இளையர் அறிவியல் களஞ்சியம்/வனேடியம்
வனேடியம் : இது ஒருவகை உலோகமாகும். கடினத்தன்மை மிக்க இஃது வெள்ளிய நிறமுடையதாகும். 1880இல் என். ஜி. செப்ட்ஸ்ராம் என்பார் ஸ்வீடன் நாட்டு கனிமங்களை ஆராய்ந்தபொழுது இவ்வுலோகத்தை கண்டறிந்தார். ஸ்காண்டினேவியன் கடவுளாகிய 'வனாடிஸ்’ பெயரினை இந்த உலோகத்திற்கு வைத்தார். இந்த உலோகம் கணக்கற்ற இணைத் திறன்களைக் கொண்டுள்ளதால், அநேக சேர்மங்களைத் தருகின்றது. புகைப்படத் தொழிலில் பயன்படும் வேதிப் பொருட்கள், மருந்துகள் தயாரிக்கவும், வண்ணப் பொருட்கள் உலரும் வேதிப் பொருட்களாகவும் பயன்படுகிறது. சல்ஃபூயூரிக் அமிலம் தயாரிக்கும் முறையில் இதன் ஆக்சைடு வனேடியம் பென்டாக்சைடு வினைவேக் மாற்றியாகப் பயன்படுகிறது.
40% வனேடியம் கலந்த எஃகுக் கலவை மிகுந்த கெட்டியுடையதாகும். வார்ப்படம் செய்யவும் கருவிகளை உருவாக்கவும் இத்தகைய உலோகக் கலவையே ஏற்புடையதாகும்.
வனேடியம் காற்றுப் பட்டால் ஆக்சிகரணம் அடையும். தீப்பற்றி எரியும்போது பன்டாக்சைடு வெளிப்படுகிறது. இது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரையாது. ஆனால், ஹைட்ரோ புளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம் போன்ற அமிலங்களில் மெதுவாகக் கரையும் தன்மை கொண்டது.
வனேடியம் உலோகத்தை அலுமினியம், செம்பு உலோகங்களுடன் கலந்து பெறப்படும். கலவை உலோகம், வார்ப்புத் தொழிலில் பெரிதும் பயன்படுகிறது. வனேடியத்தை அம்மோனியாவுடன் கலப்பதன்மூலம் பெறப்படும் கூட்டுப்பொருள் அனிலீன் எனப்படும் கருநிறமுடைய கூட்டுப் பொருளைக் கொண்டு சாயமும் வனேடிய மையும் தயாரிக்கப்படுகின்றன.