இளையர் அறிவியல் களஞ்சியம்/வானவியல்

வானவியல் : ஆங்கிலத்தில் 'அஸ்ட்ரானமி’ என அழைக்கிப்படும் வானவியல், வானில் உள்ள கதிரவன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் உட்பட அனைத்தையும் பற்றிய 'ஆய்வியல்' ஆகும்.

மனிதன் என்றைக்கு ஆய்வு நோக்கோடு வானை அளக்கத் தொடங்கினானோ அன்று முதலே வான்வியலும் கால்கொண்டுவிட்ட தெனலாம். இத்துறையில் பண்டைக் காலம் முதலே கிரேக்கம், பாபிலோனியா, எகிப்து, சீனம், இந்தியா போன்ற நாடுகளைச் சேர்ந்த வானவியல் அறிஞர்கள் தலைசிறந்து விளங்கியவர்களாவர். இவர்களுள் மிக முக்கியமான வராகக் கருதப்படுபவர் கிரேக்க நாட்டைச் சேர்ந்த வானவியல் அறிஞர் ஹிப்பார்க்கஸ் ஆவார். இவர் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் வானில் மின்னும் 890 நட்சத்திரங்களை இனங்கண்டு. அவற்றிற்குப் பெயரிட்டு, பட்டியல் தயாரித்தவர். இவரே வானவியலின் முன்னோடியாவார். கிரேக்க நாட்டின் மற்றொரு வானவியல் அறிஞர் தாலமி என்பவராவார்.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் நிலவுலகை மையமாகக் கொண்டே பிரபஞ்சம் இயங்குகிறது என்றும் கதிரவனும் நிலவும் பூமியைச் சுற்றியே வருகிறது என்றும் கூறினார். பதினொராம் நூற்றாண்டில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டாம் ஆரியபட்டர் எனும் வானியல் வல்லுநர் பூமியும் மற்ற கிரகங்களும் கதிரவனைச் சுற்றியே இயங்குகின்றன என்பதை ஆதாரபூர்வமாக நிறுவினார்.இவரது வானவியல் ஆராய்ச்சிகளை விளக்கும் நூல் 'மகா சித்தாந்தம்' என்பதாகும். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோப்பர் நிக்கஸ் எனும் வானவியலறிஞர் ஆதாரபூர்வமாக பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனை மையமாகக் கொண்டே இயங்கி வருகின்றன என்பதை ஆய்வு பூர்வமாகத் தெளிவாக்கினார். இக்கருத்து கிருத்துவக் கோட்பாட்டுக்கு மாறாக இருந்ததால் அச்சமயத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாக நேர்ந்தது. ஆனால், காலிலியோ எனும் வானவியல் வல்லுநர் தொலைநோக்கிக் கருவியின் துணைகொண்டு கோப்பர்நிக்கசின் வானவியல் கண்டுபிடிப்புகளை நிலை நிறுத்தினார். அத்துடன், தொலைநோக்காடியின் துணைகொண்டு கதிரவனில் காணும் கரும்புள்ளியையும் நிலவில் காணும் மலைகளையும் கண்டறிந்து கூறினார். இவரது கண்டுபிடிப்புகளே வானவியல் வளர்ச்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டின எனலாம். அவருக்குப் பின் வந்த மாபெரும் வானவியல் வல்லுநர் கெப்ளர் ஆவார். இவரே சூரியனை பூமி மற்றும் பிற கிரகங்ககளும் எவ்வாறு சுற்றி வருகின்றன என்று கண்டறிந்து கூறியவர். இன்றும் அவரது கண்டுபிடிப்பு 'கெப்ளரின் விதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. அவருக்குப் பின்வந்த நியூட்டன் கிரகங்களுக்கிடையிலான விசையாற்றல் பற்றிய உண்மைகளைக் கண்டறிந்து கூறினார். சூரிய மண்டல அமைப்பையும் சூரியனைச் சுற்றி பூமியும் சந்திரனும் பிற கிரகங்களும் சுழல்வதையும் ஆய்வு பூர்வமாகக் கண்டறிந்து நிறுவினார். வானில் வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்கள், ஆகாய கங்கை போன்ற பல்வேறு வானியல் உண்மைகளையும் நுட்பமாகக் கண்டறிந்து கூறினார்.

வானியல் ஆய்வுகளே விண்வெளி ஆய்வுக்குக் கதவு திறந்துவிட்டன எனலாம். கதிரவன், நட்சத்திரங்கள், நிலவு போன்ற மற்ற கோள்களின் தன்மைகளையும் அமைப்புகளையும் அவற்றிற்கிடையேயான இழு விசைகளையும் அறிந்து தொடர் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள இயன்றது. வானவியல் வளர்ச்சியின் விளைவாகவே நேரங்களைத் துல்லியமாகக் கணிக்கவும் முடிந்தது.