இளையர் அறிவியல் களஞ்சியம்/மயிர்

மயிர் (Hair) : மனிதர்களுக்கு அழகூட்டுவனவுள் தலை மயிரும் ஒன்றாகும். அம்மயிர் மரபுரிமையாக வரும் ஒன்றாகும். ஆயினும் அவற்றில் பல வகைகள் உண்டு. சில சுருள் முடியாக இருக்கும். சில நீளமாகவும் சில குட்டையாகவும் இருக்கும். சில செம்பட்டை வண்ணத்தோடும் சில கருநிறமாகவும் இருக்கும். இவ்வாறு வடிவிலும் வண்ணத்திலும் வேறுபட்டிருக்கும் மயிரின் தன்மையைக் கொண்டு, அம்மயிரையுடையவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுகொள்ளலாம். மயிரை 'இன முத்திரை’ என்று கூறுவர்.

மயிரின் அமைப்பை வைத்து அதனை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிப்பர். முதல் பிரிவு குட்டையாகவும் சற்று மொறு மொறுப்பாகவும் இருக்கும். இதன் வண்ணம் கறுப்பாகவும் மயிரின் வெட்டுத் தோற்றம் நீள் வட்டமாக (Elliptic) இருக்கும். இம் மயிரையுடையவர்கள் ஆஃப்ரிக்க கறுப்பர் இனமக்களாவர்.

இரண்டாவது வகை நேரானதாகவும், நீளமானதாகவும் மெலிந்ததாகவும் அதே சமயம் கரடுமுரடானதாகவும் இருக்கும், இம் மயிரின் வெட்டுத் தோற்றம் வட்டமாக இருக்கும். இதன் வண்ணம் கருப்பாகும். இம் மயிரையுடைய மக்கள் சீன, மங்கோலிய, அமெரிக்கச் செவ்விந்திய இனங்களைச் சார்ந்தவர்களாவர்.

மூன்றாவது வகை அலை அலையாகவும் சுருண்டதாகவும் பட்டுப்போல் மெதுவானதாகவும் இருக்கும். இம்மயிரின் வெட்டுத் தோற்றம் முட்டை வடிவின (Oval) வாகும். இஃது ஐரோப்பிய இன மக்களுக்குரியதாகும். இம் மயிர் பார்ப்பதற்கு அழகாகவும் கருப்பு, பழுப்பு, சிவப்பு எனப் பல வண்ணங்களை யுடையதாகும்.

நான்காவது மயிர் வகையும் கூட உண்டு. ஒருவகை சுருட்டை முடியாகும். இத்தகைய முடி ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்கு உண்டு.