இளையர் அறிவியல் களஞ்சியம்/யூக்ளிடு
யூக்ளிடு : வடிவ கணிதத் தந்தை’ எனப் போற்றப்படும் யூக்ளிடு கிரேக்க நாட்டுக் கணிதவியல் மேதையாவார். இவர் கி.மு. 800ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் உள்ள அலெக்சாண்டிரியா நகரில் கணித ஆசிரியராகப் பணியாற்றினார் என்ற குறிப்பைத் தவிர வேறு வாழ்க்கை விவரங்கள் ஏதும் தெரியவில்லை.
யூக்ளிடு கணிதம் சம்பந்தமாக எழுதிய பல நூல்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு மேலாகக் கணிதப் பாட நூல்களாக பயன்பட்டு வந்துள்ளன. இவரது கணித நூல்கள் இன்றும் கணிதவியல் அறிஞர்களால் போற்றப்படுகின்றன.
இவர் எழுதிய கணிதவியல் நூல்களுள் மிகச் சிறந்ததாகப் பாராட்டப்படுவது ‘அடிப்படைக் கோட்பாடுகள்’ (Elements) எனும் நூலாகும். கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இந்நூல் அரபு, லத்தீன் மொழி பெயர்ப்புகள் மூலம் உலக மொழிகள் பலவற்றில் பெயர்க்கப்படலாயின. இந்நூல் வடிவ கணிதத்தின் தோற்றத்தையும் எண்கள் பற்றிய கொள்கைகளையும் சிறப்பாக விளக்குகிறது.
ஐரோப்பாவில் அறிவியல் துரித வளர்ச்சிபெற அடிப்படைத் தூண்டுகோலாக அமைந்ததில் யூக்ளிடின் கணிதவியல் கோட்பாடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.