்விதம் பெறப்பட்ட சேர்மம் 'பல்படிச் சேர்மம்’ என அழைக்கப்படும். இவ்வாறே பிளாஸ்டிக்கும் ஒரு பல்படிச் சேர்மமாகும் (Polymer). இவைகள் பொதுவாக இருவகைப்படும். அவைகள் முறையே: (1) வெப்ப உருகு பிளாஸ்டிக் (Thermo plastic)(2) வெப்ப இறுகு பிளாஸ்டிக் (Thermo setting plastic) முதல் வகை வெப்பப்படுத்தும்பொழுது உருகி, குளிர்விக்கும் பொழுது மீண்டும் இறுகும். இரண்டாம் வகை வெப்பப்படுத்தும்பொழுது மேலும் இறுகும் தன்மை உடையதாகும்.

சாதாரணமாகப் பிளாஸ்டிக் பஞ்சு, சுண்னாம்புக் கல். கரித்தார், நீர் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படும் ஒருவகைக் கூட்டுப் பொருளாகும்.

பிளாஸ்டிக் பொருள்கள் கனமற்றவை; லேசானவை; விலையும் மலிவு. கையாள்வது எளிது.

பிளாஸ்டிக் பொருட்களில் வேதியில் மாற்றங்கள் பொதுவாக ஏற்படுவதில்லை. மின் சாரத்தைக் கடத்தும் தன்மையற்றவை. எனவே, மின் காப்புறைகளாக பிளாஸ்டிக்குகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக்கினால் படகுகள், பலவிதப் பைகள், வானொலிப்பெட்டிகள், தேநீர்க் கோப்பைகள், தொலைபேசி உறுப்புகள், இசைத் தட்டுகள், பல்வேறு வகையான விளையாட்டுச் சாமான்கள் செய்யப்படுகின்றன. எழுதும் பேனா முதல் மாபெரும் நீர்த்தொட்டிகள் வரை பிளாஸ்டிக்கினால் செய்யப்படுகின்றன.