இளையர் அறிவியல் களஞ்சியம்/வானவில்
வானவில் : சற்று மழைத்துாறல் உள்ள காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ கதிரவனுக்கு எதிர்த்திசையில் வானில் ஏழு வண்ணங்களோடு வில்போல் வளைந்த வண்ணக் காட்சியைக் காணலாம். இதுவே 'வானவில்' என அழைக்கப்படுகிறது. சூரியக் கதிர் மழைத் துளியினூடே பாய்வதால் ஏழு வண்ணங்கள் எழுகின்றன.
சாதாரணமாக நாம் காணும் சூரியக் கதிர் வெண்மை நிறமுடையது போன்று தோற்றம் தருகிறது. ஆனால், உண்மையில் சூரியக் கதிர் வெண்மை நிறமுடையதன்று. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஊதா என ஏழு வண்ணங்கள் உள்ளடங்கிய கதிராகும்.
சூரியக் கதிரானது பட்டகத்தின் வழியே செல்லும்போது எதிர்த்திசையில் ஏழு வண்ணங்களைக் கொண்ட ஒளியாக நிறப்பிரிகை அடைகின்றது. ஏழு வண்ணமுடைய வானவில் தோன்ற மழைத் துளிகள் சூரியக் கதிர் ஊடுருவும் பட்டகங்களாக அமைகின்றன. அதனாலேயே வானவில் சூரியனின் எதிர்த்திசையில் உருவாகித் தோற்றமளிக்கின்றது.
வானவில் தோன்றுவதற்கு மழைத் துளிகளும் சூரியக் கதிரும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டும். இவற்றில் ஒன்றிருந்து ஒன்றில்லா விட்டால் வானவில் தோன்ற வாய்ப்பே இல்லை. அவை இரண்டும் இருந்தபோதிலும் எல்லா நேரத்திலும் வானவில் தோன்றுவதில்லை. காலை அல்லது மாலை நேரங்களில் கதிரவன் 420 கோணத்தில் தாழ்வாக இருக்கும்போது மட்டுமே வானவில் தோன்ற இயலும். அப்போதுதான் ஒளி மழைத்துளியிலும் புகும். சூரியக் கதிரின் ஏழு வண்ணங்கள் கண் பார்வையில் படிய இயலும். மற்ற நேரங்களில் இஃது கண்பார்வைக்கு எட்டாத நிலை பெறுவதால் நம் கண்களுக்குத் தோற்றம் தருவதில்லை. வேகமாக விழும் நீர் அருவிகளின் அருகே காலை அல்லது மாலை வேளைகளில் இத்தகைய வானவில்களை அடிக்கடி காணலாம். இவை வில் வளைந்த வடிவில் காட்சி தரும்.
சில சமயம் சந்திர வொளியினால் வானவில் உருவாவதும் உண்டு. எனினும் இவை ஒளி குன்றியவைகளாகத் தோற்றமளிக்கும். காரணம், சூரிய ஒளியைவிட சந்திரனின் ஒளி மங்கித் தோன்றுவதேயாகும்.