இளையர் அறிவியல் களஞ்சியம்/வான ஆராய்ச்சி நிலையங்கள்
வான ஆராய்ச்சி நிலையங்கள் : விண்ணிலுள்ள சூரியன், சந்திரன் உட்பட உள்ள கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் இன்னும் வானவியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பற்றிய ஆராய்ச்சிக்கென நிறுவப்பட்ட நிலையங்கள் ‘வான ஆராய்ச்சி நிலையங்கள்' ஆகும். இவை பெரும்பாலும் உயரமான மலை உச்சிகளிலேயே அமைக்கப்படுகின்றன. காரணம், வானை நோக்கி அமைக்கப்படும் தொலை நோக்கிகள் மலை முகடுகளாலோ மேகங்களலோ தடுக்கப்படக்கூடாது என்பதற்கேயாம். மேலும், இவ்வுயரமான இடங்களில் உள்ள ஆய்வுக் கூடங்கள் வேறு விதமான ஒளியுமிழ் விளக்குகளாலோ தொழிற்
கூடங்களிலிருந்து வெளிப்படும் புகை, மற்றும் தூசுகளாலோ பாதிக்கப்படுவதில்லை என்பதும் காரணமாகும். வானத்தை மிகத் தெளிவாகக் காணும் இயற்கை சூழல் இவ்வான ஆராய்ச்சிக்கு இன்றியமையாததொன்றாகும்.
வான ஆராய்ச்சி நிலையங்களில் மிக முக்கியமாக இடம் பெறுவது தொலைநோக்காடி கருவியாகும். இதில் இடம் பெறும் லென்ஸ்கள் மிகப் பெரும் அளவைக் கொண்டதாகும். பாலெமார் எனுமிடத்தில் உள்ள ஹேல் ஆய்வுக்கூட தொலை நோக்காடியில் ஐந்து மீட்டர் விட்டமுள்ள லென்சும் ரஷ்யாவில் செவன் சுக்ஸ்காயாவிலுள்ள 6 மீட்டர்விட்டமுள்ளவை இவை உலகிலேயே இரண்டாவது, முதலாவது தொலைநோக்காடிகள் ஆகும். இவ்வளவு ஆற்றல்மிகு லென்சுகளால் கூட நட்சத்திரங்களைத் தெளிவாகக் காண முடிவதில்லை. எனவே, அவற்றுள் சக்திமிக்க தனிவகைக் காமிராக்களாகிய படப் பிடிப்புக் கருவிகளைப் பொருத்தி ஒளிப்படம் எடுத்து நட்சத்திரங்களைத் தெளிவாகக் கண்டு ஆய்வு செய்கின்றனர். தற்போது விண்வெளித் தொலை நோக்கிக் கருவி விண்ணிலிருந்தபடி வான ஆராய்ச்சி செய்து வருகிறது.
நம் நாட்டிலும் புகழ் பெற்ற ஆரய்ச்சிக் கூடங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் கொடைக்கானலில் அமைந்துள்ள வான ஆராய்ச்சி நிலையமும் மிகப் பழையதொன்றாகும்.அண்மையில் வடாற்காடு மாவட்டத்தில் காவலூர் எனுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ள வான ஆராய்ச்சி நிலை யம் 2.34 மீட்டர் விட்டமுள்ள லென்ஸ் பொருத்திய தொலைநோக்கிக் கருவியோடு அமைக்கப்பட்டுள்ளது. இது மற்றும் பல நவீன வசதிகளைக் கொண்ட ஆராய்ச்சி நிலையமாகும். மேலும், ஊட்டியில் டாடா அடிப்படை ஆய்வகம், ரேடியோ முறை தொலைநோக்கி (Radio Telescope) அமைத்து வியத்தகு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
வான ஆராய்ச்சி நிலையங்களை அமைக்கும் முயற்சி மேலை நாடுகளில் பதினேழாம் நூற்றாண்டில் தான் தொடங்கியது. எனினும், அதே நூற்றாண்டில் இந்தியாவின் பல பகுதிகளில், ஜெய்ப்பூர், டெல்லி, காசி போன்ற நகரங்களில் செய்யப்பட்டது. மன்னர் ஜெய் சிங் என்பவரால் வானவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் உருவாக்கப்பட்டன. அவைகள் இன்றும்கூட அழியாச் சின்னங்களாக வான ஆராய்ச்சிக்குரியவைகளாகக் காட்சி தருகின்றன.
இத்தகைய வான ஆராய்ச்சி நிலையங்கள் விண்ணில் மிதந்து கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களிலும் அமைந்து வருகின்றன.