இளையர் அறிவியல் களஞ்சியம்/வண்ணம்
வண்ணம் : ஆங்கிலத்தில் கலர் (Colour) என்று கூறப்படும் வண்ணங்கள் பார்க்கும் பொருட்களுக்கு அழகூட்டுகின்றன. மலர்களும் வானவில்லும் இயற்கை அழகுடன் விளங்குவதற்கு வண்ணங்களே காரணமாகும்.
புகழ்பெற்ற இயற்பியல் அறிவியலறிஞர் ஐசக் நியூட்டன் சூரிய ஒளியை கண்ணாடிப் பட்டகத்தின் (Prism) மூலம் பாய்ச்சினார். அதன் மறுபுறம் ஏழு வண்ணங்களாக வெளிப்பட்டன. இதிலிருந்து சூரிய ஒளி வெண்மையாகத் தோன்றினும் அதற்கு ஏழு வண்ணங்கள் உண்டு என்று நிறுவினார். இந்த ஏழு வண்ணங்களும் ஒளிக்கதிர் வண்ணப்பட்டை அல்லது நிறமாலை என்று அழைக்கப்படுகிறது. சூரியக் கதிர் நீர்த்திவலையுனுட் புகுவதால் வானில் உருவாகும் வானவில்லும் இதே ஏழு வண்ணங்களே இடம் பெறுகின்றன. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கரு நீலம், ஊதா என்பனவே அந்த ஏழு வண்ணங்கள்.
சாதாரண கண்களைக் கொண்டு காணும் போது நிறமாலையில் ஏழு வண்ணங்கள் காணப்பட்டாலும் நுணகருவிகளைக் கொண்டு காணும்போது நூற்றுக்கு மேற்பட்ட வண்ணக் கலவைகள் அதில் அடங்கியிருப்பதை அறியலாம். ஆனால், வெண் ஒளி மூன்று அடிப்படை (White light) வண்ணங்களை மட்டுமே கொண்டுள்ளன. அடிப்படை வண்ணங்களாவன சிவப்பு, பச்சை, ஊதா ஆகியவைகளாகும். இம் மூன்று வண்ணங்களும் வேறு எந்த வண்ணங்களின் கூட்டுக் கலவை அல்ல. அதனாலேயே இவ்வண்ணங்கள் அடிப்படை வண்ணங்கள் என்ற பெயரைப் பெற்றுள்ளன.
நிறமாலையில் அடிப்படை வண்ணங்களோடு மூன்று வண்ணக்கலவைகளையும் வெறும் கண்களால் காணலாம். இவை இரண்டாந்தர வண்ணங்கள் என்று அழைக்கப்படலாம். அவையாவன, பச்சை, நீலம், மஞ்சள், ஒளிர் சிவப்பு (Wibeyor) ஆகும். மற்ற வண்ணங்களைக் கலப்பதன் மூலம் இரண்டாம்தர வண்ணங்களைப் பெற முடியும்.
வண்ணங்கள் அலை நீளமுடையவையாதலால் மனிதக் கண்கள் கூருணர்ச்சியுடையனவாக உள்ளன. ஒளி அல்லது வண்ண அலை நீளம் மிகக் குறைவானதாகும்.
அடிப்படை வண்ணங்களை குறிப்பிட்ட அளவுகளில் கலப்பதன்மூலம் வெவ்வேறு புதிய வண்ணங்களைப் பெறவியலும். அடிப்படை வண்ணம் மூன்றையும் ஒன்றாகக் கலக்கும்போது கறுப்பு வண்ணம் உருவாகும். நிறங்களைப் பிரித்தறியும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. சிலருக்கு வண்ணங்கள் எதையுமே அறிய இயலாது. அத்தகையக் குறையை வண்ணக் குருடு (Colour blindness) என்று கூறுவர்.
குறிப்பாக ஒரு பொருள் பச்சை வண்ணத்தை உறிஞ்சினால், அது பிங்க் நிறத்தை சிதறடிக்கும். எனவே பொருளின் நிறம் பிங்க் நிறமாகும்.
பொதுவாக கட்புலன் வரையறையில் உறிஞ்சப்பட்டு, சிதறும் ஒளிக்கதிர்களே வண்ணங்களாகும். நம் மனிதக் கண்களுக்கு தெரியும் வண்ணங்கள் பிற மிருகங்களின் பூச்சிகளின் கண்களுக்குத் தெரியாது. ஏனெனில் அவைகளின் கண்கள் கட்புலன் (Visible region) வரையறைக்கு முன் உள்ள (அல்லது) பின் உள்ள ஒளிக்கதிரை உறிஞ்சும் பண்புள்ள வையாகும்.