இளையர் அறிவியல் களஞ்சியம்/பிளாஸ்மா

பிளாஸ்மா : நம் உடலில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் 45 விழுக்காடு இரத்த அணுக்களும் 55 விழுக்காடு பிளாஸ்மா எனும் நீர்மப் பொருளும் இருக்கின்றன என்பதை முன்பே கண்டோம் (பார்க்க : இரத்த அணுக்கள்).

பிளாஸ்மாவில் 92 விழுக்காடு நீர் உள்ளது. மீதமுள்ள 8 விழுக்காடு திண்மப் பொருட்கள் உள்ளன. பிளாஸ்மா இளமஞ்சள் நிறமுடைய நீர்மமாகும்.

பிளாஸ்மாவில் உள்ள திண்மப் பொருட்களையும் இரு வகையாகப் பிரிப்பர். அவை கனிமப் பொருள், கரிமப் பொருள் என்பனவாகும். கனிமப் பொருட்களில் கால்சியம், மக்னீசியம், இரும்பு, தாமிரம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பேட்டுகள் ஆகும். கரிமப் பொருட்களில் புரதப் பொருட்கள் மாவுப் பொருட்கள், யூரியா, கொழுப்பு, அம்மோனியா ஆகியனவாகும்.

பிளாஸ்மாவில் உள்ள புரதப் பொருட்கள் பல்வேறு விதமான பணிகளை ஆற்றுகின்றன. இதில் உள்ள ஃப்ரினோஜன் எனும் பொருள் இரத்தம் உறைய உறுதுணை புரிகிறது. அத்தோடு இரத்த அழுத்தம் சீரான நிலையில் அமையவும் உதவுகிறது. மற்றொரு புரதப் பொருளான காமாகுளோபுலின் உடலில் நோய் எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. மற்றும் பிளாஸ்மா புரதங்கள் புரதச்சத்துக்களைச் சேமித்துப் பாதுகாக்கும் சேமிப்புக் களங்களாகவும் விளங்குகின்றன. இரும்பு, தாமிரம், ஹார்மோன் போன்றவைகளைத் திசுக்களுக்கு எடுத்துச் செல்லவும் புரதங்கள் பயன்படுகின்றன.

மொத்தத்தில் பிளாஸ்மாவானது ஆறுமூலம் போக்குவரத்து நடப்பதுபோல் உடலில் சீரணமான உணவுப் பொருட்களை திசுக்களுக்கு கொண்டு செல்லவும் திசுக்களிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருட்களை சிறு நீரகத்கத்துக்குக் கொண்டு சேர்க்கவும் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவே பெரிதும் உதவுகின்றன நாம் உட்கொள்ளும் நோய் தீர்க்கும் மருந்துகளை நோய்ப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வதும் பிளாஸ்மாவேயாகும். உடலில் சுரக்கும் ஹார்மோன்களை உடலெங்கும் கொண்டு சென்று உடல் சீரான நிலையில் இயங்க உதவுகிறது. திசுக்கள் வெளிப்படுத்தும் கரியமில வாயுவை நுரையீரலுக்குக் கொண்டு செல்வதும் பிளாஸ்மாவே யாகும். பிளாஸ்மா தனக்கு வேண்டிய சத்துப் பொருட்களை நாம் உண்ணும் உணவிலிருந்தே பெறுகின்றன.