இளையர் அறிவியல் களஞ்சியம்/மயக்க மருந்து

மயக்க மருந்து : மருத்துவத் துறையில் மயக்க மருந்து ஒரு இன்றியமையாப் பங்கை வகிக்கிறது. குறிப்பாக, அறுவை மருத்துவத்தின்போது பெரும்பாலும் மயக்க மருந்து கொடுத்தே அறுவை சிகிச்சை செய்கின்றனர். ‘அனஸ்தெட்டிக்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இம்மயக்க மருந்து வாயுவாகவோ திரவப் பொருளாக ஊசி மூலம் செலுத்தியோ மருத்துவம் செய்கின்றனர். மருத்துவத் துறையில் மயக்க மருந்து கண்டுபிடிப்பு ஒரு மாபெரும் சாதனையாகும்.

பெரும் அளவிலான அறுவை மருத்துவம் நீண்ட நேரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்போது உடல் முழுமையும் உணர்ச்சி இழக்கச் செய்யும் வகையில் மயக்கமுறச் செய்து அறுவை சிகிச்சை செய்வர். சிலசமயம் இடுப்புக்குக் கீழாக அறுவை சிகிச்சை செய்ய இடுப்பில் தண்டுவடப் பகுதியில் ஊசி மூலம் மயக்க மருந்தைச் செலுத்தி மரத்துப் போகச் செய்வர். சிலசமயம் உடல் உறுப்புகளில் சிறு சிறு அறுவை சிகிச்சை செய்ய, அந்தந்த உறுப்புப் பகுதிகளில் மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தினால் போதும், சான்றாக, பல் அல்லது விரல்களில் அறுவை செய்ய அப்பகுதியில் மட்டும் மயக்க மருந்தைச் செலுத்தி, உணர்ச்சியைப் போக்கி அறுவை சிகிச்சை செய்வர். இம்முறையில் சில மணித்துளிகள் மட்டுமே மரத்துப் போகச் செய்யமுடியும்.

மயக்கமூட்டவும் மரத்துப் போகச் செய்யவும் பலவித வாயு, திரவ மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் குளோரோபாரம், ஈதர், கொக்கெயின், நைட்ரஸ் ஆக்சைட் ஆகியன முக்கிய மயக்க (குளோரோபாரம்) மருந்துகளாகும்.

குளோரபாரம் மருந்தை சர். ஜேம்ஸ் சிம்ப்சன் என்ற ஆங்கிலேயர் 1847ஆம் ஆண்டில் கண்டுபிடித்தபோதிலும் அதைப் பயன்படுத்த மக்களிடையே பெரும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஒரு சமயம் விக்டோரியா மகராணிக்கு மயக்க மருந்து தந்து சிகிச்சை செய்ய வேண்டிய அவசர அவசியத் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாக 1858இல் அவருக்குக் குளோரபாரம் கொடுத்தனர். எவ்விதத் தீங்குமின்றி மருத்துவம் வெற்றியளித்தது. அதன் பிறகே மற்றவர்களும் அம்மயக்க மருந்தைத் தயக்கமின்றிப் பயன்படுத்தலாயினர்.

மயக்க மருந்து கண்டுபிடிப்புக்கு பிறகே மருத்துவத் துறையில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டதென்றே கூற வேண்டும்.