இளையர் அறிவியல் களஞ்சியம்/மிதவை உயிரினங்கள்

மிதவை உயிரினங்கள் : நீரின் மேற்பரப்பில் மிதந்தபடி அலைந்து வாழும் உயிரினங்கள் 'மிதவை உயிரினங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. நீர் வாழ் உயிரினங்களில் மிக அதிக அளவில் மிதவை உயிரினங்களே உள்ளன என உயிரியல் அறிஞர்கள் கூறுகின்றனர். மிதவை உயிர்கள் கடல் நீர், உவர் நீர், நன்னீர் ஆகிய எல்லா நீர் நிலைகளிலும் வாழ்கின்றன.

மிதவை உயிரினங்கள் இருவகையினவாக உள்ளன. முதலாவது நீர் மட்டத் தாவர உயிரினங்கள். இம்மிதவைத் தாவரங்கள் நீர் மட்டத்திற்குச் சற்று கீழாக வேர் பரப்பியும் மற்ற பகுதிகள் நீருக்கு மேலிருக்குமாறும் அமைந்து வாழ்கின்றன. அதற்கு ஏற்றவாறு அவற்றின் அமைப்புகள் உள்ளன. இம் மிதவைத் தாவரங்கள் பெரும்பாலும் பச்சை நிறமுடையனவாகவே உள்ளன. இவை நீரில் கரைந்துள்ள உப்புக்களையும் கரியமிலவாயுவையும் ஈர்த்து உண்டு வாழ்கின்றன. நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பகுதி சூரியக்கதிர்களின் துணைகொண்டு அவற்றிற்கு வேண்டிய உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. இவை கண்ணுக்குத் தெரி-யும் தாவர மிதவை உயிர்களாகும்.

கண்ணுக்குப் புலனாகாத, நுண்பெருக்காடி மூலம் காணக்கூடிய மிதவைத் தாவரங்களே

மிதவை உயிரினங்கள்

மிக அதிகமாக உள்ளன. இவற்றில் ஓரணுத் தாவரங்களான ஆல்காக்கள் எனும் பாசியினங்களே மிக அதிகமாகும்.

தாவர வகைகளைப் போன்றே நீரில் மிதந்து வாழும் பிராணி இனங்களும் பல உண்டு. இவற்றிலும் ஓரணு உயிரினங்கள் உண்டு. மற்றும் கடல் புழுக்கள், மீன்பேன், சாமந்தி, நீர்த்தெள்ளு, ஜெல்லிமீன், ஈர்க்கு இறால், நண்டு, இறால் மற்றும் மெல்லுடலையுடைய மீன்கள், கடல் வெள்ளரி போன்றவை மிதவைப் பிராணிகளாகும். இவை நீர்ப்பரப்பின் மீது சுற்றித் திரிந்து வாழ்கின்றன. மீன் முட்டைகளும் அவற்றின் ஆரம்ப நிலை லார்வா குஞ்சுகளும் கூட மிதவை உயிர்களேயாகும். இவற்றிற்கு ஓரணுத் தாவர வகைகளும் புழுக்களும் உணவாயமைகின்றன.

மிதவைத் தாவரங்களை மிதவைப் பிராணிகள் உண்டு வாழ்கின்றன. அதே போன்று மிதவைப் பிராணிகளைப் பெரிய மீன்கள் தின்று வளர்கின்றன. இவற்றை மனிதர்கள் பிடித்து உணவாகக் கொள்கின்றனர். இவ்வாறு உணவுப் பொருட்களுக்கு மிதவை உயிர்கள் அடிப்படையாக அமைகின்றன எனலாம்.