இளையர் அறிவியல் களஞ்சியம்/யுரேனியம்
யுரேனியம் : மற்ற உலோகங்களைவிட மிக முக்கியத்துவமுடைய உலோகமாகக் கருதப்படுவது யுரேனியமாகும். இவ்வுலோகத்தை முதன்முதலில் 1789ஆம் ஆண்டில் கண்டறிந்தவர் கிளாப்ரோத் எனும் ஜெர்மானிய அறிவியலறிஞர் ஆவார். இவர் யுரேனியத்தின் தன்மைகளை முழுமையாக அறிந்திருக்கவில்லை. யுரேனியம் கதிர்வீச்சுப் பண்புடைய உலோகம் என்பதை ஆய்வுபூர்வமாக 1896இல் உலகுக்கு கண்டறிந்து கூறியவர் பெக்கரல் எனும் ஃபிரெஞ்சு விஞ்ஞானியாவார். யுரேனியத்திலிருந்து வெளிப்படும் ரேடியக் கதிர்கள் மிக முக்கியத்துவமுடையதாகும். அணுசக்திக்கு யுரேனியம் இன்றியமையாப் பொருளாகும்.
யுரேனியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. மற்ற உலோகங்களோடு கலந்தே கிடைக்கிறது. எனவே, இதை மற்ற உலோகங்களிலிருந்து தனியே பிரித்தெடுத்துப் பயன்படுத்துகிறார்கள். யுரேனியம் பல்வேறு கனிமங்களோடு கலந்துள்ள போதிலும் கருநிறக் கனிமமான பிட்ச்பிளெண்டு எனும் கனிமத்திலிருந்தே அதிக அளவு பிரித்தெடுக்கப்படுகிறது. பிளெண்டு கனிமத்தில் யுரேனியம் மட்டுமல்லாது இரும்பு. காரீயம், செம்பு, வெள்ளி, கந்தகம் முதலியனவும் கலந்துள்ளன. யுரேனிய தாதுக்கள் அமெரிக்கா, கனடா, தென்னாஃப்ரிக்கா, காங்கோ, செக்கோஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் பீகார் மாநிலத்திலும் கர்நாடகம், ஆந்திரம், கேரள மாநிலங்களிலும் கிடைக்கிறது.
பிரித்தெடுக்கப்பட்ட யுரேனியம் வெள்ளியைப் போன்று பளபளப்புடன் தோன்றும் . கனமான இவ்வுலோகத்தை கம்பியாகவும் தகடாகவும் செய்ய முடியும். இதன் உருகு நிலை 1850 ஆகும். யுரேனியத்திலிருந்து அணுசக்தி வெளிப்படுவதால் இஃது மிக முக்கியத்துவமுடைய உலோகமாகக் கருதப் படுகிறது.
நிறை எண் 285 உடைய யுரேனியம் ஐஸோடோப் அணுக்கரு பிளப்பு வினையில் பயன் படுத்தும் உலோகம் ஆகும். பீங்கான் பாத்திரங்களுக்கு நிறமூட்டுவதற்கு அம்மோனியம் யுரேனேட் எனும் சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.